கேப்டன் இருந்தப்பவே தன் மகனுக்காக ஒரு கதை எழுதச் சொன்னார்... அதுதான் இந்தப் படம்!
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் பொன்ராம். இப்போது கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன், சரத்குமார் நடித்துள்ள ‘கொம்பு சீவி’ இயக்கியுள்ளார். ரிலீஸ் பிசியில் இருந்தவர் நேரம் ஒதுக்கி நம்மிடம் பேசினார். மாமா - மாப்பிள்ளை கதையில் புதுசா என்ன சொல்லப்போறீங்க?
ஒரு திரைப்படத்துக்கான லைன் ஒரே மாதிரி தெரிந்தாலும் திரைக்கதை ஃபிரெஷ்ஷாக இருந்தால்தான் அது மக்களிடம் போய்ச்சேரும்.
இதில் அப்படி புதுசா நிறைய விஷயங்களைப் பார்க்கலாம்.இந்த டைட்டில் ஏன் என்றால், ஊர் பக்கங்களில் சில விஷயங்களுக்காக ஒருவரை மற்றவர் தூண்டிவிடுவாங்க. அப்படிப்பட்டவர்களை ‘கொம்பு சீவி’னு சொல்வார்கள். அப்படி இதில் யார் தூண்டுகிறார்கள், தூண்டப்படுகிறவர்கள் யார் என்பதை பரபர திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.  இந்தக்கதை வைகை அணையைச்சுற்றியுள்ள கிராமப் பின்னணியில் நடக்கிறது. வைகை அணை கட்டும்போது சுமார் 12 கிராமங்கள் மூழ்க வேண்டிய சூழ்நிலை இருந்துச்சு.
அங்கிருந்தவர்கள் கள்ளிக்காடு என்று சொல்லப்படும் வறட்சியான பகுதியில் குடியமர்த்தப்பட்டார்கள்.அணையில் தண்ணீர் குறையும்போது கிராம மக்கள் தங்கள் பூர்வீக நிலத்தில் விவசாயம் செய்வார்கள். மழைக் காலத்தில் தண்ணீர் மட்டம் மேலே வரும்போது தங்கள் விளைச்சலை அப்படியே விட்டுவிட்டு வெளியேறிவிடுவார்கள். நீர்மட்டம் குறைந்து காணப்படும் குறுகிய காலத்தில்தான் அவர்களால் விவசாயம் பார்க்க முடியும். மற்ற நாட்களில் அவர்கள் வாழ்வாதாரம் எப்படி இருக்கும் என்பதுதான் கதைக்களம். 1996ல் நடக்கும் கதை. அவர்களுடைய அந்த வாழ்க்கை நடைமுறை இப்போதும் தொடர்கிறது. அந்த லைஃப் ஸ்டைலில் பாதிக்கப்பட்டவர்தான் ஹீரோ. அதை ஆக்ஷன் கலந்த காமெடியாக ஜாலியாக சொல்லியுள்ளோம்.
சண்முகப்பாண்டியன் தேர்வு எப்படி நடந்துச்சு?
கேப்டன் இருந்தபோதே அவரிடமிருந்து அழைப்பு வந்துச்சு. என் படங்கள் அவங்க வீட்ல உள்ள எல்லோருக்கும் பிடிக்கும். அதுமாதிரி சண்முகப்பாண்டியனுக்காக கதை கேட்டார்கள். அப்படி சண்முகப்பாண்டியனுக்காக எழுதப்பட்ட கதை இது.
பாண்டி என்ற கேரக்டர்ல வர்றார். நடிப்பைப் பொறுத்தவரை ஜூனியர் கேப்டன். ஆக்ஷன் காட்சிகளை எடுக்கும்போது ‘சண்டக்கோழி’ விஷாலை பார்ப்பதுபோல் இருந்துச்சு. கேப்டனின் தனித்துவமான லெக் ஷாட் இவருக்கு சுலபமாக வந்துச்சு. என்னுடைய படங்களில் காமெடி அதிகமாக இருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரை சண்முகப் பாண்டியனுக்காக ஆக்ஷனை சேர்த்துக்கொண்டேன். ஏனெனில், அவரிடம் ஆக்ஷன் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களும் இருக்கு. இந்தப் படம் அவருடைய சினிமா கேரியரில் திருப்புமுனையாக இருக்கும்.
சரத்குமார் கேரக்டர் பற்றி சொல்லுங்கள்?
அவருடைய கேரக்டர் பேர் ரொக்கப் புலி. அன்பைக் கொடுத்தாலும் சரி, அடியைக் கொடுத்தாலும் சரி திருப்பிக் கொடுத்துவிடுவார். சண்முகப் பாண்டியனுக்கும், சரத் சாருக்கும் இடையே ஆழமான நட்பு, பாசம் இருக்கும். ஒருவரை ஒருவர் எந்த காரணத்துக்காவும் விட்டுக்கொடுக்காதவர்கள்.சரத் சார் சீனியர் நடிகராக இருந்தாலும் ரொம்ப சிம்பிள். டைரக்டர் விருப்பத்தை தெரிஞ்சு நடிப்பார். சில நேரம் ஒன் மோர் கேட்பார்.
அவர் சீரியஸ் ரோல் அதிகம் பண்ணியவர். வடிவேல் சாருடன் சேர்ந்து நடித்த படங்களில் அவருடைய காமெடி தூக்கலாக இருக்கும். அதுமாதிரி வேணும் சார் என்றதும், அதை அப்படியே உள்வாங்கி சிறப்பாக பண்ணினார். ஏராளமான படங்கள், ஏராளமான மொழிகளில் செய்திருந்தாலும் இயக்குநராக நான் என்ன சொன்னாலும் அதை தட்டாமல், ஜாலியாக பண்ணுவார்.
ஹீரோயின் யார்?
புதுமுகம் தார்னிகா. ‘ஓ போடு...’ பாடல் புகழ் ராணியின் மகள். கல்லூரி முடித்த கையோடு நடிக்க வந்துள்ளார். போலீஸ் ஆபீஸர் கேரக்டர் பண்ணியிருக்கிறார். போலீஸ் கேரக்டருக்காகவும், சண்முகப் பாண்டியனுக்கு ஏற்ற ஜோடியாகவும் பொருத்தமாக இருக்கணும் என்று தேடினோம்.
தார்னிகா சரியாக இருந்தார்.போலீஸ் கேரக்டர் என்றாலே மிடுக்காகவும், துடுக்காகவும் இருக்கணும். அதை அழகாக பண்ணினார். புல்லட் கத்துக்கிட்டது, ஒர்க் ஷாப் அட்டண்ட் பண்ணுவது என எல்லாத்தையும் சின்சியராக பண்ணினார். ரிட்டயர்ட் போலீஸ் அதிகாரி ஒருவர் போலீஸ் அதிகாரிகளின் சல்யூட், தொப்பி அணியும் முறை என எல்லாத்தையும் சொல்லிக்கொடுத்தார்.காளிவெங்கட், முனீஸ் காந்த், ஜார்ஜ் மரியன் இருக்கிறார்கள். ஹீரோ நண்பராக ‘கல்கி’ ராஜா வர்றார். உள்ளூர் மக்களும் முக்கியமான வேடங்களில் வர்றாங்க.
உங்கள் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்குமே?
‘ஊதாப் பூ ரிப்பன்...’, ‘உன் மேல ஒரு கண்ணு...’ போன்ற பாடல்கள் எவர் க்ரீன் மலர்களாக மக்கள் மனசுல பதிஞ்சிருக்கு. இதில் முதன் முறையாக யுவன் ஷங்கர் ராஜா சாருடன் சேர்ந்து ஒர்க் பண்ணுகிறேன். அவர் பாடல்கள் பி அண்ட் சி ஆடியன்ஸிடம் அதிகம் ரீச் ஆகியிருக்கு.அது இந்தப் படத்துக்கு தேவைப்பட்டுச்சு.
பிரமாதமாக நான்கு பாடல்கள் கொடுத்தார். சிறிய பாடல்களாக நான்கு பாடல்கள் கேட்டு வாங்கினேன். எல்லாத்தையும் பொறுமையாக, மகிழ்ச்சியாக செய்து கொடுத்தார். இளையராஜா சார் ஒரு பாடலைப் பாடியுள்ளார். முந்தைய படங்கள்போல் இந்தப் படத்திலும் பாடல்கள் பேசப்படும். ஏனெனில், அதற்கேற்ப கதையில் ஸ்பேஸ் இருக்கு.
ஒளிப்பதிவு பாலசுப்ரமணியெம். என்னுடைய கேமராமேன் என்று சொல்லலாம். முதல் படம் தொடங்கி என்னுடன் டிராவல் பண்ணுகிறார். வைகை அணைக்கு பின்புறம் உள்ள லொகேஷனில் படப்பிடிப்பு நடத்தினோம்.
எனக்கு பிடிச்ச லொகேஷன் என்று சொல்லலாம். 90களின் காலகட்டத்துக்கு ஏற்ப நவீன அடையாளங்கள் தெரியாதளவுக்கு மிக அழகாக படமாக்கினார். தயாரிப்பு ‘ஸ்டார் சினிமாஸ்’ முகேஷ். இயக்குநராக எனக்கு பிடிச்ச மாதிரி படம் செய்ய முழு ஆதரவு கொடுத்தார். பொன்ராம் வாழ்க்கையில் சிவகார்த்திகேயன் யார்?
என் வாழ்க்கையில் அவர் ஒரு ஹீரோ. சிவாவுக்கு லைஃப் கொடுத்த படமாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை சொல்வார்கள். அதேமாதிரி எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் சிவகார்த்திகேயன். அவர் என்னுடைய கதையை செலக்ட் பண்ணிய அந்த நொடியிலிருந்து என் வாழ்க்கையில் ஹீரோவாக வந்துவிட்டார்.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ இரண்டாம் பாகம் எடுக்கப்போகிறீர்கள் என்று செய்தி வந்ததே?
கண்டிப்பாக எடுப்பேன். அதற்கான ஸ்கிரிப்ட் ரெடி. சிவாவின் வளர்ச்சி, பிசினஸ் என அனைத்து அம்சங்களுக்கும் ஏற்ப படம் செய்ய வேண்டும். அதற்காக சில வேலைகள் நடக்கிறது. எல்லாம் செய்த பிறகு எங்கள் காம்பினேஷனில் மீண்டும் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம். தற்போது உடனடியாக முழுக்க முழுக்க காமெடி படம் செய்கிறேன். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
எஸ்.ராஜா
|