இப்ப நான் சாம்ஸ் இல்ல... ஜாவா சுந்தரேசன்!



நடிகர் சாம்ஸின் அடையாளமே, ‘ஜாவா சுந்தரேசன்’தான். இந்நிலையில் சமீபத்தில் இந்த ஜாவா சுந்தரரேசன் என்ற அடையாளப் பெயரையே தன்னுடைய சினிமா பெயராக மாற்றிக்கொண்டுள்ளார். சுமார் 25 ஆண்டுகால சினிமா பயணத்தில் 236 படங்கள் நடித்துள்ள அவரிடம் பெயர் மாற்றக் காரணத்தைக் கேட்க, கலகலவென சிரித்தபடியே ஆரம்பித்தார். 

‘‘என்னுடைய நிஜப்பெயர் சுவாமிநாதன். 
சாம்ஸ் என்பதும் புனைபெயர்தான். சினிமாவுக்கு வந்தப்ப ஏற்கனவே என் பெயர்ல லொள்ளு சபா சுவாமிநாதன் சார் இருந்தார். 
இதனால் சில பேருக்குக் குழப்பம் ஏற்பட்டுச்சு. சமயங்கள்ல அவருக்கு வரவேண்டிய வாய்ப்பு எனக்கும், எனக்கு வரவேண்டிய வாய்ப்பு அவருக்கும் போறதெல்லாம் நடந்தது. அவர் என்னைவிட சீனியர் நடிகர். அதனால் எனக்குனு ஒரு தனித்துவமான அடையாளம் வேணும்னு நினைச்சு சாம்ஸ்னு பெயரை மாத்தினேன்.

ஆனா, இந்தப் பெயர் மக்களிடம் பெரிசா போய்ச் சேரல. அவங்களுக்கு ‘பழங்கால நடிகர் சந்திரபாபு மாதிரி இருப்பார், ஜாவா சுந்தரேசனா வருவார், நகைக்கடை உரிமையாளர் மகனாக வடிவேலுடன் நடிச்சிருப்பார்...’ இப்படி என்னுடைய காமெடிகளையும், அந்தக் கேரக்டர்களையும் வச்சு அடையாளப்படுத்தினாங்க. என்னுடைய 25 ஆண்டுகால சினிமா பயணத்துல இதுவரைக்கும் என்னை சாம்ஸ்னு கூப்பிட்டவர்கள் ஒரு ஐம்பது பேர் இருந்தாலே அதிகம்தான். 

போற இடத்திலெல்லாம் மக்கள், ‘அறை எண் 305ல் கடவுள்’ படத்துல வர்ற ஜாவா சுந்தரேசன் கேரக்டரை சொல்லியே அழைச்சாங்க. அந்தப் படம் வந்து பதினெட்டு ஆண்டுகளாகிடுச்சு. இப்பவும் ‘மிஸ்டர் ஜாவா சுந்தரேசன்... எப்படி இருக்கீங்க’னுதான் கேட்குறாங்க. உண்மையில் அந்தப் படத்துல நான் நடிக்கும்போது அது ஒரு சுவாரஸ்யமான கேரக்டர்னுதான் நினைச்சேன். ஆனா, இவ்வளவு ஹிட் அடிக்கும்னு நினைக்கல. 2008ம் ஆண்டு படம் வெளியானப்ப ஐடி மக்கள் மத்தியில் அந்தக் கேரக்டர் பயங்கரமாக ரசிக்கப்
பட்டுச்சு.  

இப்ப, சமூக ஊடகங்கள் வந்தபிறகு ஒரு மீம்ஸ் மெட்டீரியலாகவே மாறிடுச்சு. வாழ்க்கையில் அசுர வளர்ச்சி அடைந்தவர்களுக்கான உதாரணமாக ஜாவா சுந்தரேசன் கேரக்டர்தான் இருக்குது. 

இதனால் மக்கள் ஆராதிக்கிற இந்தப் பெயரையே எனக்கான அடையாளமாக்க முடிவெடுத்தேன். அப்புறம் இயக்குநர் சிம்புதேவன் சார்கிட்ட முறைப்படி அனுமதி வாங்கி வச்சுக்கிட்டேன். ஏன்னா, அந்தக் கேரக்டரை உருவாக்கியவர் அவர்தான்...’’ என நெகிழும் ஜாவா சுந்தரேசன், கிரேசி மோகனின் நாடகக் குழுவில் பயின்றவர். 

‘‘இயல்பிலேயே எனக்கு நகைச்சுவை உணர்வு இருந்தது. அதனால், என்னை சினிமா துறைக்கு போகும்படி தொடர்ந்து உற்சாகப்படுத்தினது என் நண்பர் ஜெயப்பிரகாஷ்தான். நானும் அவரும் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்திட்டு இருந்தோம். அதனால், 1995ம் ஆண்டு வேலை மாற்றலாகி சென்னைக்கு வந்தேன். இங்க வேலை பார்த்துக் கொண்டே எனது சினிமாவிற்கான முயற்சிகளை செய்தேன். நிறைய கம்பெனிகள் ஏறி இறங்கினேன்.

ஒருநாள், ‘அவ்வை சண்முகி’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ல கிரேசி மோகன் சாரைப் பார்த்தேன். அப்புறம், அவரின் நாடகக் குழுவுல சேர்ந்தேன். அங்கதான் நான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். 

அங்கிருந்து என் கிராஃபும் மாறுச்சு. அந்த ட்ரூப் நடிப்பை எல்லாம் தாண்டி ஃப்ரெண்ட்ஷிப், நல்ல குணம், நல்லொழுக்கம், ஜாலியாக வேலை செய்றது, யாரையும் குறை சொல்லாமல் இருப்பதுனு பல நல்ல விஷயங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க.

அப்புறம் அடிப்படையா ஒரு மேடை நாடகத்துல எப்படி நடிக்கணும் என்கிற நுணுக்கத்துல தொடங்கி, ஒரு நகைச்சுவையை எப்படி டைமிங்கா சொல்லணும் என்பது வரை நடிப்பு சார்ந்த பல்வேறு விஷயங்களை அங்க படிச்சேன். கிட்டத்தட்ட 11 வருஷம் அந்த ட்ரூப்ல இருந்தேன்.

என் வாழ்வில் நான் அதிகமாக சிரிச்ச நாட்கள்னா அது கிரேசி மோகன் சார்கூட இருந்த நாட்கள்தான். ‘நீங்க நாடகத்துக்கு போயிட்டு வந்தா உங்க மூஞ்சில ஒரு சிரிப்பு தெரியுது’னு என் மனைவி என்கிட்ட சொல்வாங்க. ஏன்னா, இதில் ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் உடனே கிடைச்சிடும். நல்லா பண்ணிட்டா ரொம்பக் கொண்டாடுவாங்க.

என் குருநாதர் கிரேசி மோகன் சார் உட்பட ட்ரூப்ல எல்லோரும் பாராட்டுவாங்க. அங்க கிடைச்ச அனுபவங்கள்தான் என்னை இவ்வளவு காலம் நம்பிக்கையுடன் சினிமாவில் பயணிக்க வைக்குது. அப்புறம், என் குடும்பம் ரொம்ப உறுதுணையாக இருக்குது. என் மனைவி உமா மகேஸ்வரி, ‘நான் வீட்டைப் பார்த்துக்கிறேன். நீங்க சினிமாவிற்குப் போங்க’னு சொல்லி ரொம்ப நம்பிக்கை தந்தாங்க.

அதனால், இன்னும் தைரியமாக சினிமாவில் இருக்க முடியுது. இப்ப என் பையன் யோஹன் ஹீரோவாக நடிக்கறதுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கார். பொண்ணு அக்‌ஷயா இசைத்துறையில் சாதிக்கணும்னு ஆர்வமுடன் தயாராகிட்டு இருக்காங்க...’’ என உற்சாகமாகப் புன்னகைக்கும் ஜாவா சுந்தரேசன் தற்போது விஷால் நடிக்கும் ‘மகுடம்’, ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா 4’, ‘சூர்யா 46’, நட்டி நடிக்கும் படம் என 12 படங்களில் நடித்து வருகிறார்.

ஆர்.சந்திரசேகர்