ஒரே இடத்தில் உலகின் மாபெரும் அகராதி களஞ்சியம்!



இது தமிழின் சாதனை

அறிவியல், ஆட்சிச் சொல், இலக்கியம், கணிதவியல், கலை, வாழ்வியல், கல்வெட்டியல்,  சட்டவியல், பண்ணை அறிவியல், பொறியியல், மருத்துவம், வணிகவியல், பழமொழி, விடுகதை, திரைத்துறை...

‘‘இன்னைக்கு உலக அளவுல 174 மொழிகளில் அகராதிகள் ஆன்லைனில் வருது. அதில் தமிழுக்கான இடம் 23 ஆக இருந்துச்சு. இப்ப அதை நான் ஏழாவது இடத்துக்குக் கொண்டு வந்திருக்கேன்.  

இதற்காக 16 லட்சம் சொற்களுடன், 1.6 கோடி விளக்கங்களுடன், 160 துறைகளுக்கான ஓர் ஒருங்கிணைந்த அகராதி களஞ்சியத்தை பெரும் சிரத்தையுடன் உருவாக்கினேன்...’’ 
அத்தனை உற்சாகமாகச் சொல்லும் தமிழ்ப்பரிதி மாரி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர். 

தனியொருவராக இவர் உருவாக்கியுள்ள தமிழ்ப்பேழை என்னும் ஒருங்கிணைந்த அகராதி களஞ்சியம் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஒன்று. இதனை Mydictionary.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் பார்க்கலாம். இப்பணிகளுக்கு உறுதுணையாக ஒவ்வொரு அகராதிக்கும் நிரல் எழுதி இணையத்தில் வெளியிடும் பணியை தமிழ்ப்பரிதி மாரியின் மனைவி சுவிதா இளங்கோவன் செய்துள்ளார்.    

இதில் அறிவியல் அகராதிகள், ஆட்சிச் சொல்லகராதிகள், இலக்கிய அகராதிகள், கணிதவியல் அகராதிகள், கலை, வாழ்வியல் அகராதிகள், கல்வெட்டியல் அகராதி, சட்டவியல் அகராதி, பண்ணை அறிவியல் அகராதிகள், பொறியியல் அகராதிகள், பல்துறை அகராதிகள், மருத்துவ அகராதிகள், வணிகவியல் அகராதிகள் என 160 துறைகளுக்கு 72க்கும்  மேற்பட்ட அகராதிகளைத் தந்துள்ளார்.  

இதனுடன் பழமொழிகளுக்கென ஐந்து அகராதிகளும், விடுகதைகளுக்கென்று இரண்டு அகராதிகளும், திரைப்படத் தரவுகளுக்கு ஒரு அகராதியும், தமிழ் இதழ்களின் தரவுகளுக்கு ஒரு அகராதியும், தமிழ் நூல்களின் தரவுகளுக்கு ஒரு அகராதியும் என ஒட்டுமொத்தமாக 80 அகராதிகள் இருக்கின்றன.

அதனால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கு வேண்டிய தரவுகளையும், விளக்கங்களையும் பல அகராதிகளின் துணையுடன் இதில் பெறமுடியும் என்பதே சிறப்பு.
அதாவது இத்தளத்தின் தேடுபொறியில் ஒரு சொல்லினை உள்ளீடு செய்தால் அச்சொல் எண்பது அகராதிகளிலும் தேடப்பட்டு அதன் விளக்கங்கள் முழுமையாக அளிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

அது பழமொழியாக, விடுகதையாக, நூல் தரவாக, திரைப்படமாக, இலக்கியமாக என எப்படியிருந்தாலும் இதில் தேடித் தரவுகளைப் பெற முடியும்.   
‘‘இந்தப் பணிகளை கடந்த 15 வருஷமா செய்திட்டு வர்றேன். அப்புறம், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அகராதிகளைக் கொண்ட ஒரு அகராதி ஆவணக் காப்பகத்தை, ‘அகராதி ஆராய்ச்சி இயக்கம்’ என்ற பேர்ல சேலத்தில் நடத்திட்டு வர்றேன். 

ஒரே இடத்துல 3000க்கும் மேற்பட்ட அகராதிகளை நூலாகவும், மென்படியாகவும் உலகத்தில் இங்கேதான் பார்க்கமுடியும். இதுல 72 அகராதிகள்தான் இப்போ இணையத்துல கொண்டு வந்திருக்கேன்.  அடுத்து 3 லட்சம் பழமொழிகள், ஒரு லட்சம் விடுகதைகள், 1918ம் ஆண்டிலிருந்து 1940ம் ஆண்டு வரைக்குமான தமிழ்த் திரைப்பட தரவுகள், 4 லட்சம் புத்தகங்களுக்கான தரவுகள்னு இன்னும் சில துறைகளுக்கான அகராதிகள் சேகரிச்சு இந்த இணையதளத்துல வெளியிட்டிருக்கேன். 

அப்புறம் 1802ம் ஆண்டிலிருந்து தமிழ் இதழ்களுக்கான தரவுகள் என்னிடம் இருக்கு. அப்படியாக தமிழில் வந்த 5,000 இதழ்களுக்கான தரவுகள் கொடுத்திருக்கேன். குறிப்பா ‘குங்குமம்’, ‘முத்தாரம்’, ‘சுமங்கலி’, ‘வண்ணத்திரை’, ‘தினகரன்’, ‘முரசொலி’, ஐயா கலைஞர் அவர்கள் நடத்தின கையெழுத்து பத்திரிகைனு என் சேகரிப்புல ஆயிரம் இதழ்களை அச்சுப்படியாகயும் வச்சிருக்கேன். 

என்னுடைய நோக்கம் தமிழுக்கான ஒரு மிகப்பெரிய தரவு தளத்தை உருவாக்குவதுதான். அதாவது உ.வே.சா தாத்தா ஓலைச்சுவடிகளை எல்லாம் சேகரிச்சு, பிறகு அதனை பதிப்பிச்சு அச்சு நூலாகக் கொண்டு வந்தார்.

அதேபோல் அகராதிகள், நூல்கள் உள்ளிட்டவற்றின் தரவுகளை இணையத்துல வெளியிடுவது மட்டுமில்லாமல் அதைத் தேடுபொறிக்கு உகந்ததாக, அதாவது சர்ச் எஞ்சினுக்கு உதவியாகக் கொண்டு வரும் வேலையைச் செய்திருக்கேன்...’’ என நம்பிக்கையுடன் குறிப்பிடுகிறவர், தொடர்ந்து பேசினார். 

‘‘இந்த அகராதி எப்படி செயல் படுதுன்னா, இப்ப உங்களிடம் ரெண்டு ரேக் முழுவதும் புத்தகங்கள் இருக்குனு வைப்போம். அது ரெண்டு லட்சம் பக்கங்கள் வரும் இல்லையா. இந்த ரெண்டு லட்சம் பக்கங்களில் ஒரே சொல்லுக்கான கலைச்சொல்லும், விளக்கங்களும் தேடுங்கனு சொன்னால் குறைஞ்சது உங்களுக்கு ரெண்டு ஆண்டுகளாகும்.

ஆனா, இதில் பத்து நொடிகளில் பார்க்கிறமாதிரி செய்திருக்கேன். இப்ப ‘நீர்’னு ஒரு சொல்லிருக்கு. இதைத் தேடு பொறியில் தட்டினால் இந்தச் சொல் இலக்கியங்கள்ல எங்கெங்க வருதுனு பார்த்துவிடலாம். அப்புறம், இயற்பியலில் எத்தனை இருக்கு, மண்ணியலில் எத்தனை இருக்கு, வேதியியலில் எத்தனை இடங்களில் வருதுனு எல்லா அகராதியிலும் தேடி நொடிப் பொழுதில் உங்களுக்குக் கொடுத்திடும்.   

அப்புறம், பழமொழிக்குள்ள போய் தேடினால் நீருக்கு எத்தனை பழமொழி இருக்கு என்பதை ஒரே பக்கத்துல தந்திடும். அதேபோல விடுகதையில் தேடினால் நீருக்கு எத்தனை விடுகதைகள் இருக்குனு சொல்லிடும். அதனால் 1659ம் ஆண்டுல இருந்து தமிழ் அகராதியின் வளர்ச்சியை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்வதற்கான இடத்தை நான் உருவாக்கியிருக்கேன், இன்னும் உருவாக்கிட்டும் வர்றனே்.   

அடுத்து நூல்களின் தரவுகளிலும் பெரிய வேலைகள் செய்திருக்கேன். இப்ப கன்னிமாரா நூலகத்தில் மட்டும் ஒண்ணேகால் லட்சம் நூல்களின் தரவுகள் வாங்கியிருக்கேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்துல 86,000 நூல்களின் தரவுகள் தருவதாக சொல்லியிருக்காங்க. அப்புறம் நானாவே பல்வேறு நூலகங்களின் இணையதளங்களில் இருந்து தரவுகள் எடுத்து 2 லட்சம் நூல்களுக்கான தரவுகளை வச்சிருக்கேன். இதில்லாமல் நான் ஸ்கேன் பண்ணினது, சேகரிச்சதுனு ஒரு லட்சம் நூலுக்கான சாஃப்ட் காப்பி இருக்கு. 

இப்போ நாம் ஒவ்வொரு நூலுக்கும் அந்த நூலின் பேர் என்ன, ஆசிரியர் யார், பதிப்பகம் என்ன, நூல் வெளியான ஊர், அந்த நூல் எது சம்பந்தமானது, அந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் யார், மறுபதிப்பு என்னனு எல்லா விவரங்களையும் கொண்டு வர்றோம். 

உதாரணத்திற்கு, ‘பராசக்தி’ என்ற பேர்ல எத்தனை புத்தகம் தமிழில் வந்ததுனு தேட விரும்புறீங்கனா, எல்லா தரவுகளையும் தந்திடும். இது தொடர்பா அந்த எல்லா புத்தகங்களும் நொடிப் பொழுதில் பார்க்கும் பொழுது, நீங்க அதுகுறித்து ஆய்வை முன்னெடுக்க வசதியா இருக்கும். 

அப்புறம், இந்த நூல் எங்க கிடைக்கும் என்கிற லோகேஷனையும் கொடுக்கிறேன். அடுத்து எந்தத் துறையைச் சேர்ந்த புத்தகத்தையும் தமிழ்ல என் அகராதி மூலம் மொழிபெயர்ப்பு செய்யமுடியும். 

இப்ப தொழில்நுட்ப உதவியுடன் ஏஐயில் பண்ணலாம். ஆனா, அதற்கான சரியான கலைச்சொற்கள் அவசியம். அப்போ, என்னுடைய அகராதியையும் சேர்த்து பயன்படுத்தும்போது சிறந்த மொழிபெயர்ப்பு கிடைக்கும். நம்மிடம் தமிழில் அதற்கான சொல்வளம் நிறைய இருக்கு. 

அதனால், எந்த டெக்னாலஜி வந்தாலும் தமிழில் சொல்ல, தமிழின் வேர்ச்சொல் அடிப்படையில், இலக்கண அடிப்படையில், இலக்கிய அடிப்படையில், மரபு அடிப்படையில் தரவுகள் இருக்கணும். அதை நான் செஞ்சு முடிச்சிருக்கேன். ஆனா, இன்னும் வேலைகள் நிறைய இருக்கு. அதற்கு ஆட்களும் நிதியுதவியும் தேவை. இப்போ நானும், என் மனைவியும் மட்டும் இணைந்து பணிகள் செய்றோம். இதற்கு 20 கோடி நிதியுதவியும், நாற்பது பேர்களும் இருந்தால் நான்கு ஆண்டுகள்ல ரொம்ப செழுமையானதாக மாற்றிடலாம்.  

அதாவது 2 கோடி அடிப்படை தரவுகளும், 25 கோடி விளக்கங்களும், மூணு லட்சம் பழமொழிகளும், ஒரு லட்சம் விடுகதைகளும், 4 லட்சம் நூல் தரவுகளும், 15 ஆயிரம் திரைப்படத் தரவுகளும் நம்மிடம் இருக்கும்படி கொண்டு வந்திடலாம். அப்ப  உலக அளவில் அதிக சொற்களுடன் திகழும் மாபெரும் தமிழகராதியாக நம் தமிழ் முதலிடத்திற்கு வந்திடும். இதுதவிர, வட்டார வழக்கு அகராதி மட்டும் என்னுடைய சேகரிப்பில் 50க்கும் மேல இருக்கு. இதை தமிழ்ப்பேழையில் வெளியிட உள்ளோம். இதுக்காக தமிழ்நாடு முழுவதும் பயணிச்சேன். 

இதில் நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, கொங்கு, அறந்தாங்கி, கன்னியாகுமரி, ஜவ்வாது மலை, விளவங்கோடு, கரிசல், திருநெல்வேலி, தூத்துக்குடினு பல வட்டார வழக்கு அகராதி இருக்கு. 
தஞ்சை வட்டார வழக்கிற்கு நெற்களஞ்சியத்தின் சொற்களஞ்சியம்னு பெயர் வச்சிருக்காங்க. கன்னியாகுமரிக்கு கடைக்கோடி அகராதினு பெயர் வச்சிருக்காங்க. அப்புறம், கைவினைத் ெதாழில் சம்பந்தமான அகராதி இருக்கு. சங்க இலக்கியத்தில் இருக்கிற மக்கள் பெயர்களுக்கு மட்டுமே ஒரு அகராதி இருக்கு.

மணிமேகலை இலக்கியத்தில் உள்ள அந்த வட்டார வழக்கு அகராதி இருக்கு. பரதவர் மக்களின் வட்டார வழக்கு அகராதியும், செட்டிநாடு மக்களின் வட்டார வழக்கு அகராதியும் இருக்கு...’’ என்கிற தமிழ்ப்பரிதி மாரி, இது பலரிடம் போய்ச் சேரவில்லை என்கிறார். 

‘‘எனக்கு இதில் எந்த வணிக நோக்கமும் இல்லை. நான் எந்த பொருளையும் விற்கவுமில்ல. கல்வி என்பது விற்பனைக்கு இல்லை என்பதில் நான் உறுதியா இருக்கேன். 
அதனால்தான் அனைவரும் பயன்படுத்தும்படி இலவசமாகவே தரவுகளை கொடுக்கறேன். இதனை பலரும் பயன்படுத்தி தமிழை இணையத்தில் வலுவானதாக மாத்தணும் என்பதே என் ஆசை...’’ என முத்தாய்ப்பாய் சொல்கிறார் பேராசிரியர் தமிழ்ப்பரிதி மாரி. 

பேராச்சி கண்ணன்