என்னை இயக்குநராக்கியது ஆண்ட்ரியாதான்!
இயக்குநர் வெற்றிமாறனின் மேற்பார்வையில் வெளியாகும் படம் ‘மாஸ்க்’. கவின், ஆண்ட்ரியா நடிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ரிலீஸ் வேலையில் பரபரப்பாக இருந்த இயக்குநரிடம் பேசினோம்.
 ஏன் இந்த ‘மாஸ்க்’?
இங்கே எல்லோருக்கும் ஒரு முகமூடி இருக்கிறது. அந்த முகமூடியை சில நேரம் போடுகிறோம். சில நேரங்களில் கழட்டி வைக்கிறோம். முகமூடி இல்லாமல் பழகக்கூடியவர்கள் ரொம்ப குறைவு. இந்தப் படத்தில் உள்ள ஹீரோ, ஹீரோயின், வில்லன் உட்பட ஒவ்வொருத்தரும் முகமூடியுடன்தான் பழகுகிறார்கள். ஜானராக பார்த்தால் இது முழுமையான ஜனரஞ்சகமான படம். ஜாயின்ட் வென்ச்சர் ரியல் எஸ்டேட் பற்றி பேசியிருக்கிறோம். டிரைலரில் ‘ஏழையோடு ஏழை இருப்பான், அவன்தான் மிடில்கிளாஸ்’ என்ற டயலாக் வரும். அதுதான் படத்தோட புரிதல். சராசரி மனிதன் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு பதிலடி கொடுக்க பத்து பேரிடம் அட்வைஸ் கேட்பதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும் என்பதுதான் இந்த ‘மாஸ்க்’.
 இந்தக் கதையைத்தான் உங்கள் முதல் படமாக எடுக்க நினைத்தீர்களா?
யெஸ். இந்தக் கதையில் சினிமாவுக்கான சில புனைவுகள் இருந்தாலும் என் சொந்த அனுபவமும் இருக்கிறது. மற்றபடி இது மெசேஜ் சொல்லும் படமல்ல. படம் சிறப்பாக இருந்தால் மக்களே படம் பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.அப்படி சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களுடன் இந்தக் கதை கனெக்டாகும்.
டுவிஸ்ட் அண்ட் டேர்ன் நிறைந்த இந்தக் கதையை மியூசிக்கலாக சொல்லியுள்ளோம். மற்றபடி இது வித்தியாசமான படம் என்றெல்லாம் சொல்லி மிகைப்படுத்தமாட்டேன். இந்த மாதிரி ஜானர்ல ஏராளமான படங்கள் வந்துள்ளன. எனக்கும், மக்களுக்கும் பிடித்த படமாக இருக்கும். திரைக்கதை ரசிக்க வைக்கும் என்பதோடு நிறைய இடங்களில் சிரிக்கவும் வைக்கும். போஸ்டரில் கவின் கையில் துப்பாக்கி விளையாடுதே?
முதலில் வெற்றிமாறன் சாருக்கு நன்றி சொல்லணும். அவர்தான் இந்தக் கதையை முதலில் கவினிடம் சொன்னார். அடுத்து நான் முழுக் கதையையும் சொன்னேன். கதையில் தன்னுடைய இமேஜுக்கு மேலேயும் போகாமல், கீழேயும் போகாமல் முடிந்தளவுக்கு யதார்த்தமாகச் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்.
அப்படி இரண்டுபேரும் சேர்ந்து எப்படி படமாக்கப்போகிறோம் என்று புரிந்துகொண்டு எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம். இந்தக் கதையில் யாருமே நல்லவர்கள் கிடையாது. எல்லோருமே கெட்டவர்கள். கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஓரத்தில் குட் பாய், பேட் பாய் இருப்பான். அந்த குட் பாய், பேட் பாய் கலந்ததுதான் கவின் கேரக்டர். இந்த மாதிரி பெர்சனாலிட்டி உள்ளவர்கள் குழப்ப மனநிலையில் இருக்கமாட்டார்கள். வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டு என்பதுபோல் ஷார்ப்பாக இருப்பார்கள். அவர்களுக்குள் நகைச்சுவையும் ஒளிந்திருக்கும். அதை அப்படியே வேலு என்ற கதாபாத்திரத்துல அழகாகக் கொண்டு வந்தார்.கதை சொல்லும்போது மணிவண்ணன், சத்யராஜ், கவுண்டமணி இந்த மூவரும் கலந்த மாதிரி ஒரு கேரக்டர் இருந்தால் எப்படியிருக்குமோ அதுதான் நீங்க என்று சொன்னேன். அதை அப்படியே உள்வாங்கி தன்னுடைய ஸ்டைலில் பிரமாதப்படுத்தினார்.
ஆண்ட்ரியா... பாடகி, நடிகை என பன்முகத்தன்மையுள்ளவர். அவருடன் வேலை செய்த அனுபவம் எப்படி?
மேடம் இல்லையென்றால் நான் டைரக்டராகி இருக்கமுடியாது. அவரிடம்தான் முதலில் கதை சொன்னேன். அவர்தான் என்னை டைரக்டராக்கினார். வெற்றிமாறன் சாரை ஸ்கிரிப்ட் படிக்க வெச்சதும் அவர்தான்.
அவருக்கு ‘டெயிலர் மேட் ரோல்’ என்று சொல்லலாம். எதிர்மறை நாயகியாக வர்றார். அதிகம் பேசாத, ஆழமான நபராக அவரைப் பார்க்கலாம். அவரிடம் அவ்வளவு எளிதில் அணுகிப் பேச முடியாது. அவர் பேசும்போது அதற்கு ஒரு காரணம் இருக்கும். அவர் ஸ்டைல் எப்போதும் தனித்துவமாக இருக்கும். மற்ற நடிகர்கள்...?
‘கல்லூரி’ வினோத் முக்கியமான கதாபாத்திரத்தில் வர்றார். ரமேஷ் திலக் இருக்கிறார். அவரை இயக்குநர்களின் டிலைட் என்று சொல்லலாம். ரூஹானி சர்மா இந்தி பேசும் கதாபாத்திரத்துல வர்றார்.
ஜி.வி.பிரகாஷ்..?
இது பின்னணி இசைக்கான படம். ஜி.வி.பிரகாஷ் சார் இரண்டு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வாங்கி அவரே ஒரு விருது போல் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
அப்படியொரு லெஜண்ட் என்னிடம் நேரம் ஒதுக்கி வேலை செய்தது பெரிய விஷயம். ஜி.வி.பிரகாஷிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். எதுவுமே முட்டாள்தனமான கேள்வி என்று நினைக்கமாட்டார். நிறைய இன்புட் கொடுக்கும்போது அது என்னுடைய வேலையை சுலபமாக்கும் என்று உற்சாகப்படுத்துவார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல்படம் செய்யும் இயக்குநர்களின் முதல் சாய்ஸாக இருப்பவர். என்னை தட்டிக்கொடுத்து அழகாக கொண்டு சென்றார். கடுமையான உழைப்பாளி.
அவருடைய ஒர்க் வேற லெவல். நிறைய விஷயங்கள் செய்தவர்கள் அலட்டிக்கொள்ளாமல் வேலை செய்வார்கள். அதற்கு சிறந்த உதாரணம் ஆர்.டி.சார்.
எடிட்டிங் ராமர். கதையோட ஸ்டைலை மாத்திக்காட்டிய திறமைசாலி. ஆர்ட் டைரக்ஷன் ஜாக்கி, ஐயப்பன். தயாரிப்பு சொக்கலிங்கம், ஆண்ட்ரியா.
‘மாஸ்க்’ படத்தில் வெற்றிமாறன் பங்களிப்பு என்ன?
வெற்றிமாறன் சாரின் பங்களிப்புதான் படம். கதையின் நெரேஷனை அவர்தான் மாத்திக்கொடுத்தார். பெரிய ஜாம்பவான் இயக்குநர் எனக்காக நேரம் எடுத்து, கேட்கும்போதெல்லாம் திரைக்கதை, வசனம் எழுதும்போது ஆலோசனை கொடுத்து உதவினார். சினிமாவைத்தாண்டி நேர்மையாக இருந்தால் அவருடன் வேலை பார்க்கலாம். அவரிடமிருந்து வரும்போது சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி நாலு விஷயத்தை கற்றுக்கொள்ள முடியும். அவருடைய பங்களிப்புக்குப் பிறகு படம் ஸ்டைலீஷாக மாறிடுச்சு.
இயக்குநராக வரவேண்டும் என்பதுதான் உங்கள் லட்சியமாக இருந்ததா?
நான் பக்கா மெட்ராஸ்காரன். படிச்சது ஆர்ட்ஸ் காலேஜ். விளம்பரப் பட இயக்குநராக இந்தத் துறைக்கு வந்தேன். கடந்த பதினைந்து வருடங்களாக ஏராளமான விளம்பரங்கள் செய்துள்ளேன். நான், இண்டிபெண்டன்ட் ஃபிலிம் மேக்கர் கிடையாது. மெயின் ஸ்ட்ரீம் ஃபிலிம்மேக்கர்.
எஸ்.ராஜா
|