இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!



இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம். 

நவீன கட்டடக்கலைக்கும், தெலங்கானாவின் பாரம்பரியத்திற்கும் ஒரு சாட்சியாக இது உயர்ந்து நிற்கிறது. சுமார் 27.9 ஏக்கர் பரப்பளவில், ₹616 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்தச் செயலகம், நிர்வாகத் திறனை மேம்படுத்துவதுடன், மாநிலத்தின் பெருமையையும் பறைசாற்றுகிறது. 
தெலங்கானா மாநிலச் செயலகம், இந்தோ - சரசனிக் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய தெலங்கானா மற்றும் தக்காணப் பகுதியின் காக்கத்திய கட்டடக்கலை அம்சங்களுடன், இந்தோ - இஸ்லாமிய கூறுகளையும் அற்புதமாக ஒருங்கிணைக்கிறது.

இந்த வடிவமைப்பு தெலங்கானாவின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில், காக்கத்திய மன்னர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் நவீன இந்தியாவின் தாக்கங்களை உள்ளடக்கிய ஒரு ‘கலப்பு கட்டடக்கலையாக’ உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயலகத்தின் முகப்பில் முக்கியமாக இடம்பெறும் குவிமாடங்கள், தெலங்கானா கோயில்கள் மற்றும் அரண்மனைகளில் உள்ள அமைப்புகளைப்போன்றே உருவாக்கப்பட்டுள்ளன. 

குறிப்பாக, நீலகண்டேஷ்வரா கோயில் மற்றும் வானபர்த்தி அரண்மனை போன்ற இடங்களில் உள்ள சிவன் கோயில்களின் அமைப்புகளும், சலாங்பூரில் உள்ள ஹனுமான் கோயிலின் குவிமாடமும் ஜனநாயகத்தின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 265 அடி (81 மீட்டர்) உயரமாக  இந்தச் செயலகம் கட்டப்பட்டுள்ளது. இது தில்லியில் உள்ள குதுப்மினார் மற்றும் ஹைதராபாத்தின் அடையாளமான சார்மினார் ஆகியவற்றின் உயரத்தைவிட அதிகம்.

சுமார் 10 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய செயலகத்தில் 635 அறைகள் உள்ளன. குவிமாடங்களின் எண்ணிக்கை 34. நான்கு திசைகளிலும் நான்கு முக்கிய நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. உட்புற முற்றவெளியின் நடுவில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய முற்றவெளியை அமைத்திருக்கிறார்கள். 

இந்திய பசுமைக் கட்டடக் கவுன்சில் (IGBC) விதிமுறைகளின்படி உருவான இந்தச் செயலகத்தில் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள இச்செயலக வளாகத்துக்கு அருகில் 125 அடி உயரமுள்ள அவரது பிரம்மாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. 

இந்த பிரம்மாண்டமான கட்டமைப்பை வடிவமைத்த பெருமை, சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டடக்கலை நிபுணர்களான டாக்டர் பொன்னி கன்செசாவோ மற்றும் டாக்டர் ஆஸ்கார் கன்செசாவோ ஆகிய தம்பதிகளையே சேரும்.  இதன் மூலம் இந்தியாவில் ஒரு மாநிலச் செயலகத்தை வடிவமைத்த முதல் பெண் கட்டடக்கலை நிபுணர் என்ற பெருமையை டாக்டர் பொன்னி கன்செசாவோ பெற்றுள்ளார். 

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கட்டடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், பின்னர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கார்னெல் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றார்.பெண் வடிவமைத்திருப்பதால் இச்செயலகத்தில் சமூக மற்றும் பாலின சமத்துவக் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

செயலக வளாகத்தில் ஒரு கோயில், மசூதி மற்றும் தேவாலயம் கட்டப்பட்டுள்ளன. பணிபுரியும் தாய்மார்களுக்காக ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.டாக்டர் ஆஸ்கார் கன்செசாவோவும் திருச்சியில் உள்ள என்ஐடியில் கட்டடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றவர்தான். அமெரிக்காவிலுள்ள ஓக்லஹோமா மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்தான்.

என்.ஆனந்தி