இந்த ரயிலில் மட்டும் பயணிகளுக்கு மூன்று வேளை உணவும் இலவசம்!
பொதுவாக நாம் தொலைதூர ரயில் பயணங்கள் என்றால் ஒன்று உணவை வீட்டிலேயே தயார் செய்து கையுடன் எடுத்துச் செல்வோம்; அல்லது வழியில் உள்ள ரயில் நிறுத்தங்களிலோ, ரயிலின் உள்ளே கொண்டு வரப்படும் உணவுகளையோ விலை கொடுத்து வாங்கி உண்போம். இதுவே, ‘வந்தே பாரத்’, ‘ராஜதானி’, ‘தேஜாஸ்’ போன்ற விரைவு ரயில்களில் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போதே உணவுக்கான கட்டணத்தைச் செலுத்தும் ஆப்ஷன் இருக்கின்றன. அவ்வளவே!
 ஆனால், இவை எதுவும் இல்லாமல் இந்தியாவில் ஒரேயொரு விரைவு ரயிலில் மட்டும் மூன்று வேளை உணவும் பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுவும் சுமார் முப்பது ஆண்டுகளாக இந்த சேவை தொடர்வது சமீபத்தில் வைரலாகி இருக்கிறது. அந்த விரைவு ரயிலின் பெயர், ‘சச்கண்ட் எக்ஸ்பிரஸ்’ (Sachkhand Express). மகாராஷ்டிராவின், நான்தேட் நகருக்கும் பஞ்சாப்பின் அமிர்தசரஸிற்கும் இடையே தினசரி இந்த ரயில் இயக்கப்படுகிறது.
 அதாவது நான்தேட்டில் உள்ள ஹசூர் சாஹிப் குருத்வாராவையும், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலையும் இணைக்கும் விதமாக இந்த ரயில் இயங்குகிறது. நான்தேட்டில் இருந்து சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அமிர்தசரஸ். இவற்றுக்கு இடையிலான பயண தூரம் 33 மணிேநரம். காலை 9.30 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மறுநாள் இரவு 9.30 மணிக்கு செல்கிறது. வழியில் மொத்தம் 39 ரயில் நிலையங்களைக் கடக்கிறது.
 இந்த ரயிலில் சாதாரண பொதுப் பெட்டிகளும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், ஏசி பெட்டிகளும் இருக்கின்றன. இதிலுள்ள அனைத்து பயணிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் ஒரே மாதிரியான தரம் நிறைந்த உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.இதில் அரிசி சாதம், பருப்பு, கொண்டக்கடலை மசாலா, கிச்சடி, உருளைக்கிழங்கு மற்றும் காலிஃப்ளவரில் செய்த பொரியல் என வெரைட்டியாகத் தரப்படுகின்றன.
 இதனால், பயணத்தின் போது உணவுகளை வெளியில் ரயில் நிறுத்தங்களில் பணம் கொடுத்து வாங்கவேண்டிய அவசியமில்லை. உணவுகளை வீட்டில் சமைத்து சுமந்து கொண்டு போகவும் தேவையில்லை. பயணிகள் டிபன் பாக்ஸ் அல்லது ஒரு தட்டு மட்டும் எடுத்துவரும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தற்போது இதனை அனைத்து பயணிகளும் சந்தோஷமாக வாங்கி உண்கின்றனர்.அதேபோல் இந்த இலவச உணவுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இந்த இலவச உணவு என்பது சீக்கியர்களின் பாரம்பரியமான, ‘லங்கர்’ எனும் சமூக சமையலறை மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த சச்கண்ட் எக்ஸ்பிரஸ் பயணிக்கும் தடத்தில் உள்ள முக்கிய நகரங்களில் செயல்படும் குருத்வாராக்களில் இந்த உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு சீக்கிய தன்னார்வலர்களால் விநியோகம் செய்யப்படுகிறது.அதுவும் ஒரே இடத்தில் இந்த உணவு விநியோகிக்கப்படு வதில்லை. தில்லி, குவாலியர், போபால், லூதியானா, ஜான்சி, பர்பானி, ஜல்னா உள்ளிட்ட இடங்களில் வழங்கப்படுகிறது.
இந்தச் சேவை ஒரு நாள், ஒரு வேளை கூட இடைவெளி விடாமல் நடந்து வருவதுதான் ஆச்சரியமானது. இதற்காக தெற்கு மத்திய ரயில்வே நிர்வாகம் அனுமதியும் வழங்கியுள்ளது. அப்படியாக இந்த உணவு விநியோகத்திற்காகவே போதுமான நேரம் அந்தந்த ரயில் நிலையங்களில் சச்கண்ட் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படுகிறது.
இதற்குக் காரணம், இந்த வழித்தடம் சீக்கியர்களின் வரலாறு மற்றும் ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததுதான். அதாவது பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் மறைந்த இடமாக நான்தேட் உள்ளது.
இது சீக்கியர்களுக்கு புனித இடமாகும். அதேபோல் அமிர்தசரஸில் சீக்கிய மதத்தின் புனிதத் தலமான பொற்கோயில் உள்ளது. இதனால் சீக்கியர்கள் இந்த வழித்தடத்தில் அதிகம் பயணிக்கின்றனர். இந்நிலையில் சீக்கியர்களின் குருத்வாரா அவர்களுக்கு உணவினை இலவசமாக வழங்க முன்வந்தது.
உணவு வழங்கும்போது ரயிலில் பயணம் செய்யும் சீக்கியர் அல்லாதவர்களுக்கு உணவு வழங்காமல் போனால், வெளியில் உணவு வாங்குபவருக்கும், உணவு கிடைக்காதவருக்கும் தர்மசங்கடமாக இருக்கும்.
அதைத் தவிர்க்கவே ரயிலில் பயணிக்கும் அனைவருக்கும் ஒரே வகையான உணவு வகைகளை இலவசமாக வழங்கத் தொடங்கியது. அப்படியாக 1995ம் ஆண்டு தொடங்கிய இந்த இலவச உணவு சேவை இப்போதுவரை சுமார் 30 ஆண்டுகளாக தொடர்கிறது.
கண்ணம்மா பாரதி
|