பகலில் மட்டும் ஆக்டிவ்வாக இருக்கும் சூரிய குழந்தைகள்!
இது ஓர் அரிய விசித்திர நோய்...
சோலார் கிட்ஸ்... அதாவது சூரிய குழந்தைகள்... பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று சகோதரர்களை இப்படித்தான் ஊடகங்கள் அழைக்கின்றன.ஏனெனில், பகலில் சுறுசுறுப்பாக இருக்கும் இந்தச் சகோதரர்கள் சூரியன் மறைந்தவுடன் நகரவோ, நடக்கவோ முடியாமல் அப்படியே செயலற்றுப் போய்விடுவார்கள். பிறகு மறுநாள் காலையில் சூரிய உதயமான பிறகுதான் இயல்புநிலைக்குத் திரும்புவார்கள். ஒரு விசித்திரமான முடக்கும் நோய் இது என்கின்றனர் மருத்துவர்கள். பகலில் மட்டுமே ஆக்டிவ்வாக இருப்பதால் இந்தச் சகோதரர்கள் சூரிய குழந்தைகள் எனப்படுகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு இவர்களைப் பற்றி தெரிய வந்தபோது உலகமே வியப்பில் ஆழ்ந்தது. அனைத்து ஊடகங்களிலும் செய்தியானார்கள். மருத்துவ உலகமும் இதுகுறித்து ஆராயத்தொடங்கியது. இப்போதும் ஊடகங்களில் இவர்களைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.பாகிஸ்தானின் குவாட்டா நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மியான் குந்தி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஹஷீம். தற்போது இவரின் மூன்று மகன்களுக்குத்தான் இந்த விசித்திர நோய் இருக்கிறது. 23 வயதாகும் சோயிப் அகமது, 19 வயதாகும் அப்துல் ரஷீத், 10 வயதாகும் முகமது இலியாஸ் ஆகியோருக்கு இந்த நோய் உள்ளது. வெளியுலகிற்கு இவர்களைப் பற்றி தெரிய வந்ததும் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.அப்போது தந்தை முகமது ஹஷீம், ‘தன் மகன்கள் சூரியனிடமிருந்து சக்தியைப் பெறுகிறார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் இரவில் இப்படி ஆகிறார்கள்’ எனக் கூறினார்.
ஆனால், மருத்துவர்கள் சூரிய ஒளிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தனர். பகல் நேரத்தில் இருட்டு அறையில் வைத்தாலும், மழைக்காலத்திலும்கூட இவர்களால் சகஜமாக இருக்க முடியும் என்றனர். ஆரம்பத்தில் தந்தை முகமது ஹஷீம் தன்னுடைய மகன்களை உள்ளூர் மருத்துவமனைகளிலும், ஆன்மீகமாக குணப்படுத்தும் இடங்களுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். தன் குழந்தைகள் சூனியத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பியுள்ளார் அவர்.
பின்னர் அவரால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கமுடியவில்லை. உள்ளூர் மருத்துவமனைகளிலும் குணமாகவில்லை. இதன்பிறகு பாகிஸ்தான் அரசாங்கம் சிகிச்சை செலவுகளை ஏற்றுக் கொண்டது.
தொடர்ந்து பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு வந்துள்ளனர். அங்கே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து இந்த அரிய நோயைக் கண்டறிய உழைத்தனர். முதலில் நரம்புத்தசை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்தனர். பின்னர் மூளையில் ஒரு சாத்தியமான நியூரோட்ரான்ஸ்மிட்டர் குறைபாட்டை கண்டறிந்தனர். இதனையடுத்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் இந்தச் சகோதரர்கள் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்தனர். இரவிலும் ஓரளவிற்கு இந்தச் சகோதரர்களால் வாழ முடிந்தது. அதுவரை இரவு எப்படி இருக்கும் எனத் தெரியாதவர்களுக்கு இரவு பத்து மணி வரை சுறுசுறுப்பாக இருக்கும் சூழ்நிலையை மருத்துவர்கள் ஏற்படுத்தித் தந்தனர். அப்படியாக கடந்த சில ஆண்டுகளாக இரவினைப் பார்த்து வருகின்றனர். இருந்தும் இந்தப் பிரச்னை இன்னும் முழுமையாகத் தீரவில்லை.
அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவப் பேராசிரியர் ஜாவேத் அக்ரம் இதுகுறித்து பேசும்போது, ‘இந்தச் சகோதரர்களுக்கு மூளையில் டோபமைன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால்தான் அவர்கள் மாலையில் செயலற்றுப்போகின்றனர். அவர்களுக்கு டோபமைன் மாத்திரை வழங்கப்பட்டதும் அவர்கள் இரவு நன்றாக இருந்தனர்’ என்கிறார்.
ஆனால், விலையுயர்ந்த இந்த மாத்திரையை தொடர்ந்து தன் மகன்களுக்கு வாங்குவது சிரமமாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார் தந்தை முகமது ஹஷீம். இதற்கு அரசு உதவவேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். தற்போது இந்த நோய் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.
பி.கே.
|