குழந்தைகளால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட லைப்ரரி!



பெங்களூருவுக்கு அருகே உள்ள ஒரு கிராமம், சாகலெட்டி. இக்கிராமத்தைப் பற்றி அதன் அருகிலுள்ள ஊர்களில் வசிப்பவர்களுக்குக் கூட பெரிதாகத் தெரியாது. 
ஆனால், இன்று வேற்று மாநிலத்தவர்க்குக் கூட தெரிகின்ற ஓர் ஊராகப் பிரபலமாகிவிட்டது, சாகலெட்டி. காரணம், அங்கு இயங்கி வரும் குழந்தைகள் நூலகம். குழந்தைகளால் உருவாக்கப்பட்டு, குழந்தைகளுக்காக இயங்கி வரும் நூலகம் இது. 
எப்போது இந்த நூலகத்துக்குள் நுழைந்தாலும் நான்கைந்து குழந்தைகள் இருப்பார்கள். சில குழந்தைகள் ஏதாவது நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருப்பார்கள்; சில குழந்தைகள் வட்டமாக அமர்ந்து தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருப்பார்கள். புதிதாக ஒரு குழந்தை நூலகத்துக்கு வந்தால், மற்ற குழந்தைகள் எல்லோரும் ஒன்றுகூடி வரவேற்பார்கள். 
பெங்களூருவில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு குக்கிராமம்தான், சாகலெட்டி. இங்கே கடந்த 2010ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது இந்த நூலகம். அப்போது பள்ளியில் படித்து வந்த ஷாலினி, மேக்னா, வேதாஸ்ரீ , மானசா, வாணிஸ்ரீ, கார்த்திக் ஆகிய 6 நண்பர்களும் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த நூலகம். 

‘‘நாங்க ஒன்றாகச் சேர்ந்து படிப்பதற்கும், விளையாடுவதற்கும் ஒரு இடத்தைத் தேடினோம். அப்போது உதித்த ஐடியாதான் இந்த நூலகம்...’’ என்று கோரஸாகச் சொல்கின்றனர் நண்பர்கள்.

குழந்தைகளின் நூலகத் திட்டத்துக்கு உள்ளூரில் இருந்த மக்கள் முழு ஆதரவைத் தந்தனர். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட குழந்தைகள் உரிமைப் போராளிகளும் உதவ முன்வந்தனர். நாகசிம்மா ராவின் மூதாதையரின் வீட்டை நூலகமாக மாற்றிக்கொள்வதற்கு அனுமதி கிடைக்க, உருவானது சாகலெட்டி குழந்தைகளின் நூலகம். 

இன்று இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான நூலகங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றில் வெற்றிகரமாக இயங்கி வரும் நூலகங்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். 2010ல் சாகலெட்டி குழந்தைகள் நூலகம் தொடங்கப்பட்டதிலிருந்து, இன்று வரை வெற்றிகரமாக இயங்கி வருவதற்குக் காரணம் குழந்தைகள்தான். 

நூலகம் ஆரம்பித்த 6 குழந்தைகளும் பல இடங்களில் புத்தகங்களைச் சேகரித்து வந்தனர். இதற்கு குழந்தைகள் உரிமைப் போராளிகளும் உதவினார்கள். புத்தகங்களைப் பட்டியலிட்டதோடு, மற்ற குழந்தைகளுக்கு இரவல் கொடுக்கும் வேலையையும் அவர்களே செய்தனர். 

அத்துடன் நூலகத்தையும் அந்த 6 குழந்தைகள்தான் ஆரம்ப நாட்களில் பராமரித்தனர். இக்குழந்தைகளின் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக, நூலகம் ஆரம்பித்த 8 மாதங்களிலேயே ‘ஹிப்போகேம்பஸ் ரீடிங் ஃபவுண்டேஷன்’ எனும் அமைப்பு, சிறந்த சமூக நூலக விருதை வழங்கியது. 

இந்த நூலகத்தில் வெறுமனே நூல்களை இரவல் மட்டுமே கொடுப்பதில்லை. வாசிப்பை மேம்படுத்துவதற்காக பல நிகழ்வுகளைக் குழந்தைகளே ஒருங்கிணைக்கின்றனர். அதாவது, தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி மற்றவர்களிடம் பகிர்வது, ஒரு வாரத்தில் யார் அதிகமான புத்தகங்களைப் படிக்கப் போகிறோம் என்று தங்களுக்குள்ளேயே போட்டிகளை வைத்துக்கொள்வது, படித்த கதைகளை நாடகமாகப் போடுவது என நூலகத்தை ஒரு கலைக்கூடம் போல மாற்றியிருக்கின்றனர். 

வெறும் நூலகமாக இல்லாமல் குழந்தைகளுக்கான ஓர் இடமாக இருக்கிறது. அதனால் பக்கத்து கிராமங்களிலிருந்து எல்லாம் குழந்தைகள் நூலகத்துக்கு வருகை புரிகின்றனர். 
கொரோனா காலத்தில் இந்த நூலகம் இயங்கிய விதம் எல்லோருக்குமே ஒரு பாடம். 

ஸ்மார்ட்போன் மூலமாக வாசிப்பு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அங்கிருக்கும் குழந்தைகளுக்குப் புத்தகங்களை இரவல் கொடுத்தனர். 

மட்டுமல்லாமல், புதிதாக புத்தகம் வேண்டும் என்கின்ற குழந்தைகள் போனில் மெசேஜ் செய்தாலே போதும்; இல்லம் தேடி புத்தகங்கள் வந்தன. லாக்டவுன் காலத்தில் கூட விடுப்பு எடுத்துக்கொள்ளாமல் இயங்கியது இந்த நூலகம். 

கொரோனா லாக்டவுனில் குழந்தைகளின் இருப்பிடத்துக்கே சென்று நூல்களை வழங்கியதும் குழந்தைகள்தான். இந்த முயற்சி ஏராளமான புது உறுப்பினர்களைச் சேர்த்தது. அவர்களில் பெரும்பாலானோர் வேற்று மாநிலத்திலிருந்து வேலைக்காக வந்து, தற்காலிகமாக சாகலெட்டியில் தங்கியிருப்பவர்களின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

புலம்பெயர்ந்த தொழிலாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த 18 குழந்தைகள் இந்த நூலகத்தில் உறுப்பினர்களானதோடு மட்டுமல்லாமல், உள்ளூர் குழந்தைகளுடன் நல்ல நட்பையும் ஏற்படுத்திக்கொண்டனர். இந்த நூலகம் கற்றலுக்கும், விளையாடுவதற்குமான இடமாக மட்டுமே இல்லாமல், புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான நுழைவாயிலாகவும் இருந்து வருகிறது. 

இதுபோக ஆங்கிலம், கன்னடம், கணிதம் கற்றுக்கொடுக்கும் இடமாகவும் இருக்கிறது. அதாவது, ஆங்கிலம், கன்னடம், கணிதத்தில் நன்றாகப் படிக்கக்கூடிய குழந்தைகள், சக குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கின்றனர். 

குறிப்பாக வேற்று மொழி பேசும் புலம் பெயர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு கன்னடத்தைக் கற்றுக்கொடுக்கின்றனர். அவர்களின் மொழியை உள்ளூர் குழந்தைகளும் கற்றுக்கொள்கின்றனர். 

நூலகத்தை ஆரம்பித்த குழந்தைகள் இப்போது வளர்ந்து பெரியவர்களாகி விட்டனர். அவர்கள் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நூலகத்தை எப்படி நடத்துவது என்று கற்றுக்கொடுத்துள்ளனர். அந்தக் குழந்தைகள் இப்போது நூலகத்தை நடத்தி வருகின்றனர். 

இப்படி 15 வருடங்களாகத் தொடர்ந்து குழந்தைகளால் மட்டுமே இந்த நூலகம் நடத்தப்படுகிறது. இப்போது இந்த நூலகத்தில் நாவல், கலைக்களஞ்சியம், காமிக்ஸ், வண்ண ஓவியங்களால் தீட்டப்பட்ட நூல்கள் என்று 5000க்கும் அதிகமான நூல்கள் உள்ளன. 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் உறுப்பினர்களாக உள்ளனர். வாழ் நாள் உறுப்பினர் கட்டணம் 10 ரூபாய். இதுபோக  நகரும் நூலக வசதியும் உள்ளது. 

ஆம்; ஒரு வண்டியில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, பக்கத்து கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு இரவல் தருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

சாகலெட்டி குழந்தைகளின் நூலகத்தை மாடலாக வைத்து கர்நாடகாவில் பல புதிய நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தைப் பார்வையிடுவதற்காக பல தொண்டு நிறுவனங்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

த.சக்திவேல்