ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!
சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ். கடந்த வாரம் ஜப்பானிய மன்னர் நரிஹிட்டோ, அதிகாரபூர்வமாக சனாயேவை ஜப்பானின் பிரதமராக நியமனம் செய்தார். 1885ம் வருடத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் ஜப்பானிய பிரதமர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால், ஒரு பெண் கூட பிரதமராக இருந்ததில்லை.
 இந்நிலையில் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறார், சனாயே. இவரை ‘ஜப்பானின் இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கின்றனர். மட்டுமல்ல, ஜப்பானின் பழமைவாத கட்சியான எல்டிபி (Liberal Democratic Party)யின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் சனாயே. 69 வருடங்களாக இயங்கி வரும் எல்டிபியின் முதல் பெண் தலைவரும் இவரே. நாலாப்பக்கமிருந்தும் சனாயேவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
யார் இந்த சனாயே டகாய்ச்சி?
ஜப்பானின் நரா மாகாணத்தில் உள்ள யமாட்டோக்கோரியாமா எனும் நகரில் வாழ்ந்த ஓர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவர், சனாயே டகாய்ச்சி. பெரும்பாலான ஜப்பானிய அரசியல்வாதிகள் அரச வம்சத்தையும், பெரும் பணக்காரக் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, நாட்டையே வழிநடத்தும் பிரதமராக ஒரு பெண் உயர்ந்திருப்பது ஜப்பானியர்களின் மத்தியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அத்துடன் ஜப்பானிய பெண்களின் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது.
பொதுவாக ஜப்பானிய பெண்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சனாயேவின் தந்தை கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்; அம்மா, காவல்துறையில் பணியாற்றியவர். பள்ளியில் நன்றாகப் படித்த சனாயேவுக்கு புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது.
ஆனால், வீட்டைவிட்டு வெளியேறி, விடுதியில் தங்கித்தான் படிக்க வேண்டும் என்ற நிலை. பெண் குழந்தைகள் வீட்டிலிருந்துதான் படிக்க வேண்டும்; விடுதியில் தங்கிப் படிப்பதாக இருந்தால் கட்டணம் செலுத்த முடியாது என்று சனாயேவின் பெற்றோர்கள் கட்டுப்பாடுகள் விதித்தனர்.
அதனால் சனாயேவால் அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர முடியவில்லை. அவரது வீட்டுக்கு அருகில் கோப் பல்கலைக்கழகம்தான் இருந்தது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு சனாயேவின் வீட்டிலிருந்து சென்று வர, 6 மணி நேரமாகும். இருந்தாலும் தினமும் 6 மணி நேரம் பயணம் செய்து படித்தார்.இவ்வளவு கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பச் சூழலில் வளர்ந்த சனாயேதான், ஜப்பானின் முதல் பெண் பிரதமராக வாகை சூடியிருக்கிறார் என்பது இன்னும் ஆச்சர்யம்.
இளம் வயதில் அரசியலை விட, இசை மீதுதான் பெருங்காதலுடன் இருந்தார். குறிப்பாக மெட்டல் டிரம்ஸை வாசிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். ஒரு முறை தீவிரமாக டிரம்ஸை வாசிக்கும்போது டிரம்ஸ்டிக்கை உடைத்துவிட்டார். அந்தளவுக்கு டிரம்ஸை வாசித்திருக்கிறார் சனாயே. இப்போதுகூட ராக் இசையின் ரசிகையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். ‘எக்ஸ் ஜப்பான்’ எனும் ராக் இசைக்குழுவின் பரம ரசிகையாக வலம் வருகிறார்.
மட்டுமல்ல; கார் மற்றும் பைக் ஆர்வலரும் கூட. சனாயேவின் ‘டொயோட்டா சுப்ரா’ என்ற கார் நராவில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுபோக ‘கவாஸாகி இஸட்400’ என்ற பைக்கையும் வைத்திருக்கிறார் சனாயே.
இசை, பைக், கார் என்றிருந்த சனாயே, அரசியலில் இறங்கி வரலாறு படைத்தது தனிக்கதை. எண்பதுகளின் பிற்பகுதியில் அமெரிக்காவுக்குச் சென்று, அங்குள்ள ஒரு பெண் அரசியல்வாதியிடம் சேலைக்குச் சேர்ந்தார். இதற்காக ஒரு கல்வி நிறுவனம் சனாயேவுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்தது.
அமெரிக்காவில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், ஒரு பெண்ணாலும் அரசியலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தந்தது. இரண்டு வருடங்களில் அமெரிக்க அரசியல் குறித்த நுணுக்கங்களை அறிந்துகொண்ட சனாயே, 1989ல் ஜப்பானுக்குத் திரும்பினார். முழுமையாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.
முதலில் ஜப்பானின் சட்டமன்ற ஆய்வாளராக வேலை செய்ய ஆரம்பித்தார். வேலைக்கு இடையில் அமெரிக்க அனுபவங்களைப் புத்தகமாகவும் எழுதினார். இதுபோக ஒரு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் வேலை செய்தார் சனாயே.கடந்த 1993ல் ஜப்பானிய பொதுத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, பாராளுமன்றத்தின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜப்பானிய அரசியலில் சனாயேவின் பெயர் அறிமுகமானது.
தங்கள் கட்சியில் சேர்வதற்காக பலரும் சனாயேவை அழைத்தனர். அவர், 1994ல் ‘லிபரல்ஸ்’ என்ற கட்சியில் சேர்ந்தார். ஆனால், லிபரல்ஸ் கட்சியோ என்எஃப்பி (New Frontier Party) என்ற கட்சியுடன் இணைந்துகொண்டது.
1996ல் நடந்த தேர்தலில் தேசிய அளவில் பெரும் தோல்வியைத் தழுவியது என்எஃப்பி. அதனால் 1996ல் எல்டிபி கட்சியில் இணைந்து, புது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார் சனாயே. இதனால் அவர் மீது என்எஃப்பி கட்சியினர் கடுமையான விமர்சனங்களைத் தொடுத்தனர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து எல்டிபி கட்சியில் செயல்பட்டார்.
எல்டிபி சார்பாக தேர்தல்களில் போட்டியிட்டு, பல துறைகளில் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். பிறகு எல்டிபியின் தலைவராக உயர்ந்ததோடு, நாட்டின் முதல் பெண் பிரதமராகவும் வரலாறு படைத்துவிட்டார் சனாயே. அரசியலில் மட்டுமல்ல, தனிப்பட்ட அவரது வாழ்க்கையும் ஆச்சர்யமானது.
எல்டிபி கட்சியைச் சேர்ந்த டாகு யமமோட்டா என்பவரை, 2004ல் திருமணம் செய்தார் சனாயே. இத்தம்பதியினருக்கு மூன்றுகுழந்தைகள் இருக்கின்றனர். வீட்டுக்குள் நடந்த அரசியல் வாக்குவாதம் சூடுபிடித்து, 2017-ல் விவாகரத்து செய்துவிட்டனர். 2021ம் வருடம் விவாகரத்தை நிராகரித்துவிட்டு, மீண்டும் இருவரும் இணைந்ததோடு இரண்டாவது முறையாகவும் திருமணம் செய்துகொண்டனர். சனாயேவின் குடும்பப் பெயரான டகாய்ச்சியைத் தனது பெயருடன் சேர்த்துக்கொண்டார் டாகு. ஜப்பானிய ஆணாதிக்க சமூகத்தில், அதுவும் அரசியலில் இருக்கும் ஒருவர் தனது மனைவியின் குடும்பப்பெயரைத் தனது பெயருடன் இணைத்துக்கொண்டது அங்கே அரிய நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. இப்போது சனாயேவின் வயது 64. டெயில் பீஸ்: ஹிட்லரின் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் கொண்டவர் சனாயே. ஹிட்லர் குறித்த புத்தகங்களை விரும்பிப் படிக்கும் அவரது புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றன.
அதேபோல் அமெரிக்காவின் மீதும் சனாயேவுக்கு மதிப்பு உண்டு. சீனாவுக்கும் அமெரிக்காவும் தற்சமயம் நடந்து வரும் பனிப்போரில், சீனாவுக்கு அருகாமையில் இருக்கும் நாடான - தீவான - ஜப்பானில் அமெரிக்க ஆதரவு பெற்றவர் பிரதமராக பதவியேற்பது சர்வதேச அளவில் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
த.சக்திவேல்
|