சின்மயி மன்னிப்பு கேட்டதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்?



இயக்குநர் மோகன் ஜி Open Talk

மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ரக்‌ஷனா நடித்து வெளிவரவுள்ள படம் ‘திரெளபதி 2’. ஜிப்ரான் இசையில் சின்மயி பாடியுள்ள இதன் முதல் பாடலான ‘எம்கோனே...’ சமீபத்தில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.இதற்கு ரசிகர்கள் பலர், பெண் சுதந்திரம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தட்டிக்கேட்கும் சின்மயி, பெண்களுக்கு எதிரான சுயசாதி திரைப்படங்களை எடுக்கும் மோகன் ஜி-யின் திரைப்படத்தில் பாடியது ஏன் எனக்கேட்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் சின்மயி வெளியிட்ட பதிவில், ‘திரௌபதி 2’ படத்தில் பாடியதற்காக தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டார்.இது தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், சின்மயி வருத்தம் தெரிவிக்க என்ன காரணம் என்பது பற்றி விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

‘டிட்வா’ புயல்போல் இந்த பிரச்சனை கோலிவுட்டில் நிலைகொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் மோகன் ஜியிடம் பேசினோம்.

‘எம் கோனே...’ பாடல் உருவாகிய விதம் பற்றி சொல்லுங்கள்?

கதை எழுதும்போது தீர்க்கமாக முடிவு செய்த விஷயம், 14ம் நூற்றாண்டு கதையாகவும், தென்னிந்தியாவை ஆட்சி செய்த வைசால மன்னர்கள், காலவராய சிற்றரசர்கள் பற்றிய கதையாக எழுத வேண்டும் என்பதுதான்.

மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் காதல் உண்டு. காதல் வழியாக பலவித உணர்வுகளையும், வலிகளையும் சொல்ல முடியும். அப்படியொரு சிச்சுவேஷனில் அமைந்த பாடல் ‘எம் கோனே...’. இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் சிச்சுவேஷன் கேட்டதும் கதையில் பொருத்தமான இடத்தில் உட்கார்ந்துள்ளது என்று உற்சாகமாக டியூன் கொடுத்தார்.

காஞ்சிபுரம் சிற்றரசி திரெளபதிக்கும், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சிற்றரசர் காடவராயனுக்கும் நடக்கும் திருமண வைபவம்தான் சிச்சுவேஷன். பாடல் வரி இல்லாமல் ஒர்க்கிங் டியூனை வெச்சு ஷூட் போனோம். காட்சியைப் பார்த்து வியப்படைந்த ஜிப்ரான் டியூனை மேலும் மெருகேற்றினார். பாடல் செல்வமிரா. விஷுவலுக்காக எழுதிய 
பாடல் அது.

பாடல் காட்சியை எங்கே ஷூட் செய்தீங்க... பார்க்காத லொகேஷன் மாதிரி தெரியுதே?

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல கோட்டைகள் பார்த்தோம். எல்லாமே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் பர்மிஷன் சிக்கலாக இருந்துச்சு. 
அப்போது மும்பையில் பெரிய ஸ்டூடியோ இருப்பதாக கேள்விப்பட்டோம். கலை இயக்குநர் நிதின் தேசாய் ஸ்டூடியோ அது. ‘ஜோதா அக்பர்’, ‘பத்மாவத்’ போன்ற பிரம்மாண்ட படங்களை அங்கு எடுத்துள்ளார்கள். 

கலை இயக்குநர் கமல், பிற்காலச் சோழர்களின் பேக்ரவுண்டை அற்புதமாக உருவாக்கினார். நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ டைம். எனவே ராணுவம் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்துச்சு. படப்பிடிப்புக்காக அங்குள்ள தமிழர் கேப்டன் தமிழ்ச் செல்வன் எம்.எல்.ஏ உதவியாக இருந்தார்.

சின்மயி வருத்தம் தெரிவிக்குமளவுக்கு என்ன நடந்துச்சு?

இயக்குநராக நேர்த்தியாக ஒரு படைப்பு செய்தாலும், ஜிப்ரான் அற்புதமான பாடல் கொடுத்தாலும் என்னுடைய வெற்றியை பொறுக்காதவர்கள் எப்போதும் என்னை ட்ரோல் செய்வது தொடர்கிறது. இப்போது ‘எம் கோனே...’ பாடலின் அழகிய படைப்பை ஜீரணிக்கமுடியாதவர்கள் குழுவாக சேர்ந்து யாரை டார்கெட் பண்ணினால் இந்தப் பாடலை பின்னுக்குத் தள்ளமுடியும் என்று சின்மயி மேடத்தை டார்கெட் பண்ணியதாக நினைக்கிறேன். 

அவருடைய பின்னணியில் சினிமா துறையை சேர்ந்த யாரோ ஒருவர் தூண்டுகிறார் என்பது என்னுடைய கணிப்பு. அவருக்கு அழுத்தம் கொடுத்து எங்களுக்கு எதிராக பேசவைத்துள்ளார்கள் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்தவகையில் இதை சின்மயி மேடம் குரலாக பார்க்காமல், யாரோ சிலர் என்னுடைய சித்தாந்தத்தை, வளர்ச்சியைப் பிடிக்காதவர் செய்த செயலாக பார்க்கிறேன். அதில் பகடைக்காயாக சின்மயி மேடத்தை பயன்படுத்தியுள்ளார்கள்.

பாடல் வைரலாக வேண்டும் என்று நீங்களே செட்டிங் செய்ததாக பேசப்படுகிறதே?

இளையராஜா சார் ஸ்டைலில் மெலடி தரணும்னு உருவாக்கிய பாடல் அது. டியூன் கேட்கும்போது அந்தப் பாடல் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்ற நம்பிக்கை வந்துச்சு. தேனில் ஊறிய பலா போல் பாடலும் மக்கள் மனசுல இடம்பிடிச்சது.செட்டிங் பண்ற அளவுக்கு அந்தப் பாடலில் என்ன விஷயம் இருக்கு..? சரசமான வரிகள், இரட்டை அர்த்த வார்த்தைகள், ஆபாச காட்சிகள் ஏதாவது இருக்கிறதா? அந்த மாதிரி இருந்திருந்தால் பாடிய பிறகு, சின்மயி எதிர்த்தால் அதைப் புரிந்து கொள்ளலாம்.

மாறாக அது இனிமையான பாடல், செழுமையான வரிகள், திருமண வைபவத்தில் இடம் பெறுகிற பாடல். அந்த மாதிரி ஓர் அழகான பாடலை ஒருவரை பாட வைத்து, அவருக்கு சம்பளம் கொடுத்து, அதை படமாக்கிய பிறகு, ‘எனக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துமளவுக்கு என்னை திட்டுங்க’ என்று நாங்களே சொல்வோமா என்று கொஞ்சமாவது யோசித்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் என்மேல எனக்கே நம்பிக்கை இல்லை என்பதைப்போல் ஆகிவிடாதா?

அப்படிச் செய்தால் படைப்பு மீது, இசையமைப்பாளர் மீது நம்பிக்கை இல்லை என்பது போல் ஆகிவிடும். அப்படி ஒரு கேவலமான விஷயத்தை செஞ்சு பிழைக்கணும் என்ற அவசியம் எனக்கில்லை.அந்தப் பாடலுக்கும் அப்படி ஒரு அவசியம் இல்லை. 

அந்தப் பாடலுக்கு நேர்மையான வழியில்தான் வரவேற்பு கிடைத்துள்ளது. நீங்க கேட்ட கேள்வி மாதிரி சிலர் கேட்டிருந்தாங்க. பல ஆயிரம் கமெண்ட்வந்துள்ளன. 99 சதவீதம் பேர் பாடலைக் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. அதுதான் எனக்கு முக்கியம். குறை சொல்கிறவர்கள் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள்.

குறிப்பிட்ட சமூகத்துக்கான படம் செய்கிற இயக்குநர் என்ற அடையாளம் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறதா?

நான் தெளிவாக விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் செய்தேன். அப்போது என் மீது எந்த அடையாளமும் பூசவில்லை. அந்தப் படத்தில் கம்யூனிசம் பேசியிருந்தேன். ‘திரெளபதி’ செய்ததும் என் மீது அடையாளம் பூசப்படுகிறது. காரணம், அதன் கதைக்களம். அது சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம்,நீதிமன்றம் தீர்ப்பளித்த நிகழ்வு என்று பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.

இரு தரப்பு சித்தாந்தங்களை ஏற்படுத்தணும் என்று சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகளிடையே நிர்ப்பந்தம் நிலவிய நேரம் அது. அதனால் என்னை ஒரு பக்கமாகவும், எதிர்த்திசையில் இன்னொரு பிரபல இயக்குநரையும் நிற்க வைத்து இருபிரிவு மக்களிடையே மோதலையும், கசப்பையும் உருவாக்கிவிட்டார்கள். என்மேல் சாட்டப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் நான் காரணமல்ல. 

எனக்கு வடசென்னைதான். நான் வாழும் பகுதியில் மீனவர்கள் அதிகம். அங்கு என்னைப்பற்றி விசாரித்தால், சாதி பார்த்துப் பழகும் ஆள் நான் கிடையாது என்று சொல்வார்கள். சாதி பார்த்து வேலையும் செய்யமாட்டேன். உண்மைச் சம்பவத்தை படமாக்கும்போது என்மீது குறிப்பிட்ட சமூகத்துக்கான இயக்குநர் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டது. 

அந்த பிம்பம் தொடர்ந்து என்மீது கட்டப்படுகிறது. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.நான் என் வேலையை பார்க்கிறேன். தூற்றுகிறவர்கள் அவர்கள் வேலையை பார்க்கிறார்கள். ஒருநாள் என் மீது சுமத்தப்பட்ட தவறான பிம்பம் உடையும்.

உங்கள் மீதான இந்த அடையாளம் உங்கள் வளர்ச்சியை தடுத்துள்ளதா?

கண்டிப்பாக. பல பெரிய நடிகர்கள் என்னுடைய படம் பார்த்து தனிப்பட்டவிதத்தில் பாராட்டியுள்ளார்கள். ஆனால், என்னுடன் சேர்ந்து பயணிக்க பயப்படுகிறார்கள். அதற்கு காரணம் என் மீதான பிம்பம்.என்னுடைய சித்தாந்தம் இறை நம்பிக்கை. அதனாலேயே பல தடைகளை ஏற்படுத்துகிறார்கள். 

அதனால் வருந்தவில்லை. என்னை நம்பி வரும் நடிகர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து அழுத்தமான கன்டென்ட் உள்ள படங்கள் செய்கிறேன். என்னுடைய தொடர் வெற்றி பெரிய நடிகர்களுடன் படம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கு.

எஸ்.ராஜா