சென்னையில் சிங்கப்பூர் ஸ்டைல் ஐஸ்கிரீம் சாண்ட்விச்!



உலக உணவு கலாசாரத்தில் எல்லா நாடுகளிலும் கிடைக்கக்கூடிய டிஷ் என்றால் அது கேக்கும் பிரட்டும்தான். ஆரம்பத்தில் இதனை வாங்குவதற்கு நாம் பேக்கரிக்குத்தான் செல்வோம். 
ஆனால், இப்போது வீட்டிலேயே தயார் செய்யும் டிஷ்ஷாக மாறியிருக்கிறது. குறிப்பாக வீட்டுப் பெண்கள் பலர் கேக்குகளையும் பிரட்டுகளையும் தயாரித்து இணையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அப்படி வீட்டில் இருந்தபடி கேக்கும் பிரட்டும் தயாரித்து விற்பனை செய்துவந்த ஹிஷ்மா பாத்திமா இப்போது, ‘த மெட்ராஸ் நீட்ஸ்’ என்கிற பேக்கரியைத் தொடங்கி பாப்புலராக இருக்கிறார். 
சென்னை வள்ளுவர் கோட்டத்துக்கு பின்புறம் இருக்கிறது இவரின் கேக் ஷாப். இதில் கொரியன் பன், லோட்டஸ் பாப்கா, பிஸ்தா பாப்கா, குரோசண்ட்ஸ், சிங்கப்பூர் ஸ்டைல் ஐஸ்கிரீம் சாண்ட்விச் என உலகின் தனித்துவமான பேக்கரி ஐட்டங்களை விற்பனை செய்கிறார். அதுமட்டுமில்லாமல் நட்சத்திர உணவகங்களில் மட்டுமே கிடைக்கிற வெரைட்டி கேக்ஸும் இவரின் தயாரிப்பில் இருக்கின்றன. 

தவிர, சிங்கப்பூரில் கிடைக்கும் பல வெரைட்டி கேக் அண்ட் பிரட்களை சென்னைக்கு முதல்முதலாகக் கொண்டும் வந்திருக்கிறார். ‘‘சொந்த ஊர் சென்னைதான். சின்ன வயசுலேயே கேக் தயாரிச்சு அதை எல்லாருக்கும் சாப்பிடக் கொடுக்கணும்னு எனக்கு ஆசை. எப்படி இப்படியொரு ஆசை வந்ததுனு தெரியல. ஆனா, அது ஒரு கடையைத் திறக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கு...’’ என மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார் ஹிஷ்மா பாத்திமா. 

‘‘பள்ளிப் படிப்பு முடிச்சதுமே கேக் தயாரிப்பு சார்ந்து படிக்கணும்னு நினைச்சேன். ஆனா, இன்டீரியர் டிசைனிங் படிக்கும்படி ஆகிடுச்சு. இருந்தும் கல்லூரியில் படிக்கும்போதே கேக் செய்யத் தொடங்கிட்டேன். 

ஆரம்பத்தில் வீட்டில் இருக்கிறவங்க சாப்பிட செய்து கொடுத்திட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பிசினஸாக்கலாம்னு வீட்டில் இருந்தபடியே விற்பனையைத் தொடங்கினேன். ஆன்லைன் விற்பனை டெலிவரி மூலம் முன்னெடுத்தேன். ஆனா, ஆர்டர்கள் அதிகம் வந்ததால என்னால் வீட்டில் இருந்தபடி கொடுக்க முடியல.

அதனால், ‘த மெட்ராஸ் நீட்ஸ்’ கடையைத் தொடங்கினேன். இதன்பிறகு பிரட் தயாரிப்பில் ஆர்வம் அதிகமாச்சு. வெளிநாடுகள்ல பிரட்தான் பிரதான உணவு. அப்படிப்பட்ட பிரட்டை பல வெரைட்டில, குறிப்பா சென்னையில் எங்கேயும் இல்லாத சுவைல கொடுக்கணும்னு பயிற்சி வகுப்புகளுக்குப் போனேன். 

சென்னை, பெங்களூர்னு எல்லா இடத்திலேயும் கேக், பிரட் தயாரிப்புகளை முறைப்படி கத்துக்கிட்டேன். ஒவ்வொரு முறையும் கத்துக்கிட்டதும் அதனை வீட்டில் வந்து செய்து பார்ப்பேன். சரியான சுவையில் வர்ற அளவுக்கு செஞ்சு பார்த்திட்டே இருப்பேன். அப்படியாக எல்லா பிரட் ஐட்டங்களையும் கத்துக்கிட்டேன். 

இதில் பிரட் ஐட்டங்கள் என்றால் நம்ம ஊர்ல கிடைக்கிற சாதாரண பிரட்டுகள் மட்டுமில்ல... கொரியன் பிரட், பிரான்ஸ்ல கிடைக்கக்கூடிய பிரட், சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் இப்படி பல நாடுகள்ல கிடைக்கும் பிரட்டுகளை தயாரிக்கவும் கத்துக்கிட்டேன். அதனை இப்ப ஒரே இடத்துல கிடைக்கும்படி செய்திருக்கேன். 

இந்த மாதிரி பேக்கரி ஸ்டைல்ல வெரைட்டி பிரட்ஸ் கொடுக்கணும் என்பது என் ஆசை மட்டுமில்ல, அது என்னோட பேஷனும் கூட. கேக்கின் சுவை, கேக்கின் வடிவம் இதெல்லாம் நல்லா செஞ்சா மட்டும் வந்துடாது. கேக் தயாரிப்புக்கான பொருட்களில் எந்தக் கலப்படமும் இல்லாத தரமான பொருட்களை வாங்கணும். அப்போதான் அந்த சுவை அப்படியே வரும். 

அதனால் மைதாவுல இருந்து பட்டர் வரை எல்லாமே அதிக விலை கொடுத்துதான் வாங்கறேன். மாதத்திற்கு அமுல் பட்டர் மட்டும் 40 கிலோ வாங்கிடுவேன். அதேபோல, இங்க இருக்கிற மைதாவில் பிரட்டோட சுவை கொஞ்சம் கம்மியா இருப்பது தெரிஞ்சது.எனக்குப் பூர்வீகம் கீழக்கரை. அங்கே பரோட்டா நல்லா இருக்கும். அதனால், அங்க இருக்கிற மைதாவில் பிரட் செஞ்சு பார்த்தேன். சுவையும் வடிவமும் ரொம்ப யூனிக்கா இருந்தது. அதனால் மைதாவை அங்கிருந்து வரவழைக்கறேன். 

என் கடையின் ஸ்பெஷல்னா அது சிங்கப்பூர் ஸ்டைல் ஐஸ்கிரீம் சாண்ட்விச்தான். சிங்கப்பூர்ல இது ரோட்டுக் கடை டிஷ். அங்க எல்லா இடத்திலயும் கிடைக்கும். ஆனா, நம்ம ஊர்ல பெரிய ரெஸ்டாரண்ட்ல கூட இது கிடையாது.சிங்கப்பூர்ல நான் சாப்பிட்டு பார்த்து இதை நம்ம ஊருக்கு கொடுக்கணும்னு சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கேன். இதை செய்வதற்கான பிரட்டை பார்க்கவே அழகா இருக்கும்.

அந்த பிரட்ல ரெயின்போ கலர்ஸ் கொண்டுவந்து அதுக்குமேல ஐஸ்கிரீம், நட்ஸ், சாக்கோ கிரீம், சாக்லேட் எல்லாம் வைச்ச பிறகு அதை இன்னொரு பிரட்டைக் கொண்டு மூடி சாண்ட்விச் ஸ்டைல்ல கொடுப்போம். பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கும். இப்பவரை எங்க கடையின் ஸ்பெஷல் இதுதான். 

அடுத்ததா ஃபிரான்ஸ் நாட்டு பிரேக் ஃபாஸ்ட். இந்த பிரட்டின் பெயர் குரோசண்ட். அதை செய்வதற்குத்தான் அதிக நேரம் எடுக்கும். அதேபோல, அதன் செய்முறையைக் கத்துக்க மட்டும் ஐந்து முறை கோச்சிங் கிளாஸ் போனேன். ஏன்னா குரோசண்ட் செய்வது ரொம்பவும் கஷ்டம். அதுவும் வீட்ல தயாரிக்கறது சவாலானது. 

காரணம், குரோசண்ட் செய்யும்போது அதுக்குள்ள பட்டர் வச்சு ரோல் பண்ணுவோம். அப்படி ரோல் பண்ணும்போது பட்டர் உடையாம பார்த்துக்கணும். அப்புறம் குரோசண்ட்ல பலதரப்பட்ட அடுக்குகள் வரும். அதனால் ஆரம்பத்துல தயாரிக்க ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.ஆனா, இப்ப ரொம்ப ஈஸியாக வருது. இந்த குரோசண்ட்ல மட்டுமே பல வெரைட்டிஸ் இருக்கு. சாக்லெட் குரோசண்ட், பாதாம் குரோசண்ட், ஸ்ட்ராபெரி குரோசண்ட்னு பல நட்ஸ்கள் வச்சு பல வெரைட்டியில் குரோசண்ட் தயாரிக்கலாம். 

இது எல்லாத்தையும் வீட்டிலேயே தயாரிக்கறதால என்னால தனியா பண்ணமுடியல. அதனால துணைக்கு சில பெண்களை சேர்த்துக்கிட்டேன். இவங்க வீட்டு வேலைக்காக வந்தவங்க. இப்போ கேக்கும் பிரட்டும் தயாரிக்க கத்துக்கிட்டாங்க.இப்போ வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில் இன்னும் என்னென்ன வெரைட்டியில் பிரட்ஸ் இருக்கோ அது எல்லாத்தையும் இங்கே கொண்டு வரணும் என்பதே என் ஆசை...’’ என உற்சாகமாகச் சொல்கிறார் ஹிஷ்மா பாத்திமா.

செய்தி: ச.விவேக்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்