உங்கள் வீட்டில் 2K கிட்ஸ் & 2010க்கு பிறகு பிறந்தவர்கள் இருக்கிறார்களா..?



இதைப் படிங்க!

எழுபது, எண்பது, தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு சமூக ஊடகங்கள் என்றால் ஃபேஸ்புக், எக்ஸ் - முன்பு டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்டவைதான் தெரியும்.
ஆனால், இன்றைய இளம் தலைமுறையினர் இதைத்தாண்டி பல்வேறு சமூக ஊடக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 

குறிப்பாக ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் ஆகியவற்றுக்கு மாற்றாக ஸ்நாப்சாட், ப்ளூஸ்கை, மாஸ்டோடான், ஃப்ரெண்டிகா, பியர் டியூப் உள்ளிட்ட சமூக ஊடகத்தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இதுகுறித்துதொடர்ந்து எழுதிவருகிறார் எழுத்தாளர் சைபர் சிம்மன். அவரிடம் பேசினோம்.  
‘‘அடிப்படையாக பார்த்தால் இது சமூக ஊடகத்தின் ஒரு பரிணாம வளர்ச்சிதான். இதில் இப்போ அடுத்த கட்ட சேவைகள் வந்திருக்கு. அதை நோக்கி இளைஞர்கள் மட்டுமில்ல, எல்லோருமே பயணிக்க ஆரம்பிச்சிருக்காங்க...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் அவர்.  
‘‘இன்னைக்கு எல்லா சமூக ஊடகங்களுமே மையப்படுத்தப்பட்ட சேவைகளாக இருக்குது. அதாவது அதை இயக்க அல்லது நடத்த ஒரு நிறுவனம் இருக்கும். அந்த நிறுவனம் அதன் எல்லா செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அல்லது கட்டுப்படுத்தும். 
உதாரணத்திற்கு ஃபேஸ்புக்கை எடுத்துக்கலாம். அதன் செயல்பாடுகள் அனைத்தையும் அந்நிறுவனமே நிர்வகிக்கும். இதுதவிர, பயனாளிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் நிர்வகிக்கிற அல்லது இறுதியாகக் கட்டுப்படுத்துகிற உரிமையும் அதிகாரமும் அந்நிறுவனத்திடமே இருக்கு.

ஆனா, அடிப்படையில் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மிற்கான வரையறை என்பது அது ஒரு பயனாளர் சம்பந்தப்பட்ட ஊடகம். அதாவது இதில் பயனாளர்கள்தான் பிரதானம். பயனாளர்கள் உள்ளடக்கம் உள்பட எதையும் உருவாக்கலாம். செய்திகளையும், தகவல்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்துக்கலாம். ஆனா, கட்டுப்படுத்தும் அதிகாரம் என்பது அந்த நிறுவனங்களின் கையில்தான் இருக்கு.

இதுக்குக் காரணம் அது மையப்படுத்தப்பட்ட சேவை. அவங்க டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனுக்கு ஓகே சொல்லிட்டுதான் பயன்படுத்துறோம். இதில் பயனாளர்கள் எந்த விதத்திலும் கேள்வி கேட்கமுடியாது.இப்படியாகவே பெரும்பாலான சமூக ஊடக நிறுவனங்கள் செயல்படுது. இந்த நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் சட்ட 
திட்டங்களுக்கு உட்பட்டு செயல்படும்.

*மையமில்லா சேவை 

ஆனா, இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல். இதன் அடிப்படை தன்மை என்பது மையமில்லா சேவை. இன்னைக்கு இன்டர்நெட் இல்லாமல் எந்த சேவையுமே இல்லைன்ற நிலையிருக்கு.

இதில் இன்டர்நெட் என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கோ சொந்தமானது இல்ல. யாராலும் இன்டர்நெட்டை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவோ, தடுக்கவோ முடியாது. அதுக்குக் காரணம் இன்டர்நெட்டின் அடிப்படை கட்டமைப்பே மையமில்லா சேவைதான்.

இதில் காலப்போக்குல பயனாளிகளே சர்வர்ஸ் வச்சு அவங்களே இயக்கிக் கொள்ளக்கூடிய சேவைகள் வந்தது. அப்படி உருவாகத் தொடங்கிய சேவைகள்தான் மையமில்லா சமூக ஊடகம்.

இதில் ஒரு சென்ட்ரல் சர்வர்னு இருக்காது. எந்த நிறுவனமும் கட்டுப்படுத்தாது. பயனாளிகளே நிர்வகிக்கலாம். அதுக்கான சட்டதிட்டங்கள் எல்லாம் அவங்களே ரெடி பண்ணிக்கலாம்.

இப்படி உருவாக ஆரம்பிச்சு இப்ப நிறைய வகைகளில் மையமில்லா சமூக ஊடகங்கள் வந்திருக்கு. உதாரணத்திற்கு மாஸ்டோடான் (Mastodon). இது ஒரு மையமில்லா சேவை சமூக ஊடகத்தளம். இது எக்ஸ் மாதிரியே மைக்ரோ பிளாக்கிங். இப்போ, எக்ஸிற்கு மாற்றாக பயன்படுத்திட்டு வர்றாங்க.  

ஏன்னா, இப்போ எக்ஸ் தளம் மையப்படுத்தப்பட்டதாக இருக்கு. இதனை எலன் மாஸ்க் நிர்வகிக்கிறார். அந்நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. அப்போ இந்த மாதிரி இல்லாமல் சுதந்திரமான ஒரு கருத்து பரிமாற்றத்துக்கு மாஸ்டோடான் பயன்படுத்துறாங்க. இதுமாதிரி வேற சில மையமில்லா சேவைகளும் இருக்கு. யூடியூப்பிற்கு மாற்றாக பியர் டியூப் (Peer Tube)னு இருக்கு. அடுத்து ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக ஃப்ரெண்டிகா (Friendica) இருக்கு. இவை எல்லாமே மையமில்லா சேவைகள்.  

இதனை ஃபெடிவெர்ஸ்னு (Fediverse) சொல்றாங்க. தமிழ்ல கூட்டு பெருவெளினு புரிஞ்சுக்கலாம். இதில் பயனாளிகளே எல்லாம் பண்ணிக்கலாம். இதில் சேவைகள் எல்லாமே ஒண்ணோடு இன்னொன்று தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கும்.உதாரணத்திற்கு நீங்க ஃபேஸ் புக்ல இருந்து எக்ஸிற்கு மெசேஜ் அனுப்ப முடியாது. ஆனா, இந்த ஃபெடிவர்ஸில் எல்லாத்தையும் இணைக்கிற மாதிரி ஒரு படிமுறை உருவாக்கி வச்சிருக்காங்க. ஒரு சமூக வலைப்பின்னலை இன்னொரு சமூக வலைப்பின்னலுடன் இணைக்கலாம்.

இப்போதைக்கு இந்த சமூக ஊடகத்தளங்களை எல்லாம் தெரிஞ்சவங்க மட்டுமே பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள்ல அதிகம் பயன்படுத்துறாங்க. 

ஏன் மாற்று சமூக ஊடகத்திற்குச் செல்கின்றனர்? 

இதுக்குக் காரணம் சுதந்திரமான கருத்து பரிமாற்றம் மையமில்லா சேவையில் இருக்கு என்பதுதான். அப்புறம், மையப்படுத்தப்பட்ட சேவை நிறுவனங்கள் நம்முடைய தரவுகளைச் சேகரிக்கிறாங்க. இதனால் பிரைவசி பாதிக்கப்படுதுனு பயனாளர்கள் நினைக்கிறாங்க. நமக்கு இப்பதான் சமூக ஊடகங்களில் இருந்து தரவுகள் சேகரிக்கிறாங்க என்கிற பிரச்னை எல்லாம் வருது. இருந்தும் இப்படி சேகரிச்சால் எனக்கு என்ன என்கிற மனநிலையும் நிறைய பேருகிட்ட இருக்கு.

இது மெல்ல மெல்ல மாறும். ஏன்னா இனி வருங்காலத்துல தரவுகளும், தரவுகள் உரிமையும் ரொம்ப முக்கியமானதாக இருக்கும். தரவுகள் என்னுடைய தனி உரிமைனு வரும்.
அப்புறம், மையப்படுத்தப்பட்ட சேவை நிறுவனங்கள் எல்லாம் பயனாளிகளைவிட அவங்களைப் பத்தி அதிகமாகத் தெரிஞ்சு வச்சிருக்காங்க. அவங்க ரசனை என்ன, விருப்பு-வெறுப்பு என்ன, நம்பிக்கைகள் என்ன, பார்வை என்னனு பல தரவுகளை வச்சிருக்காங்க. 

ஒரு கட்டத்துல இந்த டேட்டாவைக் கொண்டு, பயனாளர்களுக்கு பிடிச்ச மாதிரியான ஒரு உள்ளடக்கத்தை நிறுவனங்களால் கொடுக்க முடியுது. இது வர்த்தக நோக்கம். ஆனா, இது ஒரு கட்டத்துல பயனாளர்களின் விருப்பத்தை மறைமுகமாக வடிவமைக்கிற மாதிரி மாறுது. 

அப்ப நாம எதை செய்யணும், எதை செய்யக்கூடாது என்பதை ஒரு விதத்துல நம்மை அறியாமலேயே இந்த நிறுவனங்கள் வடிவமைக்கிற ஒரு சூழ்நிலை இன்னைக்கு இருக்கு. அதனால் பயனாளிகள் இந்த சமூக ஊடகங்கள் வேண்டாம்னு நினைக்கிறாங்க. வருங்காலத்தில் இதைப் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும்.

அப்போ பயனாளிகள் இதிலிருந்து விடுபட நினைக்கலாம் அல்லது தங்களோட உரிமை வேணும்னு நினைக்கலாம். அப்ப இந்த மையமில்லா சேவைகளைத் தரும் சமூக ஊடகங்களின் தேவை அதிகமாகும்...’’ என்கிற சைபர் சிம்மன், தொடர்ந்தார். ‘‘இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் மையப்படுத்தப்பட்ட சேவையிலேயே மற்ற சமூக வலைப்பின்னல் தளங்களையும் பலர் பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க.  

நாம் பெரும்பாலும் ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, வாட்ஸ்அப்பை சமூக ஊடகம்னு சொல்வோம். ஆனா, இதைத் தவிர லிங்டுஇன்(Linkedin)னு ஒரு சர்வீஸ் இருக்கு. இது ஃபேஸ்புக் மாதிரியான சேவை. ஆனா, வணிகம் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்தது. இந்த மாதிரி ஒவ்வொரு துறைக்கும் சமூக வலைப்பின்னல் தளம் இருக்கு. இது நிறைய பேர்களுக்குத் தெரியாது. உதாரணத்திற்கு கிராபிக் டிசைனர்கள் மற்றும் ஆர்ட்டிஸ்டுகளுக்கு behanceனு ஒரு தளம் இருக்கு. இதேபோல சினிமா மற்றும் புகைப்பட ஆர்வலர்களுக்குத் தனித்தனியாக சமூக வலைப்பின்னல் தளங்கள் இருக்கு. 

அதாவது சமூக ஊடகத்துல இது ஒரு உட்பிரிவு. இதனை சமூக வலைப்பின்னல் தளம்னு சொல்வாங்க. ஆங்கிலத்துல சோஷியல் நெட்வொர்க்கிங் சைட். சோஷியல் மீடியா என்பது வேறு, சோஷியல் நெட்வொர்க்கிங் சைட் என்பது வேறு. உண்மையில் அதன் உட்பிரிவுதான் இது.  சோஷியல் மீடியா என்பது பயனாளர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ளக்கூடிய, கருத்து பரிமாற்றம் செய்யக்கூடிய என எல்லாவகையான செயல்களும் இருக்கும். இந்தச் சமூக வலைப்பின்னல் தளம் குறிப்பிட்ட விஷயங்கள் சார்ந்து மட்டும் இயங்கும். 

இந்த மையப்படுத்தப்பட்ட சமூக வலைப்பின்னல்ல ஒண்ணுதான் ஸ்நாப்சாட் (Snapchat). அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இருக்கக்கூடிய இளம் தலைமுறையினர் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள்ல பிரைவசி இல்லனு நினைச்சு அதில் இருக்க வேண்டாம் முடிவெடுத்தாங்க.நாம் பேசுறதையெல்லாம் அப்பா, அம்மா பார்ப்பாங்கனு பயப்பட்டாங்க. அதனால், அவங்க இதைவிட ஒரு மாற்று சேவையை விரும்பினாங்க. அப்போ, அறிமுகமானதுதான் ஸ்நாப்சாட்.

இது ஏறக்குறைய இன்ஸ் டா கிராம் காலத்துல அறிமுகமானது. இன்ஸ்டா மாதிரி ஒரு புகைப்பட பகிர்வு சேவைதான். இப்ப நிறைய பேர் பயன்படுத்துறாங்க. இது இப்போ ஃபேஸ்புக்கிற்கு மாற்றாக பிரபலமாகி இருக்கு. அப்புறம், இந்த சமூக வலைப்பின்னல் தளங்களிலும் மையமில்லா சேவைகளும் இருக்குது. உதாரணத்திற்கு ப்ளூஸ்கை (Bluesky). இப்போ  இது எக்ஸிற்கு மாற்றமாக வேகமாக போயிட்டு இருக்கு. இதற்கு லட்சக்கணக்கான பயனாளிகள் இருக்காங்க.

ஆனா, இந்தச் சேவைகள் எல்லாம் இன்னும் இந்தியாவில் பிரபலமாகல. நாம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்லயே இருக்கோம். இனி வருங்காலத்தில் மையமில்லா லோக்கல் ஊடகம் பிரபலம் ஆகலாம்.  இளைஞர்கள் மாற்றத்தை விரும்பி மையமில்லா சேவைனு போகும்போது சில பிரச்னைகளும் இருக்குது. பொதுவாக எந்த விஷயத்திலும் சாதகம், பாதகம் ரெண்டுமே உண்டு. 

ஒருவிதத்துல பிரைவசி கான்சியஸ் அவசியம்னு சொல்றோம். அதுல யாரும் ஊடுருவக் கூடாதுனு வலியுறுத்துறோம். ஆனா, ஓர் அளவுக்கு மேல் நமக்கு கவனிப்பும், கண்காணிப்பும் தேவை. பெற்றோர் கண்காணிப்பில் பிள்ளைகள் இருக்கணும். அதனாலதான் இப்ப பெரும்பாலான நாடுகள்ல 13 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாதுனு சொல்லப்படுது. 

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மாதிரியான நாடுகள்ல சட்டமே கொண்டு வந்தாங்க. அதனால் இனி இந்த ஒழுங்குமுறை எல்லாம் வரும். இந்த ஒழுங்குமுறை கட்டுப்பாடாகவோ, தணிக்கையாகவோ மாறக்கூடிய அபாயமும் இருக்கு.அப்ப இது தொடர்பாக நமக்கு விழிப்புணர்வு வேணும். விவாதம் வேணும். ஆனா, இந்த எந்த நடவடிக்கையும் இணையத்தின் ஆதாரமான சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிற மாதிரி அமையக்கூடாது.

இப்போ, நம் இந்திய அரசு சன்சார் சாத்தினு ஒரு ஆப் கொண்டு வந்தாங்க. அடிப்படையில் இது நல்ல செயலிதான். ஆனா, என்ன பிரச்னைனா, போன்ல என்ன செயலி இருக்கலாம், இருக்கக் கூடாது என்பதை பயனாளிகள்தான் தீர்மானிக்கணும். ஏற்கனவே ஒரு செயலி இன்பில்ட்டா இருந்தால் அது எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துகிற வாய்ப்பு இருக்கு. இப்ப எல்லா போன்களிலும் அந்தந்த கம்பெனிகளே ஓஎஸ் ஆப் வச்சிருக்காங்க. 

இதையே நிறைய பேர் எதுக்குனு விவாதிச்சிட்டு இருக்காங்க. இந்த மாதிரி விஷயங்கள் இனி வரும் காலத்தில் இன்னும் விவாதமாகும்.  அதனால், இதன் அடுத்தகட்டமாக மையமில்லா சேவைகளின் தேவை இருக்கு. இப்போ, அந்த மாற்றத்தை நோக்கி மக்கள் நகர்றாங்க...’’ என்கிறார் சைபர் சிம்மன்.

பேராச்சி கண்ணன்