ஏன், முனீஸ்காந்துக்கு ஜோடியா நடிக்கக் கூடாதா?
எளிமை, இனிமை என நீண்ட நாள் பழகிய தோழமைபோல் சகஜமாகப் பழகக்கூடியவர் விஜயலட்சுமி. ‘சென்னை 28’ படத்தில் அறிமுகமாகி ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘பிரியாணி’ உட்பட ஏராளமான படங்களில் தன் ஆளுமையை நிரூபித்தவர். திருமணத்துக்குப் பிறகு சினிமா பக்கம் வராமல் இருந்தவர் தற்போது ‘மிடில் கிளாஸ்’ செய்துள்ளார். ப்ரொமோஷன் பிசியில் இருந்த விஜியிடம் பேசினோம்.முனீஸ்காந்த் ஜோடியாக விஜயலட்சுமி நடிக்கிறாரா... இந்தக் கேள்வி சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்படுகிறதே?  இயக்குநர் கிஷோர் கதை சொல்லும்போது அன்பு ராணி என்ற என்னுடைய கேரக்டர் பிடிச்சிருந்துச்சு. அந்த கேரக்டரில் ஆக்டிங் ஸ்கோப் நிறைய இருந்துச்சு.பொதுவாக கதை கேட்கும்போது ஆடியன்ஸ் மனப்பான்மையில் இருந்துதான் கதை கேட்பேன். அதுதான் என்னுடைய முதல் டிக் மார்க். இரண்டாவது என்னுடைய கேரக்டருக்கான முக்கியத்துவம் எவ்வளவு இருக்கிறது என்று யோசிப்பேன். மூன்றாவதாக ஆர்ட்டிஸ்ட், டீம் பற்றி யோசிப்பேன். ‘முனீஸ்காந்த் பக்கத்தில் நீங்க குட்டி சைஸில் தெரிவீங்க’ என்று நிறைய பேர் கமெண்ட் பண்ணினார்கள். யார் எப்படி விமர்சனங்கள் செய்தாலும் அது என்னை பாதிக்காது. படம் பார்க்கும்போது எங்களுடைய ஜோடி பொருத்தத்தை ரசிப்பீங்க.  முனீஸ்காந்த்துடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?
முனீஸ்காந்த் சார் அற்புதமான நடிகர். மனைவிக்கு பயப்படும் சராசரி கணவன் கேரக்டரில் பிரமாதப்படுத்தி இருக்கார். என்னுடைய கேரக்டர் ‘அறிவில்லை...’ என்று கணவரை கேள்வி கேட்டு டாமினேட் பண்ணும் கேரக்டர். அவருடைய கேரக்டர் சம்பாதித்த பணத்தை சிக்கனமாக செலவு செய்யும் கேரக்டர். எதையும் நேரடியாக பேசமாட்டார்.
இந்தக் கதைக்காக என்ன ஹோம் ஒர்க் செய்தீங்க?
நார்மலா நான் அதிகம் பேசுகிற கேரக்டர் கிடையாது. துடுக்குத்தனமாக, கேஷுவலாக பேசுவதுதான் என்னுடைய சுபாவம். கேரக்டருக்காக என்னை நானே மாற்றிக்கொண்டேன்.
என்னுடைய குரல் ‘கீச் கீச்’ என்று இருக்கும்.
ஆனால், கேரக்டருக்காக அழுத்தம் கொடுத்து பேசணும். ஒரு காட்சியில் கோபம் பொங்கும். இன்னொரு காட்சியில் சிரிப்பு மலரும். அதையெல்லாம் செய்தது சந்தோஷம். ஏனெனில், என்னிடம் இல்லாத குணங்களை திரையில் பார்க்கும்போது எனக்கு மட்டுமல்ல, அது ரசிகர்களுக்கும் புது அனுபவமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் மிடில் கிளாஸ் மனநிலை இருந்துள்ளதா?
மிடில் கிளாஸ் வாழ்க்கையோடு கனெக்ட்டாகி இருக்கிறேனா என்பதைவிட வாழ்க்கையோடு கனெக்ட்டாகி இருக்கிறேன். என் வீட்டு சமையலறை என்னுடைய கன்ட்ரோலில் இருக்கும். பொருட்கள் இருக்கும் இடத்திலிருந்து சமையலறையை சுத்தம் செய்வதிலிருந்து எல்லாமே என்னுடைய கையில் இருப்பது பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும்.
அதே சமயம் வீட்டுக்குள் மட்டுமே இல்லாமல் வெளிவாழ்க் கைக்கும் என்னால் அடாப்ட் ஆக முடியும். அப்படி எல்லா தரப்பையும் எப்படி பேலன்ஸ் பண்ணணும் என்று தெரியும். அது ஒரு தெரபி மாதிரி. நிறையப் பேருக்கு அது தெரியாது. அதாவது ஒரு வேலையை பிடிச்சுப் பண்ணினால் ரொம்ப ஜாலியாக செய்யமுடியும். ஒரு வேலை பிடிக்காமல் செய்தால் உலகமே இருண்ட மாதிரி தெரியும். இந்தத் தலைமுறையில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கிறார்கள். இந்த மாற்றத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்த மாற்றத்துக்கு காரணம் சிலர் அது என்னுடைய உரிமை என்று போராடினார்கள். இன்னொரு பிரிவு கூடுதல் பணம் இருந்தால் குடும்பத்தை சுமுகமாக கொண்டுபோகலாம் என்ற விழிப்புணர்வுடன் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். பண விஷயத்தில் இரண்டு பிரிவு இருக்கிறது. தேவை இருக்கிறதோ, இல்லையோ பொருள் ஈட்டுவது என்னுடைய அடையாளம் என்று சொல்லும் ஒரு பிரிவு; இன்னொரு பிரிவு தேவைகளுக்காக சம்பாதிக்கிறார்கள்.
குடும்பக் கதையில் பிடித்த படம்?
‘தலைவன் தலைவி’. அந்த குடும்பத்தில் கணவன், மனைவி இடையே எந்த பிரச்னையும் இருக்காது. அவர்களைச் சுற்றி இருக்கிறவர்களால்தான் பிரச்னைகள் வரும். அது எப்படி தீர்க்கப்பட வேண்டும் என்று அழகாக சொல்லியிருந்தார்கள்.
மிடில் கிளாஸ் வாழ்க்கையில் சேமிப்பு ஒரு பகுதி. நீங்க எப்படி?
எனக்கு சேமிப்பு பிடிக்காது. அதில் நம்பிக்கையும் கிடையாது. அதை ஒரு ஸ்கேம் மாதிரி நினைக்கிறேன். சிலருக்கு அது சரியாக இருந்தால் சேமிப்பதில் தவறில்லை. சேமிப்பு இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம் என்றால் அது தப்பில்லை. ஆனால் அப்படி வாழ்ந்தவர்கள் கூட சில நேரங்களில் வீடு, வாசல் இழந்திருக்கிறதைப் பார்க்கிறோம்.
பணம் இல்லாமலும் என்னால் சந்தோஷமாக வாழ முடியும். ஏனெனில், நாளைய தினம் குறித்து நான் கவலைப்படமாட்டேன். இன்று என் தேவைகள் சந்திக்கப்படும்போது அதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னிடம் அதிக பணம் இருந்த காலமும் உண்டு. எதுவுமில்லை என்ற காலத்தையும் கடந்து வந்துள்ளேன். சந்தோஷமான மனநிலைதான் வாழ்க்கைக்கு அவசியம்.
ஏன் தொடர்ந்து படம் செய்வதில்லை?
இரண்டு வருஷத்துக்கு முன்பே படங்கள் வேண்டாம் என்ற முடிவில் இருந்தேன். அதையும் மீறி நிறைய கதைகள் வரும். மனசுக்கு பிடிச்ச மாதிரி கதைகளில் நடித்தால் போதும் என்ற முடிவில் இருந்தேன். சொல்லப்போனால் தொடர்ந்து நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ‘மிடில் கிளாஸ்’ பிடிச்சிருந்ததால் பண்ணினேன். ஒருவகையில் இது நான் செய்யும் கடைசி படம் என்று கூட சொல்லலாம்.
அப்பா, கணவர் மாதிரி உங்களுக்கு டைரக்ஷன் ஆசை இருக்கிறதா?
வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் முக்கியத்துவங்கள் மாறும். அடுத்த என்ன செய்யலாம் என்ற தேடல் இருக்கும். அதுமாதிரியான ஒரு இடத்தில்தான் நான் இப்போது இருக்கிறேன்.
எஸ்.ராஜா
|