பாஸ்... நான் Pass!
‘‘எந்தப் படத்துக்கும் நான் இப்படி தயாரானதில்லை. இவ்வளவு நேரமும் கொடுத்ததே இல்லை. நானே இவ்வளவு மெனக்கெட்டிருந்தா துருவ் டிரெய்னிங் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாருங்க...’’எப்போதும் சிரித்த இதழ்கள், பளிச் முகம், சுருண்ட முடி என வளைய வரும் அனுபமா பரமேஸ்வரன், ‘பைசன்’ படத்தில் புழுதிக் காட்டு சகதியையும், சேற்றையும் பூசிக்கொண்டு கரடு முரடான காதலுக்குள் சிக்கி நடிப்பில் இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். தன்னுடைய வாழ்வில் ‘பைசன்’ மைல் கல் படம் என்கிறார்.
 100% ஃபில்டருடன்தான் கதைகளை தேர்வு செய்கிறீர்கள் போலவே..?
இத்தனை வருடங்கள் இந்தச் சினிமா நமக்கு இடம் கொடுத்திருக்கு. அதிலே கொஞ்சமாவது பாடம் கத்துக்கலைன்னா எப்படி! ஒரு சில கதைகள், நான்தான் சரியா இருப்பேன்னு தேடி வருது. ஒரு சில கதைகளை நான் யோசிச்சு தேர்வு செய்கிறேன். வந்த புதிதில் கிடைக்கும் படங்கள்ல எல்லாம் நடிக்கறது வேறு. ஆனா, இப்பவும் அதையே செய்யக் கூடாது இல்லையா!
 விவசாயம், ஆடு, மாடுகள் மேய்த்தல்... இதற்கு முன்பு பரிச்சயம் உண்டா?
‘பைசன்’ படத்தில்தான் முதல் அனுபவம். எல்லாமே இந்தப் படத்தில்தான் எனக்கு அறிமுகமே ஆச்சு. செருப்பில்லாம நடந்ததும் இதுதான் முதல் முறை. இதற்கு முன்னாடி எத்தனையோ படங்கள் நடிச்சிருக்கேன். ஆனா, இந்தப் படம் மூலமாதான் பயிற்சிகள் நிறைய கிடைச்சிருக்கு.
 மாரி செல்வராஜ்..?
சிறந்த மாஸ்டர். தனித்துவமான இயக்குநர். அவர் கொடுத்த பயிற்சியும், பாடமும், அடுத்து ஒரு பத்து வருடங்களுக்கு நான் சினிமாவில் பயணிக்க உதவும். அந்த அளவுக்கு நடிப்பில் பல பரிமாணங்கள், லேயர்களை இந்தப் படத்தில் என் மூலமா கொண்டு வந்திருக்கார். அதிகமாக கேர்ள் நெக்ஸ்ட் டோர் படங்கள்ல நடிச்ச நடிகை நான். இதுவும் ஒரு கேர்ள் நெக்ஸ்ட் டோர் கேரக்டர்தான். ஆனா, இதுதான் உண்மையான எதார்த்த கேர்ள் நெக்ஸ்ட் டோர் கதைக் களம். ஒரே வார்த்தைல சொல்லணும்னா, ‘பைசன்’ படம் நிறைய சவால் வைத்தது.
‘தில்லு 2’ தெலுங்குப் படம் மூலம் கற்றதும் பெற்றதும் என்ன?
‘அனுபமா எவ்வளவு போல்டான கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பா’ என்கிற நம்பிக்கை. ‘தில்லு 2’ படம் என்னைத் தேடி வரும் போது, சினிமா மேல் ஆர்வமே இல்லாம இருந்தேன். நிறைய ஒரே மாதிரி கேரக்டர்கள்ல திரும்பத் திரும்ப நடிக்கறது மாதிரி ஓர் உணர்வு.
இனிமேலும் நடிப்பு வேணுமானு யோசிச்சிட்டு இருந்த நேரம்தான், எனக்கு ‘தில்லு 2’ பட வாய்ப்பு அமைஞ்சது. இப்ப கிளாமராகவும் நடிப்பேன், ‘பைசன்’ படம் போல கடுமையான கதைகளிலும் நடிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு மட்டுமில்ல... இண்டஸ்ட்ரிக்கும் வந்திருக்கு.
ஒரு சிலர் ‘இவ்வளவு கிளாமர், போல்ட் பாத்திரம் தேவையா’னு கேட்டாங்க. ஆனா, ஒரு நடிகை ஒரே மாதிரியான கேரக்டர்ஸ் செய்திட்டே இருக்கக் கூடாதே... நான் அப்படி செய்தா என்னை ஓரம் கட்டிடுவாங்க.
 ‘ஜானகி V/s ஸ்டேட் ஆஃப் கேரளா’..?
சமூகம் சார்ந்த கதைகள் வரும்போது யோசிக்காம ஓகே சொல்லிடணும். நம்மை பார்வையாளர்கள்கிட்ட தக்க வெச்சுக்க இந்த சமூகப் படங்கள்தான் பெஸ்ட் டிரம்ப் கார்ட். அப்படிதான் ஜானகி பாத்திரம், ‘பைசன்’ பட ராணி கேரக்டர். நீதிக்காக இப்பவும் ஏதோ ஒரு மூலையிலே ஒரு பொண்ணு போராடிட்டுதான் இருப்பா. அந்தப் பெண்களின் குரலாக நான் ‘ஜானகி V/s ஸ்டேட் ஆஃப் கேரளா’ல நடிச்சது எனக்குப் பெருமை.
 பத்து வருட திரைப் பயணம்... திரும்பிப் பார்த்தால் எப்படி இருக்கு?
ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிடலாம்னு நினைச்சேன். காரணம், சினிமாவே என் வாழ்க்கையில் ஒரு ஆக்சிடென்ட் டாக நடந்ததுதான். ‘பிரேமம்’, தானாக வந்த வாய்ப்பு. தொடர்ந்து ஒருசில கதாபாத்திரங்கள். ஆனா, ஈர்ப்பு இல்லை. இந்தக் குற்றச்சாட்டை ஆடியன்ஸ் வைக்கலை, எனக்கு நானே கொடுத்த ஜட்ஜ்மென்ட்.
 ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்யறா மாதிரி இருந்துச்சு. அப்படிப்பட்ட வேளையில்தான் தெலுங்கில் ‘தில்லு 2’, தமிழில் ‘பைசன்’ வாய்ப்பு கிடைச்சது. இந்த இரண்டு படங்களும் என்னுடைய ரெண்டு விதமான நடிப்புத் திறமையை எடுத்து வைச்சது. பத்து வருடங்கள் சினிமா அனுபவமும், பயிற்சிகளும் கொடுத்த பரிசாகத்தான் இந்த ரெண்டு படங்களையும் பார்க்கறேன்.
என்னடா இதுனு சலிப்பா யோசித்து நிற்கும் போது ‘எழுந்து ஓடு’னு கை கொடுத்துத் தூக்கி விட்டது போல இருக்கு இந்த ரெண்டு படங்களின் ரிலீஸ்.
இப்போ பட ப்ரமோஷன்களுக்காக தமிழகம் முழுக்க போகும்போது, ஒரு படம் நடிப்பது மட்டும் நம்ம வேலை கிடையாது... அதைச் சரியாக பார்வையாளர்கள் கையில் கொண்டு சேர்க்கறதும் ஒரு நடிகராக நம் வேலைதான்... அந்தப் பொறுப்பு நமக்கு இருக்கு என்பது புரிஞ்சது.
பத்து வருட சினிமா பயணம் நிறைய பயிற்சிகளை கொடுத்திருக்கு. சினிமா வைத்த எல்லா பரீட்சையிலும் நான் பாஸ் ஆகிட்ட மாதிரி ஒரு ஃபீல். யெஸ். இப்ப எதிர்பார்த்த அங்கீகாரத்தை சினிமா கொடுத்திருக்கு.
தமிழ் சினிமா மற்றும் கேரளா சினிமா... இரண்டு துறைக்கும் இடையேதான் போட்டி இருப்பதா உங்களுக்குத் தோணுதா?
நல்ல கதைகள், எதார்த்த சினிமா கொடுப்பதில் கேரளா மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களை ஓவர்டேக் செய்வது கஷ்டம். அந்த அளவுக்கு இரண்டு மொழி சினிமாக்களிலும் சினிமா ரைட்டர்ஸ் வலிமையாக இருக்காங்க.
இது ஆரோக்கியமான போட்டி. இந்த ரெண்டு இண்டஸ்ட்ரியிலும் ஆரோக்கியமான படைப்புகள் உருவாகறது மகிழ்ச்சியா இருக்கு. கலாச்சார அடிப்படையிலும், பழக்கவழக்க அடிப்படையிலும் ரெண்டு மாநிலங்களுமே பின்னிப்பிணைந்துதான் இருக்கு. எல்லா மொழிப் படங்களையும் கேரளாவில் டப்பிங் செய்துதான் நாங்க பார்ப்போம். ஆனா, தமிழ்ப் படங்களை தமிழில்தான் பார்க்கறோம். அந்த அளவுக்கு இரு மாநில மக்களுக்கும் மொழி ஒரு பிரச்னையா இல்ல.
தமிழில் வரும் நல்ல படங்கள்ல கொஞ்சமாவது மலையாள சாயல் இருக்கும். அதேமாதிரி மலையாளத்தில் எடுக்கப்படும் படங்கள்ல கொஞ்சம் தமிழ்சினிமா தாக்கம் இருக்கும்.அவ்வளவு ஏன்... இரு மொழிகள்லயும் தயாராகும் கமர்ஷியல் படங்கள்ல கூட இந்த பாதிப் பினைப் பார்க்கலாம். அதாவது தமிழ் கமர்ஷியல் படத்துல மலையாள நடிகர் அல்லது கேரளா லொகேஷன்... மலையாள வெகுஜனப் படங்கள்ல தமிழ்நாட்டு லொகேஷன் அல்லது தமிழ் நடிகர் நிச்சயம் இருப்பாங்க.ஆக, இது ஒரு பிரதர்லி போட்டிதான். அப்படித்தான் நான் பார்க்கறேன்.
உங்களுடைய அடுத்தடுத்த படங்கள்..?
‘பெங்கால் டைகர்’, ‘ஒடெலா 2’ உட்பட நிறைய படங்களின் ரைட்டரான சம்பத் நந்தி, இயக்கும் ‘ஷர்வா 38’, அப்புறம் ‘மரிச்சிகா’. இந்த ரெண்டும் தெலுங்குப் படங்கள்.மலையாளத்தில் ஷேன் நிகம் ஜோடியாக ‘எல் கிளாசிகோ’ முடிச்சிருக்கேன். இது இல்லாம ‘லாக்டவுன்’ படமும் போஸ்ட் ப்ரொடக்ஷன்ல இருக்கு.
இதுதவிர தமிழ்ல ஒரு முக்கியமான ப்ராஜெக்ட் ஆரம்பநிலைல இருக்கு. முறையான அறிவிப்பு வரும்போது நீங்களே தெரிஞ்சுக்கு வீங்க!
ஷாலினி நியூட்டன்
|