என் மாமனார் இருந்திருந்தா நான் நடிப்பதைப் பார்த்து வருத்தப்பட்டிருப்பார்..!



கையில் ஒரு சுருட்டு, ஜாக்கெட் இல்லை, ஒரு டிவிஎஸ் XL சகிதமாக கம்பீரத் தோற்றத்துடன் கவனம் ஈர்த்திருக்கிறார் இந்த அங்கம்மாள். ‘என் உடல், என் உடை, என் உரிமை...’ என குரல் எழுப்பி நம் வீடுகளில் அந்தக் காலத்தில் வாழ்ந்த அல்லது இப்போதும் ஆங்காங்கு வாழ்கின்ற அப்பத்தாக்கள், அம்மாச்சிகள், பாட்டிகளை நினைவு படுத்துகிறார் கீதா கைலாசம். 

இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகளான கீதா கைலாசம், கமர்ஷியல் மற்றும் கற்பனை உலகத்திலிருந்து வெளியேறி எதார்த்த கதைகளை படைக்கத் துவங்கிய தருணத்தில் தன்னை கோடம்பாக்கத்தின் எதார்த்தமான அம்மாவாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது ‘அங்கம்மாள்’ படத்தின் மூலம் போஸ்டரிலேயே ஆச்சர்யம் ஏற்படுத்தியிருக்கிறார்.அம்மா நடிகை என்பது அவ்வளவு எளிதல்ல. எப்படி அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டீர்கள்?

என்னுடைய 40களில்தான் நான் நடிக்கவே ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் சின்னச் சின்ன குழந்தைகளுக்கு, டீன் ஏஜ் பசங்களுக்கு அம்மாவாகத்தான் நடிக்க ஆரம்பிச்சேன். முதல் படமே எனக்கு அம்மா கேரக்டர்தான். 
தொடர்ந்து நிறைய அம்மாவாகத்தான் பாத்திரங்கள் என்னைத் தேடி வர ஆரம்பித்தது. வரிசையாகவே ஹீரோயினுக்கு அம்மா, ஹீரோவுக்கு அம்மா... இப்படி வர ஆரம்பிக்க அதில் எனக்கான கேரக்டர், எனக்கு முக்கியத்துவம் இருக்கிற பாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினேன். 

ஒவ்வொரு கதாபாத்திரமா எனக்கு வர ஆரம்பிச்சு, நான் தொடர்ந்து நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான் இன்னும் சீக்கிரமே நடிக்க வந்திருக்கலாமோ அப்படின்னு தோணுது.
மிகப்பெரும் சினிமா குடும்பத்தின் மருமகள்..?

அப்பாவுக்கு தஞ்சை. நான் பிறந்தது மதுரையில். திருமணமானது சென்னையில். அப்பா ரயில்வேயில் இருந்து ஓய்வு பெற்றவர். அப்பாவும் பாலச்சந்தர் மாமாவும் பால்யகால நண்பர்கள். சேர்ந்து மேடை நாடகம் எழுதி இயக்கியிருக்காங்க. எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் பாலச் சந்தர் மாமாதான். 

எனக்கு எழுதப் பிடிக்கும். நிறைய எழுதுவேன். நாடகங்கள், திரைக்கதைகள் எழுத பிடிக்கும். அப்படியான ஒரு ஆர்வத்துடன் இயக்குநர் சிகரத்தின் குடும்பத்தில் மருமகளாக வரவேண்டிய சூழல். அந்த வேளையில்தான் திருமணமான புதிதில் ‘கவிதாலயா’ தயாரிப்பில் ‘சன் டிவி’யில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம்’ உள்ளிட்ட சீரியல்களின் தயாரிப்பு மேற்பார்வை செய்யும் வாய்ப்பு அமைஞ்சது. 

அதே சமயம் என்னுடைய ஆசை கதை எழுதுவது. ஆனால், உங்களுக்குதான் தெரியுமே... தயாரிப்பு என்பது காலைச் சுத்தின பாம்பு மாதிரி. நம்மை அவ்வளவு சீக்கிரத்தில் விடாது. என் கணவர் கைலாசம் கூட நிறைய முயற்சி செய்தார், அப்பா வழியிலேயே இயக்குநராக வரணும் அப்படின்னு. ஆனால், இரண்டு பேருமே இந்தத் தயாரிப்பு சூழலில் மாட்டிக்கிட்டோம். ஆனாலும் அவர் விடலை. தொடர்ந்து டாக்குமெண்டரி ஃபிலிம்ஸ் டைரக்ட் செய்தார்.

குழந்தைகள் பெரிதானாங்க. ‘உனக்கு ஆசை நடிப்பதுதானே? அதைச் செய்’ அப்படின்னு என்னை ஊக்குவிக்க ஆரம்பிச்சாங்க. அப்படித்தான் ‘சார்பட்டா பரம்பரை’ படம் அமைந்தது. 
தொடர்ந்து ‘வீட்ல விசேஷம்’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘மாமன்னன்’, ‘லவ்வர்’, ‘ஸ்டார்’, ‘லப்பர் பந்து’, ‘இட்லி கடை’ வரை சுமார் 30 படங்களுக்கு மேலே நடிச்சுட்டேன். இதில் பெரும்பாலும் புதுமுக இயக்குநர்கள்தான்.

சினிமாவில் நீங்கள் நினைத்து வந்த இடம் கிடைத்துவிட்டதா?

நல்ல நடிகை என்கிற இடம் கிடைச்சிருக்கு. எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் நிறைய வருது. ஆனால், என்னை மையப்படுத்தி எழுதுகிற அம்மா கேரக்டர் இன்னும் வரலை. அந்தளவுக்கு நான் இன்னும் நடிப்புல முத்திரை பதிக்கலை அல்லது இயக்குநர்களுக்கு அந்த நம்பிக்கையை ஏற்படுத்தலைனு நினைக்கறேன். இதை மாற்றும் விதமாதான் இப்ப வரும் அம்மா கேரக்டர்ல என்னுடைய பெஸ்ட்டை கொடுக்கறேன்.

உண்மையைச் சொன்னால் , என்னைத் தேர்வு செய்துவிட்டு அப்பா நடிகரைத் தேடும் பொழுதுதான் அம்மா நடிகையாக எனக்கு வெற்றி. இப்ப குறிப்பிட்ட படத்தோட அம்மா கேரக்டர்ல நான் நடிக்கவில்லை என்றாலும் யாரோ நடிப்பாங்க அப்படிங்கற நிலைதான் இருக்கு. அந்த மாற்றம் நிகழணும். அது நடந்தால்தான் நான் நினைச்ச இடம் கிடைச்சதா அர்த்தம்.

‘அங்கம்மாள்’..?

என்னை அங்கமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைக்கதைதான் ‘அங்கம்மாள்’. கதைப்படி எனக்கு ரெண்டு பசங்க. என் உடை என் உரிமை, நான் இப்படிதான் என்கிற கதாபாத்திரம். 
கதை ஆரம்பிக்கிறதுக்கு முன்பு ஷூட்டிங் எடுக்கற இடத்தில் சுந்தரி என்கிற ஒரு அம்மா இருந்தாங்க. அவங்களை கிட்டத்தட்ட ஒரு மாதம் என்னை கவனிக்கச் சொன்னாங்க. நிஜமாகவே அவங்களைப்போல் மாறி நடிப்பதெல்லாம் முடியாத காரியம். அவ்வளவு சவாலான கதாபாத்திரம். 

ரொம்ப ஒல்லியா வேற இருப்பாங்க. காலையில் எழுந்ததிலிருந்து உட்காராமல் விவசாய வேலை முதற்கொண்டு பார்க்கற ஒரு கேரக்டர். இந்த மாதிரி நிறைய கிராமத்து பெண்களின் சேர்ந்த கலவைதான் இந்த ‘அங்கம்மாள்’. எக்காலத்திலும் பெண்கள் அவங்க வசதிக்குதான் உடை அணியணும், அடுத்தவங்களுக்காக இல்லை. அதைத்தான் இந்த ‘அங்கம்மாள்’ வலிமையாக பேசுவாள்.

படத்தில் இதுவரை இல்லாத போல்ட் உடைகள்..?

எழுத்தாளர் பெருமாள் முருகன் சாருடைய கதையை இயக்கியிருக்கார் விபின் ராதாகிருஷ்ணன். எனக்கு என் கேரக்டருக்கு நிறைய சப்போர்ட் செய்தாங்க. அந்த போல்ட் கேரக்டருக்கு என்னை பொறுமையாக தயார் செய்தாங்க. தான்யா பாலகிருஷ்ணன்தான் காஸ்டியூம், அவங்க கொடுத்த சப்போர்ட்தான் இந்தக் கேரக்டருக்கு மிகப்பெரிய பலம். ஜாக்கெட்தான் இல்லை. 

ஆனால், பிளவுஸ் இல்லாமல் புடவை கட்டினாலும் மேல்பாகத்திற்கு உறுத்தாமல் கவர் செய்து எனக்கு எங்கேயும் இடைஞ்சலா இல்லாமல் புடவை கட்டிவிட்டாங்க. சுற்றி 100 பேர் இருந்தாலும் சங்கடப்படுத்தாத மாதிரி புடவை கட்டியிருப்பேன். ஷூட்டிங் ஆரம்பிச்சு ஒரு நாலஞ்சு நாட்கள் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. முதல் முறை இல்லையா... அந்த சங்கடம் நாளடைவில் குறைஞ்சிடுச்சு. பிறகு கேரக்டருக்குள் போயிட்டேன். 

இயக்குநர் கேபி இப்போது நீங்கள் நடிக்கும் வேளையில் இல்லை என்கிற வருத்தம் இருக்கா?

அவர் இயக்கத்தில் நடிக்க முடியலையே என்கிற வருத்தமும் இருக்கு. நிச்சயம் அவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பார். ஆனால், கொஞ்சம் வருத்தமும் அடைஞ்சிருப்பார். இப்படிப்பட்ட நடிப்பு எனக்குள் இருக்கறதை அவர் இருக்கும் வரை நான் காட்டிக்கவே இல்லையே... அதற்கே வருத்தப்பட்டிருப்பார். உண்மைதான். நிச்சயம் அவர் பாராட்டுகளையும் ஆசீர்வாதங்களையும் மிஸ் செய்கிறேன். என் குடும்பம் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். அதிலும் நான் நடிக்கிற படங்கள் பெரும்பாலும் சென்னைக்கு வெளியேதான். 

பல நாட்கள் வெளியூரில் இருப்பேன். நான் என் கனவுகள் நோக்கி எந்த தடையும் இல்லாம பறக்கறேன். இதற்கெல்லாம் என் குடும்பம்தான் காரணம். அவங்க கொஞ்சம் முகம் சுளித்தாலோ அல்லது நான் நடிப்பதற்கு முட்டுக்கட்டையோ போட்டிருந்தா அது என் நடிப்பை பாதிக்கும். மனநிலையை குலைக்கும்.

அப்படி எதுவுமே நிகழலை. அவ்வளவு ஆதரவா என் குடும்பம் இருக்கு. இப்பவும் அடுத்தடுத்து ஷூட் போயிட்டு இருக்கு. நீலம் தயாரிப்பிலேயே ஒரு படமும் ஷூட் போயிட்டு இருக்கு. ‘அங்கம்மாள்’ படத்துக்கு விருது கிடைக்கும் அப்படின்னு சொல்றாங்க. இந்த வார்த்தையே எனக்கு மிகப்பெரிய விருது மாதிரிதான் இருக்கு.

செய்தி:ஷாலினி நியூட்டன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்