14 நகரங்களைச் சுத்தம் செய்த சகோதரர்கள்!



இந்தியாவில் மும்பை, தில்லி போன்ற பெரு நகரங்களில் குப்பைகளை மேலாண்மை செய்வது சவாலாக இருந்து வருகிறது. மாதக்கணக்கில் மலைபோல தேங்கும் குப்பைகளால் காற்றில் விஷ வாயு கலப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. 
இன்னொரு பக்கம் குப்பைகளை கடல் அல்லது ஏரிகள்,  நதிகளில் வீசி மேலும் சூழலுக்குக் கேடு விளைவிக்கின்றனர். குப்பைகளைச் சரியாக நிர்வாகம் செய்தாலே போதும், குப்பைகளால் உண்டாகும் தீங்குகளில் இருந்து தப்பிக்கலாம்; குப்பைகள் இல்லாத இடங்களும் உருவாகும் என்று இந்த உலகுக்கு நிரூபித்து இருக்கின்றனர் விகானும், நிவ்வும். இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

யார் இந்தச் சகோதரர்கள்?  

தில்லியின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் காஷிப்பூருக்குச் சென்றால், அங்கே மனிதர்களால் உருவாக்கப்பட்ட மலைகளைப் பார்க்காமல், உங்களால் கடந்து செல்ல முடியாது. 

ஆம்; மனிதர்களால் வேண்டாமென்று வீசப்பட்ட குப்பைகளால் உருவான மலை அது.நிலையற்ற, அழுகிக்கொண்டிருக்கும் இந்தக் குப்பை மலை, 2017ம் வருடம் நிலைகுலைந்து சரிந்தது. குப்பை மலையிலிருந்து வெளியேறிய விஷ வாயுவினால் இரண்டு பேர் மரணமடைந்தனர். 

இந்தச் சம்பவம் காஷிப்பூரையே உலுக்கியது. காஷிப்பூரில் குடியிருந்த பலர், தங்களின் வீடுகளைக் காலி செய்துவிட்டு, வேறு ஊருக்குக் குடிபெயர்ந்தனர்.இந்தச் சம்பவம்தான் சகோதரர்களான விகான் மற்றும் நவ்வின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அப்போது அவர்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தனர். தில்லியின் காற்று மாசுபாட்டுக்கு 33 சதவீத காரணம் குப்பைகளை எரிப்பதுதான் என்பதை சகோதரர்கள் கண்டறிந்தனர். 

மட்டுமல்ல, சில வருடங்களாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார், விகான். அடிக்கடி குப்பைகளை எரிக்கும்போது வெளியேறும் காற்றை சுவாசித்ததும் தனது ஆஸ்துமாவுக்கு ஒரு காரணம் என்பதை அறிந்தபிறகு, தனது சகோதரன் நவ்வுடன் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார் விகான்.முதலில் தில்லியிலிருந்த தங்களின் வீட்டிலிருந்தே ஆரம்பித்தனர். 

ஆம்; வீட்டிலிருந்த குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்தனர். அதாவது சமையலறைக் கழிவுகள், காய்கறித் தோல், உணவுப் பொருட்கள் போன்ற அழுகக்கூடியக் குப்பைகளான ஈரப்பதம் உள்ள குப்பைகள் மற்றும் காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி போன்ற ஈரப்பதம் இல்லாத மறுசுழற்சி செய்யக்கூடிய உலர் குப்பைகள் என தனித்தனியாகப் பிரித்தனர்.

இப்படி பிரிதெடுத்த குப்பைகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துக்கு எடுத்துச் சென்றனர். குப்பைகளின் அளவு மிகக் குறைவாக இருந்ததால் மறுசுழற்சி செய்ய மறுத்துவிட்டது அந்த நிறுவனம். மறுசுழற்சி செய்வதற்கு எவ்வளவு குப்பைகள் வேண்டும் என்ற விவரங்களைக் கேட்டு, அதற்குத் தகுந்த மாதிரி குப்பைகளைச் சேகரிக்க ஆரம்பித்தனர் அந்த சகோதரர்கள்.

உடனே பக்கத்து வீடுகள், நண்பர்களின் வீடுகளிலுள்ள குப்பைகளைச் சேகரிக்க ஆரம்பித்தனர். விகான் மற்றும் நவ்வின் செயல்பாட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோருமே ஆதரவு தந்தனர். 

அதாவது, அந்த வீட்டினரே ஈரப்பதமான குப்பைகள் மற்றும் உலர் குப்பைகளைத் தனியாகப் பிரித்து சகோதரர்களிடம் கொடுத்தனர். இப்படி குப்பைகளைப் பிரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் எல்லா வீடுகளிலும் அந்தச் சகோதரர்கள் ஏற்படுத்தி வந்தனர். 15 வீடுகளில் உள்ள குப்பைகளைச் சேகரித்த போதும் கூட, மறுசுழற்சி செய்வதற்கான அளவை எட்டவில்லை. 

விகான் மற்றும் நவ் பற்றிக் கேள்விப்பட்ட பக்கத்து தெருக்களில் வசிக்கிறவர்களும் தங்களின் வீடுகளில் உருவாகும் குப்பைகளைப் பிரித்து சகோதரர்களிடம் ஒப்படைத்தனர். 
மறுசுழற்சிக்குத் தேவையான குப்பைகள் சேர்ந்தது. 

ஒருவேளை விகானும், நவ்வும் இப்படிக் குப்பைகளைச் சேகரித்து மறுசுழற்சி செய்யவில்லை என்றால், அந்தக் குப்பைகள் காஷிப்பூருக்குச் சென்று இன்னொரு குப்பை மலை உருவாகியிருக்கலாம். அதுவும் ஈரப்பதமான குப்பைகளும், உலர் குப்பைகளும் ஒன்றிணையலாம். அந்தக் குப்பை மலை தீப்பற்றலாம் அல்லது சிதைவுற்று விஷ வாயு வெளியேறி காற்று மண்டலம் மாசுபடலாம். 

இவையெல்லாமே சகோதரர்களின் தன்னலமற்ற செயல்பாட்டினால் தடுக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி மறுசுழற்சி மையத்துக்குச் செல்வது பொருளாதார ரீதியாக சிரமங்களைக் கொடுத்தது. குப்பைகள் எப்படி மறு சுழற்சி செய்யப்படுகிறது என்பதை அருகிலிருந்து பார்த்து விகானும், நவ்வும் கற்றுக்கொண்டனர். 

கடந்த 2018ம் வருடம் ‘ஒன் ஸ்டெப் கிரீனர்’ என்ற மறு சுழற்சி மையத்தைச் சொந்தமாக உருவாக்கி, செயல்பட ஆரம்பித்தனர். அப்போது விகானுக்கு வயது 14; நவ்விற்கு 11.தாங்கள் வசித்து வந்த பகுதியில் மட்டுமல்லாமல், சுற்று வட்டாரத்திலிருந்த அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகளைச் சேகரித்தனர். பள்ளியில்படித்துக்கொண்டே மாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் இந்தச் செயலைச் செய்தனர். 

அடுத்து தங்களுக்குத் தெரிந்த பள்ளிகள், அலுவலகங்களுக்குச் சென்று அங்கிருக்கும் குப்பைகளைச் சேகரித்தனர்.பிளாஸ்டிக், கார்டுபோர்டு, மெட்டல், கிளாஸ், இ-வேஸ்ட் எனத் தனித்தனியாகக் குப்பைகளைப் பிரித்து, அவற்றுக்குரிய தனிப்பட்டமுறையில் மறு சுழற்சி செய்தனர். மறுசுழற்சி மூலம் குப்பைகளை பயனுள்ள பொருட்களாக மாற்றினார்கள். 

அதே நேரத்தில் தங்களுக்குத் தெரியாமல்  குப்பைகள் மீண்டும் காஷிப்பூரின் நிலப்பகுதிகளுக்குச் சென்று குப்பை மலையாகிவிடக்கூடாது அல்லது குப்பைகளை எரியூட்டிவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர். எந்த ஒன்றையும் ஆரம்பிக்கும்போது சில தடைகள் ஏற்படும்; சில கடினங்களைக் கடந்து வர வேண்டும். இந்தச் சகோதரர்களுக்கும் அப்படித்தான் நடந்தது. 

குப்பைகளைத் தங்களது மறுசுழற்சி மையத்துக்கு எடுத்துச் செல்வதற்காக வண்டியை ஏற்பாடு பண்ணுவதே அவர்களுக்குச் சிரமமானதாக மாறியது. காரணம், யாருமே இலவசமாக வரவில்லை. குறைந்த கட்டணத்தில் ஒருவர் வந்தார். ஆனால், வண்டியில் குப்பையை ஏற்றுவதற்கு யாருமே முன்வரவில்லை. 

எல்லோருமே ஒருவித அருவருப்பைக் காட்டினார்கள். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து குப்பைகளை வண்டியில் ஏற்றி, தங்களது மறுசுழற்சி மையத்துக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், இன்று 14 நகரங்களிலிருக்கும், 30 ஆயிரம் வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்கிறது, ‘ஒன் ஸ்டெப் கிரீனர்’. 

இதுவரை 10 லட்சம் கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை மறுசுழற்சி செய்திருக்கிறது இந்த மையம். ஒருவேளை இந்த 10 லட்சம் கிலோ குப்பைகள் மறு சுழற்சி செய்யப்படாமல் விட்டிருந்தால், அந்தக் குப்பைகளால் காற்று மாசுபாடு அதிகரித்திருக்கும். விஷ வாயுவும் உருவாகியிருக்கலாம். இதிலிருந்தே சகோதரர்களின் முக்கியத்துவம் புரிகிறது.  

மட்டுமல்ல, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து 73 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். 2021ம் வருடம்தான் விகான் மற்றும் நவ்வின் செயல்பாடுகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்
பித்தன. சர்வதேச குழந்தைகள் அமைதி விருது அவர்களைத் தேடி வந்தது. நாலாப்பக்கமிருந்தும் பாராட்டுகளும் குவிந்தன. சகோதரர்களின் சமூகப் பணி தொடர்கிறது.

த.சக்திவேல்