62 நாமினேஷன்ஸ... 54 சர்வதேச விருதுகள்...ஒரு தமிழ்ப் படம்!
ஆம்... சர்வதேச அளவில் 62 நாமினேஷன்ஸ், அதில் 54 விருதுகள்... சிறந்த நடிகருக்கு 26, சிறந்த படமாக 23, சிறந்த தொழில்நுட்ப கலைஞருக்கு ஆறு என பல அங்கீகாரங்களைப் பெற்று எவ்வித சலனங்களும் இல்லாமல் படக்குழுவை தேட வைத்திருக்கிறது ‘வெள்ளகுதிர’ திரைப்படம். ஏன் இவ்வளவு விருதுகள்?அப்படி என்ன கதை? படம் குறித்தும் தன் பயணம் குறித்தும் பகிர்ந்தார் நடிகர் ஹரிஷ் ஓரி என்கிற தயாரிப்பாளர் ஹரிஷ் ஓரி அர்த்தநாரி.‘‘ஓர் ஊர்... அங்கே நடக்கும் கதைக்குள்... மூதாதையர்களை குறிக்கும் ஓர் அடையாளமாகத்தான் இந்த ‘வெள்ளகுதிர’ என்கிற பெயரைப் பயன்படுத்தறாங்க. அதை சார்ந்து பயணிக்கும் கதை என்பதால் படத்திற்கு இந்தத் தலைப்பு. ந.முத்துசாமி ஐயா கூத்துப்பட்டறைல 13 வருட முழு நேர நடிப்பு பயிற்சி எடுத்துக்கிட்டேன். அரசு அங்கீகாரம் பெற்ற நாடகக் குழு என்பதால் எங்களுக்கு குறிப்பிட்ட வருமானமும் அரசாங்கம் மூலம் வரும். வருடத்தில் நான்கு ஐந்து முறை கலை நிகழ்ச்சிகளுக்கு நாடகம் போடுகிற வாய்ப்புகளும் அரசாங்கம் கொடுப்பாங்க. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சமூகம் சார்ந்த தலைப்பு கொடுப்பாங்க.
அதற்கு நாங்கள் கதை உருவாக்கி தெரு நாடகங்கள் அமைக்கணும். பள்ளிகள், கல்லூரிகளில் குழந்தைகளுக்கான நாடகங்களும் அமைத்துக் கொடுக்கறதுண்டு. இதனுடன் ஐடி பணியாளர்களுக்கு அவர்களின் பணி சோர்வு போக்க ஐடி கிளென் வேலைக்கும் அதிகம் போவதுண்டு. அங்கே அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்கும் ஆக்டிவிட்டி கொடுப்போம்.
120க்கும் மேற்பட்ட இந்திய, வெளிநாட்டு நவீன நாடகங்கள், அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாடு, வெளிநாடு மேடை ஏற்றங்கள், தமிழ்நாடு, இந்தியா, வெளிநாட்டு கலாசார கலைகள்... இதுதான் என்னுடைய பயணம்.
இந்த கூத்துப்பட்டறைலதான் இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் எனக்கு நண்பரானார். அவர் ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டனிடம் உதவி இயக்குநரா இருந்தவர். அவர்தான் இந்தக் கதையை ஒரு குறும்படமாக எடுக்கலாம்னு சொன்னார். அந்தக் குறும்படம் நிறைய அங்கீகாரங்களையும் விருதுகளையும் பெற்றது. நாடகங்கள், குறும்படங்கள்னு அடுத்தடுத்து எங்க பயணம் நகரத் துவங்க, தொடர்ந்து சினிமாவுக்குள்ள கால் பதிக்கலாம்னு முடிவு செய்தோம்.
ஆனா, அதிலும் சமூகம் சார்ந்த கதைனு முடிவுடன் இருக்கறோம்...’’ என்னும் ஹரிஷ் ஓரி, குறும்படங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்களுக்கு கதை, வசனம், கவிதை எழுதி, இயக்கியும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக திரைப்பட நாடக விருதுகள் பெற்றுள்ளார். இவர்களின் நாடகக் குழு ஐநாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற கூத்துப்பட்டறை என தன் விவரங்களைப் பகிர்ந்தவர், ‘வெள்ள குதிர’க்கு வந்தார்.
‘‘கொல்லிமலை, ஏற்காடு... ரெண்டு மலைகளுக்கும் இடையே இருக்கிற ஒரு பகுதி. கிட்டத்தட்ட 14 கிலோ மீட்டர் நடந்துதான் மேல ஏறிப் போனோம். ஒரு பத்து கழுதைகள், மலையேறும் மக்கள் உதவியுடன்தான் படப்பிடிப்புக்குத் தேவையான பொருட்கள் அத்தனையையும் மேல கொண்டு போனோம்.ட்ராக், டிராலி, கிம்பல்னு படப்பிடிப்புக்குத் தேவையான அத்தனையும் கொண்டு போய் பலமுறை நடந்து சேர்க்க வேண்டியதா இருந்தது. எங்க பொருட்களை வைச்சுட்டு அங்கிருந்த பள்ளில தங்கினோம்.
48 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நிறைய காயங்கள், விழுந்து எழுந்து, நிறைய சவால்களை சந்திச்சோம். அதற்கெல்லாம் பரிசாதான் 52 விருதுகள் கிடைச்சிருக்கு...’’ என்னும் ஹரிஷ் மற்றும் இயக்குநர் சரண்ராஜ் செந்தில் குமார் குழு சுமார் ஆறு முறை படப்பிடிப்புக்கு முன்பு வெறும் இடம் பார்ப்பதற்காகவே அந்த மலைகளில் சுற்றித்திரிந்திருக்கிறார்கள்.
‘‘அங்கே இருக்கும் மக்கள்கிட்ட பேசி, அவர்களுடைய பாதிக்கப்பட்ட கதைகளையும் சேர்த்து பதிவு செய்து ஸ்கிரிப்டா எழுதினார் சரண்ராஜ். கடந்த ஆறு வருடங்களா தமிழ்ச் சினிமாவுக்கு விருது கிடைக்காத இடத்துலகூட ‘வெள்ளகுதிர’ விருது வாங்கியிருக்கு.
ஒரு மனுஷன் நகரத்திலிருந்து, தான் பிறந்த மலை கிராமத்துக்கு வர்றான். அப்பாவி மக்களின் நிலைய பயன்படுத்தி சில தவறுகளை செய்ய முயற்சிக்கறான்.
இந்தக் கதை எல்லா நாட்டுக்கும் பொருந்தும். எதார்த்தமான ஒரு கதைக்குள்ள சமூகம் சார்ந்த மிக முக்கிய பிரச்னையை பேசியிருக்கோம். எத்தனை அங்கீகாரம் கிடைச்சாலும் நம்ம சொந்த மண்ணுல நம்ம மக்கள் மத்தில கிடைக்கும் சின்ன கைதட்டல் மிகப்பெரிய விருதுக்கு சமம். தமிழக வெளியீட்டுக்காக நிறைய கனவுகள், எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கோம்...’’ என்கிறார் ஹரிஷ்.
ஷாலினி நியூட்டன்
|