ஃபுட்பால் ப்ளேயர் அல்ல... இவரது பெயரும் டேவிட் பெக்ஹாம் அல்ல...



இனி இவர் சர் டேவிட் பெக்ஹாம்!

டேவிட் பெக்ஹாமை தெரியாதவர்களே இருக்கமுடியாது. உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டனாக இருந்தவர்.  

சமீபத்தில் அவருக்கு பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸால், ‘சர்’ பட்டத்தை அளிக்கும் நைட்ஹுட் விருது வழங்கப்பட்டுள்ளது. 
அதனால், இனி அவர் வெறும் டேவிட் பெக்ஹாம் அல்ல. சர் டேவிட் பெக்ஹாம். இந்த நைட் பட்டம் பெறுவதன் மூலம் பெக்ஹாம் அரசியல், வணிகம், கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் சாதனையாளர்களின் குழுவில் ஒருவராக இணைந்துள்ளார். 

அதென்ன நைட்ஹுட் பட்டம்? 

நைட்ஹுட் என்பது சிறந்த வீரர் என்பதை குறிக்கும் கௌரவ பட்டம். அதாவது வீரர்கள் செய்த சாதனைகள் காரணமாக மன்னர்களும், ராணிகளும் அளிக்கும் வெகுமதியே இந்த கௌரவ பட்டம். பிரிட்டனில் இது நீண்டகாலமாக வழங்கப்பட்டு வருகிறது.சமீபமாக கலை, சமூக சேவை, விளையாட்டு, வணிகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும் இந்தப் பட்டம் அளிக்கப்படுகிறது. 
ஏழு முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியனான சர் லூயிஸ் ஹாமில்டன், இரண்டுமுறை விம்பிள்டன் சாம்பியன் சர் ஆண்டி முர்ரே, இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை டேம் கெல்லி ஹோம்ஸ் ஆகியோர் இந்த கௌரவத்தைப் பெற்ற பிரபல விளையாட்டு வீரர்களில் அடங்குவர். 

இந்த நைட்ஹுட் பட்டம் பெற்ற பிறகு ஓர் ஆணுக்கு சர் என்ற பட்டம் வழங்கப்படுகிறது. அவரின் மனைவி லேடி என்ற மரியாதைக்குரிய பட்டத்தைப் பயன்படுத்தலாம். அந்தவகையில் இனி பெக்ஹாமின் மனைவி விக்டோரியா, லேடி விக்டோரியா பெக்ஹாம் என அழைக்கப்படுவார்.அதேபோல் பெண்களுக்கு வழங்கப்படும் பட்டத்தின் பெயர் ‘டேம்’. ஆனால், அவர்களின் துணைக்கு மரியாதைக்குரிய பட்டம் எதுவும் வழங்கப்படுவதில்லை. 

ஏன் டேவிட் பெக்ஹாமிற்கு இந்தப் பட்டம்? 

இதற்குமுன் பெக்ஹாம் கடந்து வந்த பாதை முக்கியமானது. 1975ம் ஆண்டு லண்டனில் பிறந்தவர் டேவிட் ராபர்ட் ஜோசப் பெக்ஹாம். இவரின் தந்தை டேவிட் எட்வர்ட் ஆலன். தாய் சாண்ட்ரா ஜார்ஜினா. டேவிட் பெக்ஹாமின் பெற்றோர் இருவருமே கால்பந்து ரசிகர்கள். அதனால் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து வீரர் சர் ராபர்ட் சார்ல்டனின் நினைவாக தங்களுடைய மகனுக்கு நடுப்பெயராக ராபர்ட்டை சேர்த்து வைத்தனர். 

இருவரும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஆதரவாளராக இருந்தனர். இதற்காக மான்செஸ்டர் யுனைடெட் அணி விளையாடும் உள்ளூர் போட்டியைக் கண்டுகளிக்க லண்டனில் இருந்து 320 கிேலாமீட்டர் பயணம் செய்து ஓல்டு டிராஃபோர்டுக்கு செல்வார்கள்.

இதனால் டேவிட் பெக்ஹாமிற்கு சிறு வயதிலேயே கால்பந்தின் மீது அதீத ஆர்வம் வந்தது. மான்செஸ்டர் யுனைடெட் அணியை அதிகம் நேசித்தார். தன்னுடைய தொழில்முறை கிளப் வாழ்க்கையை அவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்தே தொடங்கினார். 

அப்போது அவருக்கு வயது 17.1992ல் இருந்து 2003ம் ஆண்டு வரை 11 ஆண்டுகள் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்தார். இதில் ஆறு முறை பிரிமீயர் லீக் கோப்பை வென்ற அணியில் மின்னினார். அதேபோல் யுஇஎஃப்ஏ எனும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை 1999ம் ஆண்டு வெல்ல காரணமாக இருந்தார்.

இதற்கிடையே 1996ம் ஆண்டு இங்கிலாந்து சீனியர் அணியில் இடம்பெற்றார். 2009ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் இங்கிலாந்து அணிக்காக விளையாடினார். இதில் ஆறு ஆண்டுகள் கேப்டனாக இருந்தார். அப்படியாக இங்கிலாந்து அணிக்காக மொத்தம் 115 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவரின் ஃப்ரீ கிக்கும், கார்னர் கிக்கும் உலக அளவில் புகழ்பெற்றவை. பந்தினை லாவகமாக வளைத்து அடித்து கோலாக்கும் அவரின் உத்திக்கு ரசிகர்கள் ஏராளம். 

1997ம் ஆண்டு அவர் விக்டோரியாவுடன் டேட்டிங்கில் இருந்தார். விக்டோரியா, பிரிட்டனின் சிறந்த பாப் குழுக்களில் ஒன்றான ‘ஸ்பைஸ் கேர்ள்ஸி’ல் ஒருவராக ஜொலித்தவர். இவர்களுக்கு இடையேயான உறவு ஊடக கவனம் பெற்றது. 

இதனால், இருவரும் ஒரு பிராண்டட் ஆக மாறினர்.பின்பு பெக்ஹாம் ரியல் மாட்ரிட் அணிக்காக ஆடினார். இதனையடுத்து ஏசி மிலன், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணிகளிலும குறுகிய காலம் இருந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய 38 வயதில் ஓய்வுபெற்றார்.

இதற்கிடையே 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை லண்டன் பெறுவதற்கு பெக்ஹாம் தன் பங்களிப்பைச் செய்தார். தொடர்ந்து விக்டோரியாவுடன் இணைந்து பல தொண்டு நிறுவனங்களை ஆதரித்தார். அவர்களுக்கு நிறைய உதவினார். 2005ம் ஆண்டிலிருந்து யுனிசெஃப்பின் தூதராக இருந்து வருகிறார் பெக்ஹாம். 2024ம் ஆண்டு முதல் அவர் கிங் பவுண்டேஷனின் தூதராகவும் இருக்கிறார். இது மூன்றாம் சார்லஸ் மன்னரால் நிறுவப்பட்ட ஒரு கல்வித் தொண்டு நிறுவனம். 

இதுமட்டுமில்லாமல் 2003ம் ஆண்டே பிரிட்டிஷ் பேரரசின் அதிகாரியாக இரண்டாம் எலிசபெத் ராணியால் கௌரவிக்கப்பட்டார். தவிர, பல்வேறு விருதுகள் அவரை அலங்கரித்தன.
பெக்ஹாம், பிரிட்டிஷ் கால்பந்தின் ஒரு பொக்கிஷமாகவே கருதப்படுகிறார். அத்துடன் அவரின் சமூக சேவைகள் தொடர்ந்து மெச்சப்படுகின்றன.

முன்பே கூறியதுபோல பிரிட்டனில் தங்கள் துறைகளில் தனித்துவமாக திகழும் ஆண்களுக்கு நைட் பட்டமும், பெண்களுக்கு டேம்ஸ் பட்டமும் வழங்கப்படுகின்றன. அப்படியாக இப்போது நைட்ஹுட்டாக கௌரவிக்கப்பட்டுள்ளார் பெக்ஹாம். தற்போது சர் டேவிட் பெக்ஹாம், இன்டர் மியாமி சிஎஃப் அணியின் தலைவராகவும், இணை உரிமையாளராகவும் இருக்கிறார். தவிர, சால்ஃபோர்டு சிட்டி அணியின் இணை உரிமையாளராகவும் உள்ளார்.

ஹரிகுகன்