மழை மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன?
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த மழைக் காலத்தில் தொற்றுநோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். அதற்கு சத்தான உணவுகள் உட்கொள்ள வேண்டும்.இந்த மழைக் காலத்திலும் அதனுடன் இணைந்து வரும் குளிர்காலத்திலும் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்? ஊட்டச்சத்து நிபுணர்கள் தரும் தகவல்கள் இவை.
 *புரதச்சத்து முக்கியம்
மழைக்காலத்தில் சீதோஷ்ண நிலை மாறுவதால் பலவகையான தொற்றுநோய்கள் வருவதற்கு சாத்தியங்கள் உள்ளன. இந்நேரத்தில் நாம் புரதச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக புரதச்சத்துள்ள பருப்புகளையும், தானிய வகைகளையும் எடுத்துக் கொள்வது சிறந்தது. இதில் கொண்டக்கடலை, பச்சைப்பயிறு, தட்டாம்பயிறு, மொச்சை மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
அதேபோல் மழைக்காலம் என்பதால் பலரும் பால், தயிர், மோர் வகைகளை எடுத்துக் கொள்ளத் தயங்குவார்கள். அப்படியானவர்கள் ஒருநாளைக்கு இரண்டு கப் பால் எடுக்கலாம். தயிர் சாப்பிட நினைப்பவர்களும் தாராளமாக சாப்பிடலாம்.தயிர் ஒரு புரோபயாட்டிக் உணவு. இது நம் குடலுக்கு நன்மை செய்யும் நல்ல பாக்டீரியாக்களைத் தருகிறது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவே செய்யும்.
அசைவப் பிரியர்கள் முட்டை, மீன், சிக்கன் ஆகிய மூன்றையும் நன்றாக வேகவைத்து குழம்பாக சாப்பிடுவது நல்லது. இதில் அசைவ உணவை எப்படி தயார் செய்கிறோம் என்பது முக்கியமானது.பொதுவாக இந்தக் காலத்தில் உணவில் அதிகளவில் எண்ணெய் சேர்க்க வேண்டாம். எண்ணெயில் வறுத்த உணவுகளையும் குறைக்க வேண்டும்.
*சூடாகக் குடிப்பது நல்லது
பொதுவாக, இந்த மழைக்காலத்தில் சூடாகக் குடிக்கத் தோன்றும். அதனால் காய்கறி சூப் தயார் செய்து குடிக்கலாம். பெரியவர்கள் மூன்று வேளை டீ அருந்தலாம். அதற்குமேல் வேண்டாம். கிரீன் டீ ஒருநேரமும், சாதா டீ இருவேளையும் எடுத்துக் கொள்வது நல்லது.டீ, காபி போன்ற பானங்களில் காஃபின் என்ற வேதிப்பொருள் சேர்ந்திருக்கும். அது உடம்பில் இருக்கிற நீர்ச்சத்தை குறைத்துவிடும். கெடுதலும்கூட. அதனால் மூன்றுவேளை அருந்தினால் போதுமானது.
இதன்பிறகும் சூடாக குடிக்க வேண்டும் எனத் தோன்றினால் சீரகத்தைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். இது உடலுக்கு ரொம்ப நல்லது.இன்று வீடுகளில் கேன் வாட்டர் வாங்கித்தான் பயன்படுத்துகிறோம். இந்நேரத்தில் அந்தக் கேன் வாட்டர் தண்ணீரை அப்படியே குடிக்க வேண்டாம். அதை நன்றாக கொதிக்கவைத்து, பிறகு ஆறவிட்டு குடிப்பது நல்லது.
ஏனெனில் தண்ணீர் வழியாகவே பல நோய்கள் பரவும். குறிப்பாக வயிற்றுப்போக்கு மாதிரியான பிரச்னை ஏற்படும். இதைத் தடுக்க கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அடுத்து, மழைக்காலத்தில் சளி பிடிப்பதுபோல் இருந்தால் துளசியை தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்து பருகுவது சிறந்தது. இதைத் தவிர இன்னும் அதிகமாக மூக்கில் தண்ணீர் ஒழுகினால் வீட்டு பூஜை அறையில் இருக்கும் வெறும் கற்பூரத்தை கைக்குட்டையில் வைத்து முகர்ந்து பார்த்தால் நீர் ஒழுகுவது நின்றுவிடும். இன்ஹே லர் மாதிரி கற்பூரத்தை உபயோகப்படுத்தலாம். இது பெரியவர்களுக்குத்தான்.
குழந்தைகளுக்குச் சளி பிடித்தால் தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சூடுபடுத்தி மிதமான இளஞ்சூட்டில் குழந்தைகளின் மார்பில் தடவி விடவேண்டும். இதன்பிறகும் மூக்கு ஒழுகுதல், சளி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
தொடர் இருமல் இருந்தால் மிளகுப் பால் பருகலாம். குழந்தைகளுக்கு மழை மற்றும் குளிர்காலத்தில் எந்த உணவை வேண்டுமானாலும் கொடுக்கலாம். மூன்று வேளை உணவு கட்டாயம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு புரதச்சத்தும், வைட்டமின் சி உள்ள உணவுகளும், ஜிங்க் சத்துள்ள உணவுகளும் அவசியம். பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். பாக்கெட்டில் விற்கிற உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பெரியவர்களுக்கு குளிர்காலத்தில் பருப்பு வகைகளை, காய்கறிகளுடன் சேர்த்து வேகவைத்து சூப் செய்து கொடுக்கலாம். அசைவ உணவை விரும்புபவர்கள் ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். இந்நேரத்தில் வைட்டமின் சி சத்து இருந்தால் நல்லது. அதனால், பெரிய நெல்லிக்காயை கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
சிறிதளவு தண்ணீரில் மஞ்சள்பொடி அல்லது உப்பு போட்டு கொதிக்கவிட வேண்டும். பிறகு அதில் நெல்லிக்காயை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த நெல்லிக்காயில் ரெண்டு பீஸ் சாப்பிட்டால் வைட்டமின் சி சத்து கிடைக்கும். இது எதிர்ப்பு சக்தியை அளிக்கும். ஒரே இடத்தில் உட்காராமல் நன்றாக நடக்க வேண்டும். ஒருநாளைக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதே உடல் வலுப்பெறும்.
சரி, மழைக் காலத்தில் சுரைக்காய், சவ்சவ் மாதிரியான நீர் காய்கறிகளை சாப்பிடலாமா?
இந்தக் காலத்தில் எல்லா வகையான காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் எல்லா வகை கீரைகளையும் சாப்பிடலாம். ஆனால், கீரை வாங்கும்போது பார்த்து வாங்கி, அதனை உப்புப் போட்டு கழுவி சமைக்க வேண்டும். அப்போதே அதிலுள்ள கிருமிகள் வெளியேறும். இதனை நன்றாக வேக வைத்து சூப் ஆகவோ அல்லது சீரகம், மிளகு போட்டு கூட்டு மாதிரியோ செய்து சாப்பிடலாம்.
ஆர்.சந்திரசேகர்
|