பராசக்தி எதைப்பற்றிய படம்..?



சொல்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா

செவாலியே சிவாஜியின் முதல் படம் ‘பராசக்தி’. அந்தப் படம் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்தது எனில் இந்த ‘பராசக்தி’ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வேறு ஒரு சாதனை படைத்திருக்கிறது. ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’ என இப்படத்துக்காக புதுமையான ப்ரொமோஷன் செட் ஒன்று வள்ளுவர் கோட்டத்தில் போடப்பட்டது. இதற்கு மக்கள் கொடுத்த ஆதரவால் மூன்று நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இந்த பராசக்தி தீம் செட், மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. 

‘பராசக்தி’ படம் வரும் முன்பே இந்த வேர்ல்ட் ஆஃப் பராசக்தி ட்ரெண்டிங்கில் இருக்கும் பட்சத்தில் படம் எப்படிப்பட்ட அனுபவத்தை கொடுக்கப் போகிறது இந்தப் ‘பராசக்தி’? இப்படம் உருவாக்கப் போகும் வரலாறு என்ன?

கேட்டவுடன் முகம் மலர சிரிக்கிறார் கேப்டன் ஆஃப் ‘பராசக்தி’ சுதா கொங்கரா.‘‘இந்த கான்செப்ட் க்கு நான் கிரெடிட் எடுத்துக்க முடியாது. இது முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் ஐடியா. ஒருநாள் திடீர்னு என்னைக் கூப்பிட்டு ‘இப்படிச் செய்யலாமா’ அப்படின்னு கேட்டார். ஆனால், படத்திற்கு இந்த கான்செப்ட்தான் முதல் ப்ரொமோஷன் மற்றும் மிகப்பெரிய அறிமுகமாக இருக்கும் அப்படின்னு நாங்க நினைச்சுக் கூட பார்க்கலை. 

1960களில் இருந்த காலகட்டத்தை பார்ப்பதற்கு நமக்கு வாய்ப்பு கிடையாது. அந்த வாய்ப்பை மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்கிற ஐடியாதான் இந்த ‘வேர்ல்ட் ஆஃப் பராசக்தி’. அதில் சிவா எனக்கு சொன்னது, ‘‘மேடம்... நாம படத்தில் காட்டப்போறது இப்போ இருக்கற தலைமுறைக்கு முற்றிலும் ஒரு ஏலியன் உலகம். அதை இப்பவே அவங்ககிட்ட அறிமுகம் செய்திடலாம். அவங்களுக்கும் இது ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸா இருக்கும். குறிப்பா இந்த ஜென் இசட் தலைமுறைக்கு இது வித்யாசமான அனுபவமா இருக்கும்...’’ என இந்த ஐடியா கொடுத்தது சிவாதான்...’’ புன்னகைக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.

‘பராசக்தி’ பெயருக்கே ஒரு பெரிய சரித்திரம் உண்டே..? 

ஆமா. ஆனா, அந்த சரித்திரத்தின் பக்கத்தில் கூட நாம நெருங்க முடியாது. அது பெரிய வரலாறு. தலைப்பை மட்டுமே நாங்க மரியாதையுடன் எடுத்துக்கிட்டோம். 
என்னைக்கோ நடந்த மறக்க முடியாத ஒரு வரலாற்றுக் கதை, குறிப்பாக நம் தமிழ்நாட்டில் நடந்த கதை. அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு அண்ணன், தம்பி, பாட்டி, ஒரு காதலி, பின் ஒரு கல்லூரியின் மாணவர்கள்னு அத்தனையும் ஒன்றுசேர்ந்து அந்த வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை சொல்ல முயற்சி செய்திருக்கோம். அதுதான் இந்த ‘பரா
சக்தி’.

கிட்டத்தட்ட ஒரு இறந்த கால கண்ணாடி மாதிரி இந்தப் படம் இருக்கும். 1960களில் மக்கள்கிட்ட நிறைய பணம் கிடையாது. காரணம், சுதந்திரம் வாங்கி வெறும் 10 முதல் 15 வருடங்கள் மட்டுமே ஆகியிருந்த சூழல். வேலை வாய்ப்பு இல்லை, சாப்பாட்டிற்குக் கூட வழியில்லை. போராடித்தான் வாழணும். சின்னச் சின்ன விஷயங்கள் கூட அந்த மக்களுக்கு சந்தோஷமா இருந்துச்சு. அவங்களுடைய ஆசை, கனவு கூட எளிமையாகத்தான் இருக்கும்.

ஆனா, அவங்க உணர்வுகள் வலிமையாக இருக்கும். அந்த காலகட்டத்தில் 18 அல்லது இருபது வயதில் இருந்தவங்க இப்போ தங்களுடைய 70 வயதுகளில் இருக்காங்க. அப்போதெல்லாம் சினிமாவுக்கு போறதே அவங்களுக்கு ஆடம்பர செலவு. ஒரு சில நபர்கள் கிட்ட பேசும்பொழுது அவங்க சொன்னது ‘அப்போ படம் எல்லாம் எங்களால் பார்க்க முடியாது. யாராவது பணக்கார பையன் எங்களை எப்பவாவது சினிமாவுக்கு கூட்டிட்டு போவான். அப்படித்தான் சினிமா பார்ப்போம்...’ இப்படி சொல்லும்போது ஆச்சரியமா இருந்துச்சு. 

சரி, இவர்களுடைய பிரதான பொழுதுபோக்கு எது என்றால், டீக்கடை, கல்லூரி... இப்படி கூட்டமா ஒண்ணு சேர்ந்து படிக்கிறது, பேசுறதுதான் இவங்களுடைய பொழுதுபோக்கு. 
இப்போ அதெல்லாம் யோசித்துக்கூட பார்க்க முடியாது. இன்னைக்கு எல்லாமே இருக்கு. ஆனால், எந்த உணர்வும் இல்லாமல் இருக்கோம். எந்த வாழ்வியலை நாம தொலைச்சிட்டோம் என்கிறதை எடுத்து வைக்கக்கூடிய படமா இந்தப் படம் இருக்கும்.

‘பராசக்தி’யின் கதை மாந்தர்கள்..?

செழியன் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன். இதுவரைக்கும் இப்படி ஒரு கெட்டப்பில் அவரை நாம் பார்த்ததே கிடையாது. டெடிகேஷனான ஒரு இளைஞன். அவருக்கு இது 25வது படம். அந்தப் பொறுப்பை அவரும் நிறைய எடுத்துக்கிட்டார். எல்லோருமே அப்படிதான். அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா... இவங்க நால்வருக்குமே இந்த கெட்டப் புதுசு. அதர்வா - 
சின்னதுரையாகவும், ரவி மோகன் - ஜி திருநாடனாகவும், ஸ்ரீலீலா - ரத்னமாலாவாகவும் நடிச்சிருக்காங்க. 

எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோ ஒரு வகையில் பின்னிப்பிணைந்துதான் இருக்கும். ரவி மோகன் ஒரு ஆபீசர். முதலில் இந்த கேரக்டரை நான் ரவிக்கு  சொல்லும்பொழுது நிச்சயம் அவர் ‘நோ’ சொல்லத்தான் போறார் அப்படின்னு நெனச்சேன். ஆனால், ஓகே சொன்னார். ‘ஆங்...’ இப்படிதான் நான் ஆச்சரியப்பட்டு கேட்டேன். இன்னும் ஆச்சரியப்படுத்தக்
கூடிய நிறைய கேரக்டர்கள் படம் முழுக்க வருவாங்க.

விஷுவல் ரவி கே சந்திரன் சார்... அவருக்கும் எனக்குமான பயணம் ‘ஆயுத எழுத்து’ படத்தில் ஆரம்பிச்சது. மணிரத்னம் சாருக்கு நான் அப்போ அசிஸ்டென்ட். அதுவும் நான்தான் கடைசி அசிஸ்டென்ட்.அதனால் ரவி கே சந்திரன் சாருக்கு ஈசியா கூப்பிட்டு வேலை வாங்க கடைக்குட்டி மாதிரி இருப்பேன். ‘என்னம்மா நீ வேலையே செய்ய மாட்டேங்
குற’னு கேட்பார். மாஸ்டர் கிராப்ட் மனிதர் அவர். கதையாக மட்டுமில்லாமல் விஷுவலாகவும் இந்தப் படம் நிறைய சவால் கொடுத்துச்சு. எனக்கே நிறைய இடங்களில் ஒரு வழிகாட்டி தேவைப்பட்டது. அது ரவி சார் தான். எங்கே நான் தயங்கினாலும், அவர் ஒரு தீர்வு கொண்டு வருவார். 

எடிட்டர் சதீஷ் சூர்யா. நான் அசிஸ்டென்டாக இருந்த போது, அவரும் உதவி எடிட்டர். பல வருடங்களாக நாங்கள் பயணம் செய்கிறோம். இப்போ என்னுடைய ‘இறுதிச் சுற்று’ படம் முதல் ‘பராசக்தி’ வரை அவர்தான் எடிட்டர். ஒரு சில இடங்களில் ‘இந்த இடம் போர் அடிக்கும்’ அப்படின்னு அவர் சொல்வார். நானும் ‘சரி அதை எடுத்திடுங்க’ அப்படின்னு சொல்லிடுவேன். உண்மையாகவே படமாக பார்க்கும்போது அவர் சொன்னது சரியா இருக்கும். 

ஜிவி பிரகாஷ் மியூசிக். நம்ம வீட்ல இருந்து ஒரு பிரதர் நமக்கு மியூசிக் செய்தால் எப்படி இருக்கும்? அப்படி வேலை செய்தார் ஜிவி பிரகாஷ். ‘சூரரைப் போற்று’ படம் மியூசிக் கம்போஸ் செய்யும் பொழுது, சைந்தவி மாசமா தன் அம்மா வீட்ல இருக்காங்க. ஆனால், கடைசி நிமிஷத்தில் இந்தப் பாட்டு சேர்த்தால் நல்லா இருக்கும் அப்படின்னு ‘கையிலே ஆகாசம்...’ பாடலை ஒரு ரெக்கார்டர் கொடுத்துவிட்டு சைந்தவி குரலில் பதிவு செய்தார் ஜிவி பிரகாஷ். 

அந்த அளவுக்கு ஒரு படத்துக்காக வேலை செய்கிறவர். யாரும் ஈசியாக அவர்கிட்ட நெருங்கலாம். 16 வயதிலிருந்து அவரைத் தெரியும். நானும் அசிஸ்டென்ட், அவரும் குட்டிப் பையனா மியூசிக் செய்திட்டு இருந்தார். நாங்க என்னுடைய முதல் படமான ‘துரோகி’யிலேயே வேலை செய்திருக்கணும். ஆனால், தயாரிப்பு குழு காரணமா மிஸ் ஆகிடுச்சு. ‘சூரரைப் போற்று’ படத்தில்தான் எனக்கு ஜிவி பிரகாஷ் கூட வேலை செய்ய முடிஞ்சது. 

அவரே போன் செய்து, ‘இதுக்கு ஆர்ஆர் செய்யணும்...’, ‘இந்த போர்ஷன் இன்னும் முடிக்கலை...’ இப்படியெல்லாம் கேட்டு நம்மளை தூங்க விட மாட்டார்.
உங்க பார்வையில் இப்போதைய பார்வையாளர்கள் மனநிலை எப்படி மாறியிருக்கு?

எந்தக் காலத்திலும் பார்வையாளர்கள் அப்போதைய காலத்துக்கு புத்திசாலிகளாதான் இருப்பாங்க. அவங்களைக் கேள்வி கேட்க விடாமல் ஆச்சரியப்படுத்தி உட்கார வைக்கிற மேஜிக் நமக்குத் தெரியணும். ‘இந்த விஷயத்தை எல்லாம் மக்கள் கவனிக்க மாட்டாங்க’ அப்படின்னு நினைச்சா சரியா அதைக் கண்டுபிடித்து விமர்சிப்பாங்க. அதுவும் இப்போ கேட்கவே வேண்டாம்.
அத்தனை மொழிகளிலும் இருந்து வரக்கூடிய எல்லா படங்களையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்கு இருக்கு. நாம நினைச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு பார்வையாளர்கள் இப்போ புத்திசாலிகள். 

இந்த மாற்றம் தேவை. ஒரு காலத்தில் ‘இந்தக் கதை அவங்களுக்கு புரியாது, தெரியாது...’ இப்படியெல்லாம் சொல்லி நமக்கு நாமே நம்மை ஏமாத்திக்கிட்டு இருந்தோம். அதெல்லாம் தப்புனு இப்போ நிரூபணமாகிடுச்சு. அழுத்தம் திருத்தமா சொல்றேன்... இப்போ பார்வையாளர் அதிபுத்திசாலிகள்.
‘பராசக்தி’..?

நான் சின்ன வயதில் இருந்த போது பல மைல் தூரம் சைக்கிளில் ஸ்கூலுக்கு போவேன். ஐந்தாறு தெருக்கள் தள்ளிதான் ஒரு வீட்டில் போன் இருக்கும். ஏன்,பேருந்தில் ஏறி எத்தனையோ கிலோமீட்டர் கடந்து ஸ்கூல், காலேஜ் இப்படி போனோம். ஆனால், இன்னைக்கு டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்துடுச்சு. வசதி வாய்ப்புகள் அதிகமா இருக்கு. ஆனால், பயம் முன்பை விட அதிகமா இருக்கு. 

ஒரு கிலோமீட்டர்ல இருக்கும் ஸ்கூலுக்குகூட குழந்தைகளை தனியா விட நமக்கு பயம். ஒரு மனுஷன், சக மனுஷன்கிட்ட பேச பயப்படறான். இப்படி எதுக்கெடுத்தாலும் அச்சத்தோடயே இப்ப வாழறோம்.அந்தக் காலத்திலே அப்படி எல்லாம் இல்லை. அந்த வாழ்வியலை மக்கள்கிட்ட மறுபடியும் ரீவைண்ட் செய்து காட்டக் கூடிய படமா இந்த ‘பராசக்தி’ இருக்கும்.

ஷாலினி நியூட்டன்