தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!



சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். 
இதில் ஆண்கள் பிரிவில் தங்கம் வென்ற அணியில் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷும், பெண்கள் பிரிவில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகாவும் இடம்பெற்று தமிழகத்திற்கு மகுடம் சூட்டியுள்ளனர். 

இந்நிலையில் தமிழகம் வந்த கார்த்திகா மற்றும் அபினேஷை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டுக்கு அழைத்து பாராட்டி தலா 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தனது எக்ஸ் தளத்தில், ‘எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது’ என இருவரையும் வாழ்த்தி பதிவிட்டார். தற்போது கார்த்திகாவையும், அபினேஷையும் தமிழகமே பாராட்டி வருகிறது.  

கார்த்திகா

இந்தியப் பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக இருந்து வெற்றிக்கு வித்திட்ட கார்த்திகா சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர். இந்த வெற்றியால் கண்ணகி நகரே கோலா
கலம் பூண்டுள்ளது.  கார்த்திகாவின் வீட்டினுள் நுழைந்தால் சுற்றிலும் பதக்கங்களால் நிரம்பி இருப்பதைப் பார்க்கலாம். அவரின் தந்தை ரமேஷ் ஒரு கட்டுமானத் தொழிலாளி. தாய் சரண்யா ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். தங்கை காவ்யா. 

கார்த்திகா தற்போது கண்ணகி நகர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே கபடியில் அத்தனை ஆர்வமாக இருந்துள்ளார். 
எளிய பின்புலம் அவரை சாதிக்கத் தூண்டியிருக்கிறது. இந்நிலையில் பள்ளிகள் அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றிகள் குவித்தார். தொடர்ந்து தனியார் கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்தார். அவருக்குப் பயிற்சியாளர் ராஜி பல நுணுக்கங்களைக் கற்றுத் தந்துள்ளார்.

பிறகு மாநில அளவில் பங்கெடுத்தவர், மகாராஷ்டிராவில் நடந்த 4வது சீனியர் பெடரேஷன் கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக ஆடினார்.

அது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, தேசிய அணியில் இடம்பிடிக்கும் முகாமிற்கு கார்த்திகாவை அழைத்துச் சென்றது. அப்போது தமிழ்நாடு அணியில் கார்த்திகா அதிக ஸ்கோர் எடுத்த வீராங்கனையாகவும் மிளிர்ந்தார். 

அப்படியாக இந்திய அண்டர் 18 அணியில் விளையாட இடம்பிடித்தார். இதில்தான் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடியில் இந்திய அணியினர் ஒருபோட்டியில்கூட தோற்கவில்லை. இதில் பெண்கள் அணியினர் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக 46 - 18 என்ற புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றனர்.

இரண்டாவது போட்டியில் தாய்லாந்து அணிக்கு எதிராக 70 - 23 புள்ளிகளும், மூன்றாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 73 - 10 புள்ளிகளும், நான்காவது போட்டியில் ஈரான் அணிக்கு எதிராக 59 - 26 புள்ளிகளும் எடுத்து குரூப்பில் முதலிடம் பிடித்தனர். இறுதிப்போட்டியில் ஈரானுடன் மோதியதில் 75 - 21 புள்ளிகள் எடுத்து தங்கத்தைத் தட்டினர். இதில் கார்த்திகா அதிக ஸ்கோர் எடுக்க காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது கார்த்திகாவின் குடும்பம் மட்டுமல்ல, அவரின் கண்ணகி நகரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறது. கண்ணகி நகர் என்றாலே ஒருவித தப்பெண்ணம் பலரிடையே இருந்து வந்தது. அந்த எண்ணத்தையும் துடைந்தெறிந்துள்ளார் கார்த்திகா. எப்படி சென்னை வியாசர்பாடி கேரம் போட்டிகளுக்கு பெயர்பெற்று விளங்குகிறதோ அதேபோல் கண்ணகி நகர் இப்போது கார்த்திகா வழியாக கபடிக்குப் பெயர் பெற்றுள்ளது. 

அபினேஷ்

திருவாரூர் மாவட்டம் வடுவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் அபினேஷ் மோகன்தாஸ். இந்தக் கிராமத்தில் உள்ள ஏஎம்சி கபடி கழகம் மூலமாக அபினேஷிற்கு கபடியில் ஆர்வம் வந்துள்ளது.வடுவூர் பள்ளியில் படித்தபோதே அவர் கபடி கழகத்தில் சேர்ந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார். சிறுவயதில் அப்பாவை இழந்த அபினேஷிற்கு எல்லாமுமாக இருந்தது அவரின் அம்மாதான். அவருக்கு இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். 

வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். இதனால் உள்ளூர் விளையாட்டு வீரர்களின் வழிகாட்டுதலின்படி தேனியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கி படித்துள்ளார். அங்கே கபடியில் அபார பயிற்சி பெற்றுள்ளார். 

பிறகு தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்திற்குத் தேர்வானார். சிறந்த தடுப்பாட்டக்காரராக பிரகாசித்தார். அங்கிருந்து இந்திய இளையோர் கபடி அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் அபினேஷ். அப்படியாக தற்போது ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கத்தைத் தட்டி வந்துள்ளார். அடுத்து இந்திய சீனியர் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பது அபினேஷ் மோகன்தாஸின் கனவு.

பேராச்சி கண்ணன்