குளிர்காலத் திருவிழாக்கள்!



சுமே காலிரெக்

பொதுவாக குளிர்காலம் நம்மை உறக்க நிலைக்குத் தள்ளும். ஆனால், இந்த குளிர்காலத்தில் இரவில் கூட தூங்காமல், பல கொண்டாட்டங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதுவும் இந்தியாவில்தான் இக்குளிர்காலத் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. 
வெறுமனே கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், இந்தியாவின் உயர்ந்த பாரம்பரிய, கலாசாரத்தைக் காட்டும் கண்ணாடிகளாகவும் அந்தத் திருவிழாக்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஐந்து குளிர்காலத் திருவிழாக்கள் பற்றிய விவரங்கள் இதோ:
ஒடிசாவின் கோராபுட் பகுதியில் வசிக்கும் போண்டா பழங்குடி மக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா, சுமே காலிரெக். பழங்குடிகளின் மரபை அழகாக காட்சிப்படுத்தும் ஒரு விழா என்று இதனைப் புகழ்கின்றனர்.
ஜனவரி 21ம் தேதியிலிருந்து, பிப்ரவரி 19ம் தேதிக்கு இடைப்பட்ட நாளில் வரும் முழுநிலவு நாளன்று ஆரம்பித்து, 10 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. தங்களுடைய சமூகம் செழிப்புடனும்,  ஆரோக்கியத்துடனும் இருப்பதற்காக சில தியாகங்களைச் செய்வதாக போண்டா மக்கள் தெய்வத்திடம் உறுதிமொழி தருவார்கள். 

சமூகப்பிணைப்பு ஏற்படுத்துவதற்காகவும், அண்டைவீட்டாருடனான உறவை நெருக்கமாக்குவதற்காகவும் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். பத்து நாட்களும் போண்டா மக்களின் பாரம்பரிய இசையும், நடனமும் அரங்கேறும். இந்த விழாவைக் காண்பதற்காகவே கோராபுட் நோக்கி நிறைய பேர் வருகின்றனர். 

த மாஸ்க்

இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூரப் பகுதிகளில் கொண்டாடப்படும் குளிர்காலத் திருவிழா இது. குறிப்பாக குலு மற்றும் சம்பா பள்ளத்தாக்குகளில் மாஸ்க் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மற்ற நாடுகளிலும் மாஸ்க் திருவிழா கொண்டாடப்படுவதால், இந்தியாவில் இந்த விழாவை ‘ஃபாக்லி’ என்று அழைக்கின்றனர். வருகிற மார்ச் 3ம் தேதி மாஸ்க் விழா கொண்டாடப்படுகிறது. 

குலு, சம்பா பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாஸ்க் திருவிழா அமைதியையும், செழிப்பையும் கொண்டு வந்து, தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் என்று நம்புகின்றனர். நாட்டுப்புற நடனம், மத்தள இசை, பாரம்பரிய பாடல்கள் என கொண்டாட்டம் களைகட்டும். குறிப்பாக கிராமத்து மக்கள் பாரம்பரியமான உடை அணிந்து, மாஸ்க்கை அணிந்துகொண்டு, நெருப்பைச் சுற்றி நாட்டுப்புற நடனத்தை ஆடுவது இவ்விழாவின் ஹைலைட். 

இந்நடனம் அவர்களின் சமூகத்துக்கு நல்லவற்றைக் கொண்டு வந்து, தீயவற்றை அகற்றும் என்று நம்புகின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள யாங்க்பா கிராமத்தில் நடக்கும் மாஸ்க் திருவிழாவில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

திபெத் புது வருடம்

சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம், லடாக், இமாச்சலப் பிரதேசத்தில் வாழும் திபெத்திய மக்களால் கொண்டாடப்படும் திருவிழா இது. திபெத்தின் நாட்காட்டியின்படி புது வருட ஆரம்ப நாட்களில் தொடங்கும் இந்தக் கொண்டாட்டம் 15 நாட்களுக்கு நீடிக்கிறது. முதல் நாளில் கடவுள் வழிபாடு, நடனத்துடன், இபெக்ஸ் எனும் மலை ஆட்டைக் கௌரவிக்கும் பாடலைப் பாடி கொண்டாடுவார்கள். 

இரண்டாம் நாளில் கதிரவன், சந்திரன், மலை ஆட்டின் உருவங்களை மாவில் செய்து வீட்டில் வைப்பார்கள். சமையலறையின் சுவர்களில் அதிர்ஷ்ட சின்னங்களை ஓவியங்களாகத் தீட்டுவார்கள். மூன்றாம் நாள் செழிப்பான விளைச்சலுக்காக சந்திரனிடம் பிரார்த்தனை செய்வார்கள்.

வரும் டிசம்பர் 20ல் ஆரம்பிக்கும் இந்தக் குளிர்கால திருவிழா திபெத்தியர்களால் மட்டுமல்லாமல், திபெத்திய கலாசாரம் பரவியிருக்கும் பகுதிகளிலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. மற்ற இடங்களைவிட இந்த விழா லே-லடாக்கில் மிகச் சிறப்பாக இருக்கும். இந்த விழாவைப் பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் லடாக்கை நோக்கிப் படையெடுக்கின்றனர். 

லோஹ்ரி

பஞ்சாப்பில் பாரம்பரியத்துடன் தொடர்பு கொண்ட ஒரு திருவிழா, லோஹ்ரி. ஆனால், காஷ்மீரிலும் முக்கிய விழாவாக லோஹ்ரி கொண்டாடப்படுகிறது. இதை ‘காஷ்மீரி லோஹ்ரி’ என்றே அழைக்கின்றனர். குளிர்காலத்தின் ஆரம்ப நாட்களில் குங்குமப்பூ அறுவடையைச் சிறப்பிக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது. இரவு நேரத்தில் நெருப்பை மூட்டி, குளிருக்கு இதமாக கேஹ்வா எனும் நறுமணத் தேநீரைப் பரிமாறுவார்கள். 

காஷ்மீரின் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி பாரம்பரியமான பாடல்களைப் பாடி, நடனமாடுவார்கள். மிகுந்த அறுவடைக்குக் கடவுளிடம் நன்றி சொல்வதற்காக தானியங்களைத் தீயில் இடுவார்கள். ஜம்மு காஷ்மீரில் ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் லோஹ்ரி திருவிழா சிறப்பாக இருக்கும். இந்த விழா வரும் ஜனவரி 13ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 

மக்மேளா

கும்பமேளாவுக்குக் கிடைத்த புகழ் வெளிச்சம் மக்மேளாவுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் அதற்கு இணையான ஒரு விழா இது. வருகிற ஜனவரி 3ம் தேதி ஆரம்பித்து, பிப்ரவரி 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது மக்மேளா. இதுவும் பிரயாக்ராஜில்தான் அரங்கேறுகிறது. கங்கை நதிக்கரையில் மக்கள் எல்லாம் ஒன்று கூடி புனித நீராடி, கடவுளின் முன்பு தங்களின் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்திக் கொள்வார்கள். 

குளிர்காலத்தில் புனித நீராடுவதால் ஆன்மிக ரீதியாக நிறைய பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அதாவது, ஒரு வருடமாக செய்த பாவங்கள் எல்லாம் குளிர்கால புனித நீராடுவதால் காணாமல்போய்விடும் என்று நம்புகின்றனர். மத ரீதியான இந்தத் திருவிழாவுக்காக வரும் பக்தர்கள் கங்கை நதிக்கரையில் முகாமிட்டு தங்குவார்கள். அந்த இடத்தில் நெருப்பிட்டு, அதைச் சுற்றி அமர்ந்து பக்தி கீர்த்தனைகளால் அலங்கரிப்பார்கள். பக்தர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும்.

த.சக்திவேல்