Must Watch



த லாஸ்ட் பஸ்

‘ஆப்பிள் டிவி’யின் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘த லாஸ்ட் பஸ்’. கடந்த 2018ம் வருடம் நவம்பர் 8லிருந்து 25ம் தேதி வரை வடக்கு கலிபோர்னியாவில் உள்ள பட் கவுன்டியில் அமைந்திருக்கும் காட்டுப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் காட்டுத்தீயில் 85 பேர் மரணமடைந்தனர். 621 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு உட்பட்ட பகுதிகள் நெருப்புக்கு இரையானது. இந்தப் பகுதியிலிருந்து 52 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். 

கலிபோர்னியா வரலாற்றில் நடந்த பெரிய காட்டுத்தீ விபத்துகளில் இதுவும் ஒன்று. இந்தக் காட்டுத்தீ சம்பவத்தின் போது நடந்த உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது இந்தப்படம்.இந்தக் காட்டுத்தீ பரவிக்கொண்டிருக்கும் பகுதியில் ஒரு பேருந்து சென்றுகொண்டிருக்கிறது. அதில் 22 குழந்தைகளும், அவர்களின் ஆசிரியர்களும் பயணிக்கின்றனர். 

பேருந்தை கெவின் மெக்கே என்பவர் ஓட்டிச் செல்கிறார். மிகவும் ஆபத்தான காட்டுத்தீயிலிருந்து எப்படி பாதுகாப்பாக பேருந்தை கெவின் ஓட்டிச் செல்கிறார் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.சீட் நுனியில் உட்கார வைக்கும் இப்படத்தின் இயக்குநர் பால் கிரீன்கிராஸ்.

மிராஜ்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலைக் குவித்த மலையாளப்படம், ‘மிராஜ்’. இப்போது ‘சோனி லிவ்’வில் பார்க்க கிடைக்கிறது. அபிராமிக்கு கிரணின் அறிமுகம் கிடைக்கிறது. இருவரும் காதலில் விழுகின்றனர். 

விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகின்றனர். இந்நிலையில் கிரண் காணாமல் போகிறார். அவர் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்று யாருக்குமே தெரியாது. நிதி சம்பந்தமான ஒரு பெரிய ஊழலில் கிரணுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவனை அபிராமியும், வேறு ஒரு குழுவும் தேட ஆரம்பிக்கிறது. 

இச்சூழலில் அபிராமியுடன் ஆன்லைன் பத்திரிகையாளர் அஸ்வினும் இணைந்துகொள்கிறார். அஸ்வினும், அபிராமியும் பல ரகசியங்களைக் கண்டடைகின்றனர். 

உண்மையில் கிரணுக்கு என்ன நடந்தது? அபிராமி யார்? அவளுக்கும் அஸ்வினுக்கும் என்ன தொடர்பு? அஸ்வினுக்கும் கிரணுக்கும் என்ன தொடர்பு? இந்த மூவருக்கும் இடையிலான ரகசியங்கள் என்ன... என்பதை பலவித திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறது இந்தப் படம்.ஒரு படத்தில் ஓரிரு டுவிஸ்ட்கள் இருக்கலாம். டுவிஸ்டே படமாக இருந்தால், அதுதான் ‘மிராஜ்’. இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கிறார். 


ஸ்டீவ்

சமீபத்தில் ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி, பார்வைகளைக் குவித்து வரும் ஆங்கிலப்படம், ‘ஸ்டீவ்’.ஒரு சீர்திருத்தப் பள்ளியில் தலைமை  ஆசிரியராக இருக்கிறார், ஸ்டீவ். கையாள்வதற்கு சிரமமாக இருக்கும் பதின்பருவத்தினர் அந்தப் பள்ளியில் படிக்கின்றனர். அந்த மாணவர்கள் அடிக்கடி ஏதாவது பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் மீது ஸ்டீவிற்கு எந்தவித புகாரும் இல்லை. 

இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தில் இந்த மாணவர்களுக்குச் செலவு செய்து, பள்ளியைத் தொடர்ந்து நடத்துவது என்பது வெட்டிச் செலவு, அரசுக்கு நஷ்டம் என்று பள்ளியை மூடுவதற்கான செயலில் இறங்குகிறது அரசு. 

தொடர்ந்து பள்ளியை நடத்த வேண்டும் என்று போராடுகிறார் ஸ்டீவ். பள்ளியை மூடினார்களா அல்லது தொடர்ந்து செயல்பட்டதா என்பதை அறிந்துகொள்ள படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். 

மேக்ஸ் போர்டர் எழுதிய ‘shy’ எனும் குறுநாவலைத் தழுவியது இந்தப் படம். இக்குறுநாவலை அச்சிடும் முன்பு கையெழுத்துப் பிரதியை நடிகர் கிலியன் மர்பியிடம் கொடுத்திருக்கிறார் மேக்ஸ். நாவலைப் படித்தவுடனே படமாக்க வேண்டும் என்று முடிவு செய்ததோடு, படத்தை தயாரித்தும், நடித்தும் இருக்கிறார் கிலியன். இப்படத்தின் இயக்குநர் டிம் மைலாண்ட்ஸ். 

பரம் சுந்தரி

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, சர்ச்சையைக் கிளப்பிய இந்திப்படம், ‘பரம் சுந்தரி’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், பரம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மீது அவனுக்குத் தீராத விருப்பம். அதனால் அப்பாவின் பணத்தைப் புதுப்புது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்கிறான். 

முதலீடு செய்ய தனித்துவமான, வித்தியாசமான ஒரு நிறுவனத்தைத் தேடும்போது, ஒரு ஆப் அவனுக்குக் கிடைக்கிறது. தங்களுக்குப் பொருத்தமான ஒரு ஜோடியைத் தேடுவதற்கான நவீன ஆப் அது. அந்த ஆப்பை பரிசோதிப்பதற்காக, பரமே அதில் உறுப்பினராகி ஒரு ஜோடியைத் தேடுகிறான். 

ஆப் மூலமாக பரமுக்கு கேரளாவைச் சேர்ந்த சுந்தரியின் அறிமுகம் கிடைக்கிறது. இரு வேறு சமூகம் மற்றும் கலாசாரப் பின்புலங்களைச் சேர்ந்த பரமும், சுந்தரியும் சந்திக்க, சூடுபிடிக்கிறது ரொமாண்டிக் காமெடி திரைக்கதை.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குநர் துஷார் ஜலோட்டா. 

தொகுப்பு: த.சக்திவேல்