குளிர் கால முகவாத அலர்ட்!



குளிர் காலங்களில் வயது முதிர்ந்தோருக்கும், மத்திய வயதினரில் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற இணைநோய்கள் இருப்பவர்களுக்கும் அதிகமான அளவில் ‘முகவாதம்’ ஏற்படுவதைக் காண முடிகிறது. 
முகவாதம் என்பது முகத்தில் உள்ள தசைகளுக்கு உணர்வூட்டும் ‘முக நரம்பில்’ உள் காயம் ஏற்படுவது, வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது போன்றவற்றால் ஏற்படக்கூடும். இதன் விளைவாக பாதிக்கப்பட்டவருக்கு இவை எல்லாம் நிகழும்.

- வாயைக் குவிக்க முடியாது. 
- உதடு ஒரு பக்கமாக இழுத்துக் கொள்ளும். 
- ஒரு பக்க கண்ணை முழுமையாக மூட முடியாது. 
- வாய் வழி எச்சில் வடியும்.
- சரியாக பேச இயலாமல் குளறும். 

உடனே முகவாதமும் பக்கவாதமும் ஒன்றா என அச்சப்பட வேண்டாம். இரண்டும் ஒன்றன்று. பக்கவாதம் - மூளையில் ஏற்படும் ரத்த நாள அடைப்பினால் அல்லது ரத்தக் கசிவால் ஏற்படும். முகவாதத்தில்  மூளையில் எந்த பிரச்னையும் இல்லை. மாறாக, முகத்துக்கு உணர்வளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம் / அழற்சி / வைரஸ் தொற்று ஆகியவற்றால் ஏற்படும் பிரச்னை இது. முகத்திற்கு உணர்வளிக்கும் ஃபேஷியல் நரம்புக்கு  ஐந்து முக்கிய கிளைகள் உண்டு. 

ஒன்று டெம்போரல் கிளை. நெற்றிப் பகுதியில் உள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை இது. முகவாதத்தில், இந்தக் கிளை பாதிக்கப்படுவதால் நெற்றியை சுருக்க இயலாமல் போகும். 

அடுத்து சைகோமேட்டிக் கிளை. இது கண்கள் மற்றும் கன்னப்பகுதியைச் சுற்றியுள்ள தசைகளுக்கு உணர்வளிக்கும். முகவாதத்தில் இந்தக் கிளை பாதிக்கப்படுவதால் கண்களை மூட இயலாமல் சிரிக்க முடியாமல் போகும்.  

மூன்றாவது பக்கல் கிளை. பக்சினேட்டர் தசைக்கு உணர்வளிக்கும் கிளை இது. இதன் விளைவாக கன்னப்பகுதி உணர்வற்றுப் போகும். உணவை சரிவர மெல்ல இயலாது. 
நான்காவது மார்ஜினல் மாண்டிபுலர் கிளை. 

இது கீழ் உதடு மற்றும் தாடை தசைகளுக்கு உணர்வளிக்கும் கிளை. இதன் விளைவாக, கீழ்வாய் தொங்கிப் போகும். கீழ் உதட்டில் இருந்து எச்சில் வடிந்தோடும். கடைசியாக செர்விக்கல் கிளை. இந்தக் கிளை கழுத்தில் இருக்கும் ப்ளாடிஸ்மா தசைக்கு உணர்வூட்டுகிறது.

சரி... முகவாதம் வராமல் இருக்க என்ன செய்யலாம்?   

தரையில் பாய் , தலையணை, ஜமக்காளம், கம்பளம், விரிப்பு போன்றவற்றை விரிக்காமல் ஒரு பக்க கன்னத்தை நேரடியாக குளிர்ச்சியான தரையில் வைத்துப் படுப்பதை தவிர்க்க வேண்டும்.  

கார், பேருந்து, ரயில் பயணங்களில் அதிக நேரம் குளிர்ந்த வாடைக் காற்று காதுகள் மற்றும் கன்னப்பகுதியில் படுமாறு செல்ல வேண்டாம். வீட்டில் உறங்கும் போதும் நேரடியாக ஜன்னல் வழியாக வரும் குளிர்ந்த காற்று முகத்தில் படுமாறு படுப்பதை தவிர்க்கவும். இதை ஏசியின் கீழ் உறங்கும்போதும் தவிர்க்க வேண்டும்.

கடினமான தலையணைக்கு பதில் லேசான தலையணையை பயன்படுத்துங்கள்.  பொதுவாக இது போன்ற குளிர் சீதோஷ்ண நிலை மற்றும் அழுத்தத்தால் விளைந்த முக வாதம் குணமாக 2 முதல் 4 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும். முக நரம்பு உள்காயம் அடைந்து வீக்கம் அடைந்து இருக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. 

முகவாதம் ஏற்பட்டவர்கள் உள்காயத்தை ஆற்றுவதற்குத் தேவையான ஸ்டீராய்டு மருந்தும், வைரஸ் தொற்றுக்கு எதிரான வைரஸ் கொல்லி மருந்துகளும் மருத்துவரின் பரிந்துரைப்படி எடுக்கவும்.  

எளிதாக மென்று விழுங்கக் கூடிய அளவில் சிறிய சிறிய கவளங்களாக உணவை உட்கொள்ள வேண்டும். உண்ணும் உணவு முழு திரவமும் இல்லாமல் முழு திட உணவாகவும் இல்லாமல் கரைத்த கஞ்சியாக உண்பது சிறந்தது. வாய் வறண்டிருக்கும் என்பதால் உணவில் வெண்ணெய் போன்றவற்றை வழ வழப்புக்காக கலப்பது பலன் தரும். உணவை நீண்ட நேரம் எடுத்து மெதுவாக சாப்பிட வேண்டும். 

நீரை பாட்டிலில் பருகுவதை தவிர்த்து விட்டு சிறிய கோப்பையில் பருகுவது நல்லது. வெந்நீர் ஒத்தடம் மற்றும் மசாஜுடன் பிசியோதெரபி அவசியம். மனதை தளர விடாமல் மருத்துவ முறைகளை சரி வரக் கடைபிடித்தால் போதும். நல்ல முன்னேற்றம் சில வாரங்களில் கிடைக்கும்.

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா