தைப் பொங்கலும் நவகிரக தோஷம் நீங்குவதும்!



இதுவரை வெளிச்சத்துக்கு வராத தைப் பொங்கல் ரகசியங்கள்

தை பிறந்தால் வழிபிறக்கும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையில் முதல் நாள் போகி. இதில் பழையன என்று சொல்லப்படும் தீதும் தீய எண்ணங்களையும் கொண்டு மனிதன் இருக்கிறான் என்பதை இது உணர்த்துகிறது. எனவே இரண்டாம் நாள், பால் பொங்குவது போல அவனது மனதில் நல்ல எண்ணங்கள் பொங்க வேண்டும் என்று காட்ட பொங்கலிட்டு உலகிற்கே ஒளி தரும் ஆதவனை வணங்றிகிறான். 

அதற்குப் பிறகு ஊருக்காக உழைத்து இளைக்கும் பசுவையும், காளையையும் வணங்கி, அதைப்போல பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று காட்டுகிறான். 
இதற்கடுத்த நாள், வயதில் மூத்தவர்களைக் கண்டு, அவரைப்போல தானும், ஒரு நல்ல, தார்மீகமான வாழ்வு வாழவேண்டும் என்று புரிந்து கொள்கிறான். இப்படி தமிழர் திருநாளான பொங்கலின் பின்னே பல தத்துவங்கள் மறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றின் பின்னும் ஒரு மகத்துவம் பொதிந்துள்ளது.

அப்படி இருக்க, தமிழர் திருநாளான தைப்பொங்கலில் தமிழர்கள் ஏன் பொங்கலிட்டு வணங்குகிறார்கள்... என்று கேட்டால் அதன் பின்னேயும் ஒரு ஆழ்ந்த தத்துவம் இருக்கத்தான் செய்கிறது. 
‘ஸ்ரீமத் பகவத் கீதை’யின் பதினேழாவது அத்தியாயத்தில் அற்புதமாக கிருஷ்ண பரமாத்மா பின்வருமாறு சொல்கிறார். சாத்வீகமான உணவு உண்டால்... அதாவது நல்ல உணவு உண்டால், மனிதனின் மனம் தூய்மையாகிறது, ஆயுள் அதிகரிக்கிறது, நோய்கள் வராமல் இருக்கிறது, பக்தி அதிகரிக்கிறது என்று சொல்கிறார்.

இதற்கு காரணமில்லாமல் இல்லை. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவுப்பொருளையும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. நாம் உண்ணும் உணவில் அதிகமாக பாவ கிரகங்களின் ஆளுமை இருந்தால், நமது பாவ எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் மனிதன் பாவங்கள் செய்கிறான். அதே சமயம் புண்ணிய கிரகங்கள் ஆட்சி செய்யும் உணவுகளை உண்டால் மனிதனுக்கு நல்ல எண்ணங்கள் அதிகரிக்கும். அது அவனை நல்ல செயல்களை செய்யத் தூண்டும்.

அந்த வகையில் பார்க்கும் போது, தமிழர்கள் தங்களது விளை நிலங்களில் இருந்து விளைந்த புத்தரிசியை கொண்டு முதன் முதலில் பொங்கலிட்டு வணங்குகிறார்கள். 
பொங்கலில் முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருள் அரிசி. இந்த அரிசி - அதாவது நெல்லுக்கு உரிய கிரகம் சந்திரன்.

நவகிரகங்களில் சந்திரன், மனதை ஆள்பவன். மனிதன் மனதில் நல்ல எண்ணங்கங்கள், தைரியம், தன்னம்பிக்கை, மன நிம்மதி போன்றவை சந்திரன் அருளால் ஏற்படுகிறது.அதே சமயம் மனக்கலக்கம், தைரியமின்மை, நம்பிக்கையின்மை போன்றவை சந்திர தோஷத்தால் வருவது. 

இப்படி சந்திரனின் ஆளுமை மிகுந்த அரிசியைக் கொண்டு பொங்கலிட்டு வணங்கும் பொது, சந்திரன் அருளால் ஏற்கனவே மன நிம்மதியும் தைரியமும் இருப்பவர்களுக்கு அது மேலும் அதிகரிக்கிறது. 

அது இல்லாதவர்களுக்கு சந்திரன் அருளால் அது கிடைக்கிறது.அதேபோல பொங்கலில் பயன்படுத்தப்படும் பாசிப்பருப்பு அல்லது பச்சைப்பயறு, புதனுடைய தானியமாக விளங்குகிறது. இதை தை முதல்நாளில் பொங்கலிட்டு வணங்கும் போது, புதன் அருளால் கல்வி கேள்விகளிலும் கலைகளிலும் சிறந்து விளங்க வழிபிறக்கிறது.

பொங்கலில் பயன்படுத்தப்படும் நெய்யும் வெல்லமும், சுக்கிரனின் அம்சமாகக் கருதப்படுகிறது. தைத்திருநாளில் பொங்கலில் நெய்யிட்டு, இறைவனுக்கு படைத்து வணங்கும் போது, நமக்கு பலவிதமான இன்பங்கள் ஏற்படுகிறது.பொங்கலில் பயன்படுத்தப்படும் பால் மிகவும் சக்தி வாய்ந்தது. நமது பெரியவர்கள், ஒரு நல்ல மனிதரை சொல்லும் போது, பால் போன்ற மனசுக்காரர் என்றே சொல்கிறார்கள். தேன் போன்ற மனதுக்காரர் என்று சொல்வதில்லை. இத்தனைக்கும் இரண்டும் இனிப்பான பண்டங்கள்தான். 

ஆக ஓர் உயர்ந்த மனிதரை பால் போன்ற மனசுக்காரர் என்று சொல்வது அதன் சுவையை பொறுத்தில்லை. அதன் குணத்தை கருத்தில் கொண்டு என்று புரிகிறது.பால் என்பது தன்னைச் சேர்ந்தவர்களை காட்டிக் கொடுக்காது. 

அதாவது பாலில் எத்தனை தண்ணீரை சேர்த்தாலும், பால் தண்ணீரை காட்டிக் கொடுக்காது. அதைப்போலவே நல்லவர்களை அடைந்தவர்களும், அவர்களுடைய அறிவுரையாலும், நடத்தையாலும், நல்லவர்களாகி விடுகிறார்கள். இப்படி நல்லவர்களோடு சேர்ந்து நல்லவனாக வேண்டும் என்பதை உணர்த்தவே பாலைப் பயன் படுத்துகிறோம்.

இப்படி தைத்திருநாளில், பொங்கல் செய்து உலகையே தனது ஒளியால் வாழ வைக்கும் கதிரவனை வணங்கும்போது, பல நன்மைகள் நடக்கிறது. அதாவது இனிமேல் வரும் நாட்களில் மன நிம்மதியோடு, கல்வியிலும் கலையிலும் சிறந்து விளங்கி, அனைத்து விதமான சந்தோஷங்களும் அடைய வேண்டும் என்பதே பொங்கலிட்டு கதிரவனை வணங்கும் நோக்கம்.யோக சாஸ்திரத்தின்படி பார்க்கும் போது, வெண் பொங்கல் மூலாதாரம் என்ற யோக சக்கரத்தின் உணவாக சொல்லப்படுகிறது. இந்தச் சக்கரம், சூட்சும வடிவில் நமது முதுகுத்தண்டின் கீழே இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த மூலாதாரம், மனிதனின் உடலில் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தின் தத்துவமாக இருக்கிறது. மனிதனின் உடலில் எலும்பை குறிப்பதாக இருக்கிறது.அதேபோல, சர்க்கரைப்பொங்கல், மணிப்பூரக சக்கரத்தின் உணவாக சொல்லப்படுகிறது. இது நீரின் தத்துவத்தை குறிக்கும். மனிதனின் உடலில் இருக்கும் அதி சூட்சுமமான யோக சக்கரம். இந்த சக்கரமே மனிதனின் உடலில் இருக்கும் மாமிசத்தை கட்டுப்படுத்துகிறது.

மனிதனின் உடலில் எலும்பையும், மாமிசத்தையும் குறிக்கும் உணவை ஒரே நாளில் நாம் இறைவனுக்கு படைத்து வழிபடுவதால், உடலில் இருக்கும் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் பிறக்கிறது. 

நீரைக் குறிக்கும் யோக சக்கரத்தின் உணவையும் நிலத்தை குறிக்கும் யோக சக்கரத்தின் உணவையும் இறைவனுக்கு படைப்பதிலும் ஒரு சூட்சுமம் இருக்கவே செய்கிறது. 

விவசாயம் செய்ய முக்கியமாக நிலமும் நீரும் தேவை. இந்த நிலத்தையும் நீரையும் குறிக்கும் பொருளை ஆதவனுக்கு படைத்து வழிபடும்போது, இனி வரும் காலங்களில் மழை நன்றாக பொழிந்து நிலம் நன்றாக விளைய வேண்டும் என்ற பிரார்த்தனையையும் தமிழன் வெகு சூசகமாக இறைவனிடம் வைக்கிறான்.

இப்படி தமிழன் கொண்டாடிய பொங்கல், அந்த இறைவனின் அருளால், அவனது மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றவும், அறிவாற்றல் அதிகரிக்கவும், அவனது வாழ்வின் தரம் உயரவும், விளைச்சல் அதிகரிக்கவும் காரணம் அவன் செய்த ஓர் உன்னத வழிபாடாக இருக்கிறது.நாமும் நமது முன்னோர்கள் வழி நின்று, தைப்பொங்கலை கொண்டாடி, ஆதவன் அருளால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

ஜி.மகேஷ்