வாராரு வாராரு கருப்பரு வாராரு...



6. கருப்பண்ணசாமி: சங்க இலக்கியம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை ‘கருப்பண்ணசாமியின் வரலாறு’ என்று சொல்லிவிட்டு கடந்த நான்கு அத்தியாயங்களாக நம் கருப்பரை குறித்து எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் மட்டுமே கருப்பண்ணசாமி தலையைக் காட்டினார். அவ்வளவுதான்.

எதனால் இப்படி?

முறையான, ஒழுங்கான கருப்பரின் புராணம் இல்லாததுதான் - நமக்குக் கிடைக்காததுதான் காரணம். அதனால்தான் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் கருப்பரைப் பற்றித் தேடினோம். கிடைத்தது. பதிவும் செய்தோம்.புராணங்களில் முத்துக் குளித்தோம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்தபோது பதிவான நிகழ்வைக் கண்டெடுத்தோம். இது இராமர், கிருஷ்ணர் மட்டுமல்ல... நரசிம்ம அவதாரத்துக்கும் முற்பட்ட காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றது.

இப்படி மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்பட்ட நம் கருப்பர், சிவபெருமானின் பேரன் என்ற அரிய தகவலையும் தோண்டி எடுத்திருக்கிறோம்.எனவே சந்தேகமே வேண்டாம். முப்பத்து முக்கோடி தேவர்களின் சங்கமம்தான் நம் கருப்பர். சிவனுக்கென்று ஒரு கதை உண்டு. விஷ்ணுவுக்கென்று ஒரு காவியம் உண்டு. பிரம்மாவுக்கென்று ஒரு புராணம் உண்டு. பிரம்மாவும், விஷ்ணுவும், சிவனும் உறவினர்கள் என்பதற்கான இணைப்பும் தேசத்தில் உண்டு. இவை அனைத்துடனும் இரண்டறக் கலந்திருக்கும் ஒரே தெய்வம், நம் கருப்பண்ணசாமிதான்.

ஆம். பிரம்மா, விஷ்ணு, சிவன் என படைத்தல் - காத்தல் - அழித்தலுக்குரிய நம் தேசத்தின் பெரும் தெய்வங்கள் அனைவரும் மக்களுக்கு நன்மை செய்ய எப்பொழுதெல்லாம் புறப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் முதல் நபராக கம்பீரமாக முன்னணியில் வந்து நிற்பவர் நம் கருப்பர்தான். 

இப்படி மக்களுக்குத் தோள் கொடுக்கும் நம் தோழன், பொது யுகத்துக்கு முன் - கிறிஸ்து பிறப்பதற்கு முன் - தமிழகத்தின் அனைத்து வேள்விக் குடிகளிலும், சேர, சோழ, பாண்டிய அரச வம்சங்களிலும் பாடப்பட்டு வந்த சங்க இலக்கியங்களில் பதிவாகி இருக்க வேண்டுமே?

இதற்கு ‘ஆம்’, ‘இல்லை’ என இரண்டு விதமாகவும் விடையளிக்கலாம்.சங்க இலக்கியம் சுட்டும் சங்க காலங்களில் பெரும் தெய்வங்களுக்கு இணையாக கிராமங்களில், கிராமத்தின் முடிவு அல்லது ஆரம்பத்தில்  காவல் தெய்வங்கள் இருந்தன என்ற செய்தி ‘ஆம்’ என்பதற்கான ஆதாரம். ஆனால், அப்படியிருந்தது எந்த தெய்வம் என்ற விவரம் இல்லாதது, ‘இல்லை’ என்பதற்கான தரவு.

போலவே, ‘நடுகல்’ நீக்கமற தமிழகப் பரப்பில் - ஏன், தென்னகம் முழுக்க - நிரம்பி வழிகின்றன. போரில், யுத்தத்தில் வீரமரணம் அடைந்தவர்கள்; ஊரை, கிராமத்தை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முற்படும்போது இறந்தவர்கள்... ஆகியோர்களின் நினைவாக எழுப்பப்பட்ட - நடப்பட்ட - கற்களையே நடுகல் என்கிறோம். இது ரத்தமும் சதையுமாக வாழ்ந்த மனிதர்களின் நினைவாக எழுப்பப்பட்டவை என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.

ஆனால், ‘நடுகல்’ என்பவை காவல் தெய்வமான நம் கருப்பரையும் குறிப்பவைதான் என்ற உண்மை ஏனோ பொறிக்கப்படவில்லை. அதனால்தான் சங்க இலக்கியங்களில் கிராம தெய்வங்கள் பற்றி விரிவான வழிபாட்டு விவரங்கள் காணப்படவில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளங்கள். 

இதன் பிறகான பல்லவர்கள் காலத்தில், கிராமங்கள், பிரதேச எல்லைகள், காவல்தெய்வங்கள் வளர்ந்திருந்தன. ஏனெனில் தமிழக வரலாற்றில் புதிய புதிய ஊர்களும், கிராமங்களும் உருவான காலகட்டம் இது. எனவே கிராமங்களை இணைத்த நகரங்களில் பெரும் தெய்வங்களுக்கான கோயில்கள் கட்டப்பட்டது போலவே ஒவ்வொரு கிராமத்தின் முடிவு - ஆரம்பத்திலும் காவல் தெய்வங்களின் ஆலயங்கள் எளிமையாக எழுப்பப்பட்டன. 

இந்தக் குறிப்பை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கிறார்கள். ஆனால், காவல் தெய்வமாக பல்லவர் காலத்தில் இருந்தவர் ‘கருப்பண்ணசாமி’தான் என்பதற்கான தரவுகள் கிடைக்கவில்லை என்கிறார்கள். 

சங்க காலத்தில் செங்கற்களால், மரங்களால், மண்ணால் மட்டுமே கோயில்கள் எழுப்பப்பட்டன. பல்லவர் காலம் தொட்டே அவை மெல்ல மெல்ல கற்கோயில்களாக மாற்றம் கண்டன.பல்லவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட சோழர் காலத்தில் இவை முழுமையடைந்தன. பிற்காலச் சோழர் காலத்து கல்வெட்டுகள் அனைத்தும் இப்படி கற்கோயில்கள் கட்டப்பட்ட விவரங்களைப் பதிவு செய்துள்ளன.

ஆனால், கிராம, ஊர் எல்லைகளில் வெட்டவெளியில் அல்லது மண்குடிசையில் வீற்றிருந்த காவல் தெய்வங்களுக்கு - உழைக்கும் மக்களின் கடவுள்களுக்கு - கற்கோயில்கள் எழுப்பப்படவில்லை. அவை மக்களின் வாழ்வாதாரம் போலவே எளிமையாகக் காட்சியளித்தன. 

இதற்கான தரவுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், மூடு மந்திரமாக - மர்மமாக காட்சியளிக்கின்றன. ‘Temple Guardians and ‘Folk Hinduism’ in Tamil South India’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் கிராம தெய்வ வழிபாடுகள் பிற்காலச் சோழர் காலத்தில் - பொது யுகத்துக்குப் பிறகு 9 - 14ம் நூற்றாண்டுகளில் - இருந்ததாக குறிப்புள்ளது.

தமிழக வரலாற்றிலேயே தெய்வங்களின் செம்பு - உலோக - படிமங்கள் பிற்காலச் சோழர் காலத்தில்தான் அதிகரித்தன. இதற்கு செம்புச் சுரங்கங்கள் அதிகமிருந்த இலங்கை மாதிரியான பகுதிகள் சோழர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததே காரணம்.இப்படி உருவான உலோகப் படிமங்களில், பெரும் தெய்வங்களே பெருமளவு காணப்படுகிறார்கள். காவல் தெய்வங்கள் படிமங்களாக வடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. 

ஆனால், கிராமப்புறங்களில் வழிபாடுகள் அதிகளவு இருந்ததாகவும், காவல் தெய்வங்களின் வளர்ச்சி முன்பை விட சோழர் காலத்தில் பெருகி இருந்ததாகவும் தரவுகள் உள்ளன. 
அதேபோல் முற்கால - பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியிலும் பெரும் தெய்வங்களே கொண்டாடப்பட்டன. கிராமப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த சித்திரங்கள் எப்படி பதிவாகவில்லையோ அப்படி கிராம தெய்வங்கள் குறித்த விவரங்களும் கல்வெட்டுகளில் இல்லை.

‘Unlike... very popular Tamil deity already known at the time of the Pallavas... the beginning of Karuppar’s cult remains a mystery...’ என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதாவது, பல்லவர்களுக்குப் பின்னர் சோழ, பாண்டியர் காலத்தில் கருப்பர் வழிபாடு விரிவடைந்திருக்கலாம் என யூகமாகவே சொல்கிறார்கள்; உறுதியாக அல்ல. ஏனெனில் நேரடி, துல்லியமான வரலாற்று ஆதாரங்கள் இக்கணம் வரை குறைவாகவே கிடைத்துள்ளன.

தமிழக வரலாற்று ஆராய்ச்சியாளர்களில் முக்கியமானவரான ஜப்பானைச் சேர்ந்த நொபுரு கரோஷிமா, ‘Village Community and Challenge to the Cas te System’ என்ற தனது ஆய்வில், ‘Inscriptions on stones or copper - plates... are the basic source material for the ancient and medieval his tory of India... particularly so in the case of Tamil Nadu...’ என்று சொல்லி, கிராம தெய்வங்கள் என்ற பொதுவான குறிப்பே கிடைத்திருப்பதாகவும், குறிப்பான கிராம தெய்வம் குறித்த விவரம் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார். 

உண்மைதான். கிடைத்திருக்கும் பல்லவர், சோழ, பாண்டியர் கால கல்வெட்டுகளில் கிராமங்கள் குறித்த தரவுகள் உள்ளன. ஆனால், இன்னாருக்கு இன்ன கிராமம் மானியமாக வழங்கப்பட்டது... இந்தக் கோயிலுக்கு இந்த இந்த கிராமங்கள் ஒதுக்கப்பட்டன... இந்தக் கிராமத்திலிருந்து இவ்வளவு வரி கிடைத்தது... என்பது போன்ற தகவல்களே செதுக்கப்பட்டுள்ளன. மற்றபடி அக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையோ அக்கிராம காவல் தெய்வம் குறித்த விவரமோ இல்லை.  

2019-20ம் ஆண்டுவரை தமிழகத்தில் 24,771 கல்வெட்டுகளை படியெடுத்துள்ளனர். 14,200 கல்வெட்டுகளைப் படித்து ஆராய்ந்துள்ளனர். இவற்றில் எதிலும் நம் கருப்பர் பற்றிய தகவல் இல்லை. சொல்லப்போனால் கிராம தெய்வங்கள் என்ற பொதுவான சொல்லே காணப்படுவதாக சொல்கிறார்கள். ஒருவேளை இனி படியெடுத்து வாசிக்கும் கல்வெட்டுகளில் கருப்பண்ணசாமி குறித்த தகவல்கள் கிடைக்கலாம். 

‘Temple Guardians and ‘Folk Hinduism’ in Tamil South India’ என்ற ஆய்வில் கருப்பண்ணசாமியை ‘Black elder brother God / Regional deity’ என வரையறுத்துள்ளனர். 

நாயக்கர்கள் காலத்தை - 16 முதல் 18ம் நூற்றாண்டு வரை - சேர்ந்த கருப்பண்ணசாமியின் சிலை ஒன்று சமீபத்தில் மதுரையின் கண்மாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  
இதை வைத்து, ‘The beginning of Karuppar’s cult remains a mystery... She stresses the similarity in costume and hairstyle of many Tamil deities... especially Karuppannasamy... to those used in that period and she notes the presence of local rulers, particularly the Nayakas...’ என நாயக்கர் காலத்தில் கருப்பண்ணசாமி தமிழக வழிபாட்டில் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். 

ஆனால், பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் சங்க காலத்துக்கு முன்பிருந்தே தமிழகத்தில் கருப்பர் வழிபாடு இருந்தது என்றும், சமணத்துக்கு முற்பட்ட ஆசிவக மதம் கோலோச்சிய காலத்திலேயே கருப்பண்ணசாமி தமிழக நிலப்பரப்பில் இருந்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இந்த நொடி வரை கிடைக்கவில்லை. 

என்றாலும் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகம் முழுக்க - அன்றைய மதராஸ் மாகாணம் - கருப்பர் இருந்ததற்கான தரவுகள் கிடைத்துள்ளன. ‘The Chennai Government Museum has seven metal 
s tatuettes of Karuppanna samy from around 1800...’ கூடவே, ‘Village temples do not always have the means to commission a bronze statue... As far as personal worship is concerned, Karuppanna samy is considered too dangerous to be worshipped at home...’, ‘The Karuppannar Kovil (‘shrine’) is always found in the outskirts of the village...’ என்கிறார்கள் ரிச்சர்ட் உள்ளிட்ட மேலைநாட்டு ஆய்வாளர்கள். 

உண்மைதான். கருப்பரின் சிலை அல்லது உலோக படிமத்தை வீட்டில் வைத்து வணங்க, பூஜிக்க மக்கள் அச்சப்பட்டார்கள். தவிர, கிராமம்தோறும் எல்லைச்சாமியாக கருப்பண்ணசாமி இருந்ததாலும், ஒரே அறை கொண்ட தங்கள் வீடுகளில் (குடிசைகளில்) பூஜையறை என்ற தனி அறையை மக்கள் நிர்மாணிக்கவில்லை. 

‘The Madras Presidency’ என்ற ஆங்கில நூல், ‘Many of the lower classes... worship more especially the village deities or Grāma Dēvatas ...’ என இதைக் குறிப்பிட்டுள்ளது. ‘Village Gods of South India’ என்ற ஆய்வு, ‘Karuppanna, Padu-Karuppanna’ என்ற பெயர்களுடன் கூடிய கிராம தெய்வங்கள், திருச்சி மாவட்டத்தில் சின்ன கோயில்களாக இருந்ததாக சொல்கிறது. 

இதையெல்லாம் வைத்து ஆராய்ச்சியாளர்கள், கிராம தெய்வ வழிபாடு பெரும்பாலும் வாய்மொழி (Oral Tradition) ஆகவே பரவியிருந்தது... அதனால்தான் இதுகுறித்த கல்வெட்டுகள் குறைவாக உள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்கிறார் அன்னா ஏ.ஸால்ஸ்கா. ஆக, நம் கருப்பர் சங்க காலத்துக்கு முற்பட்டவர். 21ம் நூற்றாண்டிலும் மக்களைக் காப்பவர்; இனிவரும் நூற்றாண்டுகளிலும் மக்களைக் காப்பாற்றப் போகிறவர். 

ஆம். ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
ஓம் கருப்பண்ணசாமியே நமஹ.

(கருப்பர் வருவார்)  

- கே.என்.சிவராமன்