மனிதர்கள் கொல்லப்பட வேண்டும் என மனிதர்களையே விரும்ப வைத்த முதல் படம்!



பொதுவாக ஹாலிவுட் படங்களில் டைனோசர், இயந்திர மனிதர்கள் மற்றும் வேற்று கிரக வாசிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் சண்டை ஏற்படும்போது மனிதர்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள்.
மனிதர்கள் வேற்றுகிரக வாசிகளையோ அல்லது டைனோசர்களை வெற்றிப் பெறும்போது ஆர்ப்பரிப்பார்கள். இதற்கு மாறாக உலகில் முதல்முறையாக, மனிதர்கள் தோல்வியடைய வேண்டும்; கொல்லப்பட வேண்டும்  என்று ரசிகர்கள் விரும்பிய படம் ‘அவதார்’தான். 

பண்டோராவாசிகளால் மனிதர்கள் கொல்லப்படும்போது பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தனர். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது ‘அவதார்’. மனிதர்களின் இயற்கைச் சுரண்டலுக்கு எதிரான ஒரு படமாகவும் ‘அவதார்’ மிளிர்கிறது. ‘அவதார்’ மற்றும் ‘அவதார் 2’ ஆகிய இரண்டு படங்களிலுமே மனிதர்கள்தான் வில்லன்கள். மனிதர்களை வில்லனாக வைத்து இவ்வளவு பெரிய வெற்றியைச் சுவைத்திருக்கும் படங்களும் இவையே. 
வரும் டிசம்பர் 19ம் தேதி ‘அவதார்: ஃபயர் அண்ட் ஏஷ்’ எனும் மூன்றாம் பாகம் வெளியாகிறது. அதற்கு முன்பு இரண்டு பாகங்களுக்கும் திரும்பிப் பார்ப்போம். 

அவதார்சினிமா தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி செய்த படம் இது. ‘அவதாரு’க்கு முன்பு அப்படியான தொழில்நுட்பத்துடன் கூடிய இன்னொரு படம் வந்ததே இல்லை.  

குறிப்பாக 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியுள்ளது ‘அவதார்’. இப்படத்துக்கு முன்பு நிறைய படங்கள் 3டியில் வந்துள்ளன. ஆனால், அந்தப் படங்கள் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. அப்படங்களின் 3டி தொழில்நுட்பமும் சுமாராகத்தான் இருந்தன. 

ஆனால், ‘அவதாரி’ன் 3டி செய்த மாயாஜாலத்தை உலகமே கொண்டாடியது. மட்டுமல்ல, ‘அவதாரு’க்குப் பின் ஏராளமான படங்கள் 3டியில் வெளியாகின. உண்மையில் 3டி படம் எப்படியிருக்கும் என்பதை உணர்த்திய முதல் படம் ‘அவதார்’தான். மட்டுமல்ல, சினிமா வரலாற்றில் 3டி கேமராவில் படமாக்கப்பட்ட முதல் படமே ‘அவதார்’தான். 

தவிர, சுமார் 2100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, ரூபாய் 26,288 கோடியை அள்ளியிருக்கிறது, ‘அவதார்’. உலகிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்ற சிறப்பையும் பல வருடங்களாக தன் வசம் வைத்திருக்கிறது இந்தப் படம். 

படத்துக்கான தொழில்நுட்பங்கள் எல்லாம் தயாராக சில வருடங்கள் காத்திருந்தார் ‘அவதார்’ இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். எல்லாம் தயாரான பிறகும் கூட, முன் தயாரிப்புடன் முதல் படம் வெளியாகும் வரைக்கும் நான்கு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. படம் வெளியாகி, திரையரங்கில் ஓடிய பிறகும் கூட மக்கள் மத்தியில் ‘அவதாரு’க்கான மவுசு குறையவே இல்லை. 

ஆம்; 2010ம் வருடத்தில் இணையத்தில் அதிகளவில் டவுன்லோடு செய்யப்பட்ட படமும் இதுதான்.  2010ல் மட்டுமே 1.65 கோடி முறை ‘அவதார்’ டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது.
தொழில்நுட்பத்தில் உச்சத்தை தொட்ட இந்தப் படம் கதையில் எளிமையை நாடியிருந்தது. 

மனிதனான ஜேக் சல்லி பண்டோராவாசிபோல அவதாரம் எடுத்து, பண்டோராவுக்கு அனுப்பப்பட்டு, அங்கே வசிப்பவர்களில் ஒருவராகிறான். மனிதர்களின் இயற்கைச் சுரண்டலுக்காக அனுப்பப்பட்ட் ஜேக் சல்லி, பண்டோராவாசியாக மாறி, மனிதர்களுக்கு எதிராக மாறுவதுதான் படத்தின் கதை என்பது எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். 
ஆனால், இக்கதையை வைத்துக்கொண்டு காட்சிகளில் மேஜிக்கை நிகழ்த்தியிருப்பார் ஜேம்ஸ். 

படத்தில் நடித்தவர்களுக்கும், ஜேம்ஸுக்கும் கூட படம் எப்படி வரப்போகிறது என்பதை முன்பே தீர்மானிக்க முடியவில்லை. அந்தளவுக்கு முன்பின் யாருமே பயணிக்காத ஒரு பாதையில் நடந்து அற்புதத்தைக் கண்டடைந்திருக்கிறார் ஜேம்ஸ். அதனால்தான் மொழி, நாடு என எல்லாவற்றையும் கடந்தது அனைத்து மக்களையும் ஈர்த்தது ‘அவதார்’. 

‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’கடந்த டிசம்பர் 2009லேயே இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார் ஜேம்ஸ் கேமரோன். முதல் பாகத்தைப் போலில்லாமல், இரண்டாம் பாகத்தை விரைவாக எடுத்து, 2015ல் வெளியிடுவது அவரது திட்டம். 

ஆனால், படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடியும்போது கொரோனோ வர, டிசம்பர் 16, 2022ல் வெளியானது, ‘அவதார்: த வே ஆஃப் வாட்டர்’.  
முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகமும் வசூலில் சாதனை படைத்தது. உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது, ‘அவதார் : த வே ஆஃப் வாட்டர்’. இதன் பட்ஜெட், சுமார் 3150 கோடி ரூபாய் முதல் 4150 கோடி ரூபாய் வரை இருக்கும். வசூலோ 21,076 கோடி ரூபாய். 

முதல் பாகமான ‘அவதார்’ ஒரு பில்லியன் டாலர் வசூலை எட்டுவதற்கு 19 நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், இரண்டாம் பாகமோ 14 நாட்களிலேயே ஒரு பில்லியன் டாலரை எட்டிவிட்டது.  இந்திய மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் என்பது 8,995 கோடி ரூபாய். ‘அவதார்: த வே ஆஃப் வாட்டரின்’ கதை எளிமையானது. 

பண்டோராவின் காடுகளில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது ஜேக் சல்லியின் குடும்பம். மனிதர்களால் உண்டான பழைய பிரச்னை ஒன்று விஸ்வரூபம் எடுக்கிறது. இதிலிருந்து தப்பிக்க, நீரில் வாழும் இனத்துடன் அடைக்கலமாகுகிறது ஜேக்கின் குடும்பம். நீர் வாழ் மக்களுடன் சேர்ந்து மனிதர்களை எப்படி ஜேக் எதிர்க்கிறார் என்பதே இதன் கதை. 

இந்த உலகத்திலிருந்து நீரினாலான இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே மூன்று மணி நேரம் வாழ்ந்த மாதிரி ஓர் அனுபவத்தைக் கொடுத்திருப்பார் ஜேம்ஸ் கேமரோன்.  

கதை, விஷூவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பம் தாண்டி இயற்கை சார்ந்த முக்கியமான ஒரு விஷயத்தையும் ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் ஜேம்ஸ். 

திமிங்கிலத்திலிருந்து எடுக்கப்படும் ஓர் அரிய பொருள் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக நாட்களுக்கு உயிர் வாழவும், என்றும் இளமையாக இருக்கவும் அந்தப் பொருளைப் பயன்படுத்தப்படுகிறது. 

இதற்காகவே திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவதாகச் சொல்கின்றனர். இந்த திமிங்கல வேட்டையை அட்டகாசமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம். 
‘டைட்டானிக்’ புகழ் கேட் வின்ஸ்லெட், ரொனால் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நீருக்கடியிலான சண்டைக்காட்சிகளை டூப் இல்லாமல் வின்ஸ்லெட்டே செய்திருக்கிறார். 

மட்டுமல்ல, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸீன் சாதனையையும் முறியடித்தார். ‘மிஷன் : இம்பாசிபிள் - ரோக் நேஷன்’ படத்துக்காக தொடர்ந்து 6 நிமிடங்கள், நீருக்கடிக்கடியிலான சண்டைக்காட்சியில் நடித்தார் டாம். 

ஆனால், கேட் வின்ஸ்லெட்டோ ‘அவதார் 2’வுக்காக தொடர்ந்து 7 நிமிடங்கள், 15 நொடிகள் நீருக்கடியிலான சண்டைக்காட்சியில் நடித்திருக்கிறார்.நியூசிலாந்தில் வாழும் மாவோரி இன மக்களை அடிப்படையாக வைத்து, நீரில் வாழும் மெட்கயினா மக்களை வடிவமைத்திருக்கிறார் ஜேம்ஸ். மாவோரி மக்களைப் போலவே படத்தில் வரும் நடிகர்களுக்கு டாட்டூ முதல் சிகையலங்காரம் வரை அனைத்தையும் செய்திருக்கின்றனர். 

கடந்த 2013ம் வருடத்திலேயே படத்துக்கான திரைக்கதை வேலையை முடித்துவிட்டார் ஜேம்ஸ். படத்தின் பெரும்பகுதி நீருக்குள் படமாக்க வேண்டும். அப்போது நீருக்குள் துல்லியமாகப் படமெடுப்பதற்கான கேமரா தொழில்நுட்ப வசதிகள் இல்லையென்பதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அப்போது நீரின் ஆழத்துக்குப் போய் யாருமே படப்பிடிப்பு நடத்தவில்லை என்பதால் முன்மாதிரியும் இல்லை. 

அதனால் கேமரா குறித்த பரிசோதனைகளில் இறங்கினார் ஜேம்ஸ். ‘சோனி’ நிறுவனம் ஜேம்ஸுக்கு உதவ முன்வந்தது. ஜேம்ஸுடன் இணைந்து ‘வெனிஸ்’ என்ற கேமராவை வடிவமைத்தது, ‘சோனி’. 

இக்கேமராவின் மூலமாக ‘அவதார் 2’ மற்றும் இம்மாதம் வெளியாகும் ‘அவதார் 3’யையும் படமாக்கியிருக்கிறார் ஜேம்ஸ். தொழில்நுட்ப ரீதியாக புதுமையைப் படைத்ததோடு மட்டுமல்லாமல், இப்படத்துக்காக உயிரைப் பணயம் வைத்து ஆய்வுகளைச் செய்திருக்கிறார்.

பூமியிலேயே ஆழமான கடல் பகுதியான மரியானா டிரெஞ்சுக்குள் சென்று ஆய்வுகளைச் செய்திருக்கிறார் ஜேம்ஸ். அங்கே கண்ட காட்சிகளை முன் மாதிரியாக வைத்து, இப்படத்துக்கான நீர்நிலை உலகை வடிவமைத்திருக்கிறார். 

தவிர, விக்டோரியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பவளப்பாறை உயிரியல் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, படத்தில் வரும் கடல் உயிரினங்களை வடிவமைப்பு செய்திருக்கிறார் ஜேம்ஸ். அதனால்தான் படத்தில் வரும் உயிரினங்கள் நம்பகத்தன்மையுடன் இருந்தன.

த.சக்திவேல்