100 வயது மனுஷியின் கதை தன்னந்தனி காட்டுக்குள்ளே...
‘‘இது எங் காடு..!’’
கண்களில் பிரகாசம் மின்ன பேசிய நூறு வயதைக் கடந்த குட்டியம்மாளின் குரலில் இருந்த உற்சாகம் அந்தக் காடு அவரது வாழ்வில் எந்தளவு பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வெளிக்காட்டியது.இஞ்சிக்குழி - இது ஏதோ ஒரு பலகாரத்தின் பெயரல்ல. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள பொதிகை மலையின் அடர்ந்த சோலைக்காட்டுக்குள் ஒளிந்து கிடக்கும் ஒரு சிறிய காணி குடியிருப்பு. மொத்தமாய் இப்போது 3 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ள இங்கு, ஒரு மண் வீட்டில் தன்னந்தனியாய் வசிக்கிறார் நூறு வயதைக் கடந்த குட்டியம்மாள் காணி.நெல்லை மாவட்டம் பாபநாசம் கோயிலிலிருந்து 16 கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் பயணித்தால் பிரிட்டீஷாரால் 1942ல் கட்டப்பட்ட காரையாறு அணைப்பகுதியை அடையலாம்.  ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 263 ஏக்கர் பரப்பளவில் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு குறைவில்லாமல் ஒரு பாம்பு போல் நீண்டுள்ள அணைப்பகுதி அடர்ந்த காடுகளுக்குள் பரவிக் கிடக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, காரையாறு, பாம்பாறு, உள்ளாறு, சேர்வலாறு மற்றும் ஏராளமான சிற்றாறுகள் வற்றாமல் பாய்ந்தோடி வந்து இந்த அணையில் சேர்கின்றன. இவற்றில் பூங்குளத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி அடர்ந்த சோலைக்காடுகள் வழியாக பாய்ந்தோடி பாணதீர்த்தம் அருவி வழியாக நேரடியாக அணையில் கலக்கிறது. காரையார் அணையை சுற்றிச் செல்லும் ஒரு கரடு முரடான காட்டுப்பாதை வழியாக சுமார் 22 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றால் இஞ்சிக்குழியை அடையலாம்.
 சதுரகிரி, வெள்ளியங்கிரி பயணம் போல் இருக்காது இந்த பயணம். தலைக்கு மேல் சூரிய வெளிச்சமே காண முடியாதவாறு அடர்ந்து வளர்ந்திருக்கும் சோலைக்காடுகள் வழியாக, தரையெங்கும் நம்மை வரவேற்கும் அட்டைப்பூச்சிகளின் கடிகளைத் தாங்கிக்கொண்டு தட்டுத்தடுமாறிச் செல்லவேண்டும்.யானைகளின் தனி உலகமாக விளங்கும் இந்த காடு அகத்தியமலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டு வழியில் நாம் பாதை தவறி விடக்கூடாது என்பதால் ரேஞ்சர் கல்யாணி, பாரஸ்டர் பெத்துராஜ் அறிவுறுத்தலின்படி வழிகாட்ட கூட வந்தார்கள் வனக்காப்பாளர்கள் அசோக்குமார், வினு, வாட்ச்சர் சுடலைமணி செல்வம், சூழல் சுற்றுலா சுமன் மற்றும் அஜித்குமார்.
வழியில் ஈரத்தோடு காணப்பட்ட ஒரு மிருக எச்சத்தைக் காட்டி, ‘இது சிறுத்தையின் எச்சம்’ என்றார்கள் சர்வசாதாரணமாக! பல கிலோமீட்டர் தூரம் கடந்ததும் வருகிறது கட்டளை மலை எஸ்டேட். அங்கிருந்து துவங்குகிறது கன்னிகட்டி வனப்பகுதி. பகலிலேயே இருண்டு காணப்பட்டது அப்பகுதி. வழியில் உள்ளார் ஆறு குறுக்கிட்டது. அதில் தாமிரபரணியில் மட்டுமே வாழும் ஏராளமான வகை மீன்கள் துள்ளித்திரிந்து கொண்டிருந்தன. அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள மலைச்சரிவிலிருந்து பரந்து விரிந்து கிடக்கும் காரையார் அணையின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் கீழ்முனை பகுதியில்தான் அமைந்திருக்கிறது பாணதீர்த்த அருவி.
ஆதிகாலத்தில் மனித நடமாட்டத்தை அறிந்திராத இப்பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் விருப்பப் பகுதியானது. இந்த சோலைக்காடுகளில் ஏற்கனவே பருத்து வளர்ந்திருந்த செங்குறிஞ்சி, ஈட்டி, கோங்கு, குங்கிலியம் உள்ளிட்ட அரியவகை மரங்கள் ஒருவித ஆர்வத்தை கொடுத்தன.
இதையடுத்து அடர்ந்த காடுகளின் வேறு பகுதிகளில் வாழ்ந்த காணி இன மக்களை தாமிரபரணி பாயும் மலையின் கிழக்குச் சரிவிற்கு அழைத்து வந்து, ஆண்டு முழுவதும் வற்றாமல் சீறிப்பாயும் தாமிரபரணியின் இரு கரைகளில் பெரிய மைலாறு, இஞ்சிக்குழி பகுதிகளில் காணி மக்களை குடிமயர்த்தினர். இவர்களைக் கொண்டு அரியவகை மரங்களை அடையாளம் கண்ட ஆங்கிலேயர்கள் அவற்றின் வாழ்க்கைச் சூழலை அறிந்து விதைகளை சேகரித்து புதிய மரக்கன்றுகளை உருவாக்கினர்.
மேற்குத் தொடர்ச்சிமலையின் அகத்தியமலைச் சரிவில் மட்டுமே அதிகம் காணப்படும் செங்குறிஞ்சி மரங்கள் சுமார் 35 மீட்டர் உயரம் வரை வளர்பவை. செம்மரங்களைப் போலவே காட்சியளிக்கும் இந்த மரங்கள் இங்கிருந்து அதிகம் இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
காணி மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கும் அகத்தியர் வீற்றிருக்கும் பொதிகை மலையையும், அதன் அருகே அமைந்துள்ள ஐந்தலை பொதிகை, நாக பொதிகையையும் இங்கிருந்தே வணங்கும் காணிகள், ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு கடும் மலையேற்றத்திற்குப் பின் பொதிகை உச்சிக்கு சென்று அகத்தியரை வணங்கி வந்துள்ளனர். காணிகளை பிரிட்டிஷார் 5 இடங்களில் குடியமர்த்தினர். இஞ்சிக்குழியிலும், பெரிய மைலாறிலும் இருந்து இடம் பெயர்ந்த காணிகள் சேர்வலாறு தருவட்டாம்பாறையிலும், காரையார் அணையின் கீழ் பகுதியில் சின்ன மைலாறிலும், அங்கிருந்து சற்று தொலைவிலுள்ள அகஸ்தியர் நகரிலும் குடிபெயர்ந்தனர். இஞ்சிக்குழியில் முன்பு 7 வீடுகளில் காணிகள் வசித்த நிலையில் தற்போது 3 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதிலும் சின்னப்பன் காணியின் குடும்பம் மட்டுமே வசிக்கிறது.
சின்னப்பன் காணியின் மனைவி குட்டியம்மாள் தனது மங்காத நினைவுகளுடன் இஞ்சிக்குழியில் தன்னந்தனியே வசித்து வருகிறார். கன்னிகட்டி மலைச்சரிவில் அமைந்துள்ள குட்டியம்மாளின் வீட்டிலிருந்து சுமார் 50 அடி தொலைவில் தடதடத்து பாய்கிறது தாமிரபரணி. சுமார் ஓரடி உயரத்திற்கு எழுப்பப்பட்ட மண் தரையின் மீது மரக்கம்புகளால் வீடமைத்து, ஓலை வேயப்பட்டிருந்தது. ஓலைகள் மழையால் நனைந்து வீணாகி விடாமல் இருப்பதற்காக வனத்துறை சார்பில் வழங்கப்பட்டிருந்த ஷீட்டால் நான்கு புறமும் மறைக்கப்பட்டிருந்தது. ‘‘ஆச்சி... ஆச்சி...’’ என்றழைத்தோம்.
‘‘இந்தா வாரேன்...’’ கணீரென்ற குரலில் வீட்டின் உள்ளிருந்து பதில் வந்தது.சிறிது நேரத்தில் இடுப்பில் சுருட்டி கட்டியிருந்த பழைய சேலையில் கையை துடைத்தபடியே வெளியே வந்தார் குட்டியம்மாள். முழுவதுமாய் வெண்மையாகி, எண்ணெய் பார்த்தே நாளாகிப்போன கலைந்த கேசம். அதன் நுனியில் கிழித்த சேலைத்துண்டால் ஒரு கொண்டையிட்டிருந்தார். வயதிற்கேற்ப உடல் முழுவதும் சுருங்கிப் போயிருந்தன தோல்கள். ஒரு புன்னகையோடு ‘‘வாங்க...’’ என்றபடி மண் தரையில் அமர்ந்தார்.
‘‘இங்க எப்படி ஆச்சி தனியா இருக்கே?’’’ என்றதும் ஒரு நிமிடம் கைகளால் முகத்தை மூடியவாறு பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டு பேச ஆரம்பித்தார். ‘‘எனக்கு வயசு நூற தாண்டிருச்சின்னு சொல்லுதாங்க. எனக்கு சரியா ஞாவமில்லா. எம்மவா பாம்பு தீண்டி சாமிட்ட போயிருச்சு. சங்கரபாண்டியன், வனராஜ்னு ரெண்டு மவனுங்க. ஒருத்தன் கேரளத்துக்கு வேலைக்கு போயிருக்கான். இங்கன 3 பொம்பளயும் 5 ஆணுவளும் இருக்கோம்.
அங்கன 2 வூடு இருக்குல்லா... அதுலதான் மத்தவோ இருக்காங்க. அவங்கதான் கீழ காட்டுக்கு போயிட்டு போயிட்டு இங்கன வரும். நா இங்க மட்டும்தான் இருக்கேன். இது எம் வீடு...’’ பேச்சில் மலையாள வாடையுடன் தொடர்ந்தார்.இந்த இஞ்சிக்குழிதான் நா பொறந்து வளர்ந்த மண்ணு. எங்கூட்டுக்கார் சாமிட்ட போயிட்டாலும் நா இந்த மண்ண விட்டு எங்கிட்டும் போமாட்டேன். இந்த காடு பூராம் எனக்கு சின்னப்பன் ஞாவம் நெறஞ்சி கெடக்கு...’’ என தழுதழுத்தவரை திசை திருப்ப ‘இந்த காடு பூராவும் சுத்தியிருக்கியா ஆச்சி’ என்றோம்.
உடனே உற்சாகத்துடன் நம்மை அந்த வீட்டின் முற்றத்திற்கு அழைத்துச் சென்றவர் அங்கிருந்து மேற்குத் திசையை காட்டினார். சற்று தூரத்தில் தெரிந்த மலையை காட்டியபடி கும்பிட்டவர், ‘‘அதான் பொதிய மலை. அங்கனதான எங்குலசாமி அகத்தியர் இருக்காரு. சின்ன வயசுல நானு அப்பாவோடயும், அப்புறம் வூட்டுக்காரரும் எங்க சொந்தம்லாம் அகத்தியர பாக்க அடிக்கடி மலையேறிப் போவும். அவர கும்பிட்டு வந்தாக்கா சொவமாயிருக்கும்.
காட சுத்தி ஏழ்ல கிழங்கு, பலா, பாக்கு, கிராம்பு, தென்ன, மொளகு, காந்தாரி மொளகால்லாம் போட்ருப்போம். காடூட போயி தேனெடுப்போம். ஆத்துல தூண்டி போட்டு மீனெடுப்போம். இந்த மலைலே எங்கட கால் படாத இடமே கெடயாது.
அவரு போனதக்கப்பம் இந்த வீடோட மொடங்கிட்டேன். காட்டுல கெடச்சத கொண்டாந்து புள்ளைங்க தந்தத தின்னிட்டிருந்தேன். அப்பதாம் கலேட்டரு (கலெக்டர்) விஷ்ணு வந்தாரு. அவர எங்கட சாமிதான் அனுப்பிச்சதுன்னு நெனக்கேன். நா இருட்டுல கெடக்கத பாத்து இந்த வௌக்க தந்தாரு...’’ என அங்கிருந்த சோலார் விளக்கை கை காண்பித்தார்.
‘‘அப்புறோம் எனக்கு மாசந்தோறும் ஆயிர ரூவா தரச்சொன்னாரு. காயிதக்காரு கிறிசுதுராசா எனக்காக அத நடந்து கொண்டாந்து தாராரு. அத வச்சிக்கிட்டும், கீழ ரேசன் கடேலிருந்து மவன் கொண்டாந்து தார அரிசியும்தான் வாழ ஒதவுது.
ஒரு நா சோறு பொங்கிட்டு அத 2 நாளுக்கு வச்சிக்குவம். சமைக்க தண்ணீ, வெறவு கிடைக்கி. காய்கறி கெடைக்காது. எனக்கு கவலயில்ல. இந்தாருக்க காட்டு ஆபீசருட்ட சொன்னா சீனி, தேயிலை கொண்டாந்துரும். பக்கத்துல புளிப்பு ஆரெஞ்சி, தேங்கா, பாக்கு இருக்கு. போதுமில்லா? சற்று நேரம் பொதிகை மலையையே பார்த்துக் கொண்டிருந்தவர் மீண்டும் தொடர்ந்தார். ‘வூட்டுலர்ந்து மெதுவா நடந்தா 10 கெசத்துல தாம்ரபரணி ஓடுது. இங்கட நல்ல தண்ணீ, நல்ல காத்து கெடைக்கு. இப்பல்லாம் கவுச்சி சாப்புடறதில்ல. வயசு போச்சுல்லா? மேகம் போறத வச்சி நேரத்தை பாத்துக்குவன். ராவுல தினைக்கும் யான வரும். ஆத்துல தண்ணீ குடிச்சிட்டு சத்தம் போடும்.
நா இருக்கனானு அது பாக்க வருதுன்னு நெனச்சிப்பேன். நா வூட்டுலர்ந்து குரல் கொடுப்பேன். செத்த நேரத்துல அது போயிரும். தினைக்கும் யான சத்தம் கேட்காம என்னால இருக்க முடியாது.
யான, புலிலாம் இந்த காட்டோட புள்ளைங்க. நானும் இந்த காட்டோட புள்ள. என்னிக்காச்சும் கோவம் வந்தா என்ன கொண்டுறுமா? அப்படி கொண்டுறுதான் நா சாமிட்ட போகனும்னா போகட்டும், எம்மவ போன மாதிரி...’’ என்றவரிடம் ‘உங்களுக்கு ஏதாவது வேண்டுமா’ என்றால், ‘‘சாமியால சொகமாயிருக்கேன், வேறென்ன வேணும்?’’ என்கிறார்.
இஞ்சிக்குழியிலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பூங்குளத்திலிருந்துதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. ஆண்டு முழுவதும் வற்றாமல் சீறி வரும் சுத்தமான தாமிரபரணியையோ, பசுமை மாறா அடர்ந்த காட்டிற்குள் தனித்திருக்கும் குட்டியம்மாளையோ விட்டுப் பிரியவே மனமில்லை நமக்கு.
செய்தி: ப.ராஜசேகரன்
படங்கள்: ரா.பரமகுமார்
|