உலகை அச்சுறுத்தும் நரம்பு எமன்!



உலகளவில் சுமார் 40 சதவீத மக்கள், அதாவது கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் நரம்பியல் பிரச்னைகளால் பாதிக்கப்படுவதாக ஒரு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அபாய சங்கிலியை இழுத்திருப்பது உலக சுகாதார அமைப்பு. இதனால் வருடத்துக்கு ஒரு கோடியே 10 லட்சம் நோயாளிகள் இறப்பதாகவும் புள்ளிவிவரம் வெளியிட்டிருக்கிறது. 

நரம்பியல் நோய்களாக பக்கவாதம், காக்காய் வலிப்பு, மறதி என ஒரு நீண்ட பட்டியலையும் சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதிலும் இந்த நோய்கள் அதிக வருமானமுள்ள நாடுகளைவிட இந்தியா போன்ற குறைந்த வருமானமுள்ள நாடுகளில்தான் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்திருக்கிறது. 

இதைக் குறைக்க அரசுகள் இந்த நோய்கள் தொடர்பாக ஆய்வுகள், அதனை ஒட்டி கொள்கைகள், நடைமுறைகளை விரைவாக பின்பற்றும்படி அறிக்கையில் ஆலோசனை சொல்லியிருந்தது. இப்படி செய்யாவிட்டால் பாதிப்பும் உயிரிழப்பும் மேலும் அதிகரிக்கலாம் என சிவப்பு புள்ளியை வைத்திருக்கிறது.

இந்நிலையில் நியூராலஜி எனப்படும் நரம்பியல் தொடர்பான இந்த அறிக்கை குறித்து சென்னை வேளச்சேரியில் இருக்கும் பிரசாந்த் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவரான சுருதியிடம் பேசினோம். ‘‘நரம்பு, நரம்பியல் என்றாலே அது மூளை தொடர்பானது என்ற அடிப்படையை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். 

மூளையின் கீழ்ப் பகுதியில் கொத்தாக ஒரு உருண்டை வடிவத்தில் நரம்பு முடிச்சுகள் இருக்கும். இந்த நரம்பு முடிச்சின் ஒவ்வொரு நரம்பும் உடலின் பல பாகங்களுக்கு போகும். இவைதான் நாம் பேசவும், உறுப்புகளை அசைக்கவும், நாம் செயல்படுவதற்கான கட்டளைகளையும் கொடுக்கும். 

நம் உடலின் கண்ட்ரோல் ரூம்தான் மூளையும், அதிலிருந்து உருவாகும் நரம்புகளும். இந்த நரம்புகளில் ஏற்படும் பிரச்னைகளைத்தான் நரம்பு நோய்கள் அல்லது நரம்பியல் பிரச்னைகள் என்கிறோம்...’’ என்ற சுருதி, நரம்புகளுக்கும், நாளங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினார்.‘‘நாளங்கள் என்பது இதயத்துக்கும், இதயத்திலிருந்தும் இரத்தத்தை கொண்டுபோகும் குழாய்களைச் சொல்லலாம். 

இரத்தக் குழாய்கள் மூளைக்கும் செல்லும். இதயத்துக்குப் போகும். இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயப் பிரச்சனை ஏற்படுவது மாதிரி, மூளைக்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் மூளையில் இருந்து செல்லும் நரம்புகளுக்கு பிரச்சனை ஏற்படும். 

இதைத்தான் நரம்பியல் நோய்கள் என்கிறோம். முக்கியமாக ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் ஏற்படும். ஹார்ட் அட்டாக்கும், பக்கவாதமும் ஒரு பிரச்னையின் இரண்டு பரிமாணங்கள்.
உலக சுகாதார அமைப்பு பக்கவாதம், ஞாபகமறதி, காக்காய் வலிப்பு, ஆட்டிசம், சர்க்கரை வியாதி தொடர்பான நரம்பியல் பிரச்னை, ஒற்றைத் தலைவலி மற்றும் கேன்சர் வரை இந்த நரம்பியல் பிரச்னைகளால் உலகத்தில் பாதியளவு மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறது. இதைப் புரிந்து கொள்வது நல்லது. 

‘ஸ்ட்ரோக்’ எனப்படும் பக்கவாதம், இன்றைய தேதிக்கு ஒரு பொதுவான வியாதியாக உலகில் காணப்படுகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இது அதிகமாக வருகிறது. என்றாலும் உடல்பருமன், கொலஸ்ட்ரால் மற்றும் பழக்கவழக்கங்களே வயதாகும்போது இந்த வியாதி நம்மைத் தொற்றிக்கொள்ள களம் அமைத்துத் தருகின்றன.

எபிலெப்சி என்கிற காக்காய் வலிப்பு சிறுவயதிலேயேகூட ஆரம்பித்துவிடலாம். ஒருவித நரம்பு பிரச்னைதான் இது. டிமென்சியா எனப்படும் ஞாபகமறதியைப் பொறுத்தளவில் வயதானவர்களுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது. 

ஞாபகமறதியிலும் பலவகைகள் உண்டு. அன்றாட செயல்களை மறப்பது ஆரம்பகட்டம் என்றால், தீவிரமான மறதிக்கு அல்சைமர் என்று பெயர். 

ஆரம்ப கட்டத்தில் இருக்கும் மறதி வியாதிக்கு சில பயிற்சிகள் உண்டு...’’ என்று சொல்லும் சுருதி, இந்தப் பட்டியலில் இருக்கும் மற்ற நோய்கள் பற்றியும் விவரித்தார்.
‘‘ஒற்றைத் தலைவலி அதிகமாக பெண்களுக்குத்தான் ஏற்படுகிறது. பலரும் ஒற்றைத் தலைவலியை ஒரு நாளாவது அனுபவித்திருக்கலாம். ஆனால், தொடர்ச்சியான ஒற்றைத் தலைவலி என்றால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும். 

உதாரணமாக தொடர்ச்சியான ஒற்றைத் தலைவலி வாந்தி, கண்பார்வைக் குறைபாடுகளை எல்லாம் ஏற்படுத்தும். அல்சைமர் எனும் தீவிர மறதி உள்ளவர்கள் பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பார்கள். 

ஆனால், அன்றாட நிகழ்வுகள் அவர்களுக்குப் பிரச்னையாக இருக்கும். நீரழிவு எனப்படும் சர்க்கரை தொடர்பான பிரச்னைகள் ஏன் கால் நரம்புகளிலிருந்து ஆரம்பிக்கிறது என்றால் காலில்தான் சிறிய நரம்புகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, நீரழிவால் முதலில் பாதிக்கப்படுவது காலின் சிறிய நரம்புகள்தான். 

கால்களில் உணர்வு இல்லாமல் போவதுதான் இந்த நோயின் முதல் அறிகுறி. சர்க்கரை நோயால் மற்ற நரம்புகளும் பாதிக்கப்படும்போது இந்த உணர்வு நரம்புகள்தான் முதலில் செயலிழக்கும். 

முதலில் உணர்வுகள் தடைபட்டால் பிறகு உறுப்புகள் அசைவதும் கடினமாகக்கூடும். ஆகவே, சர்க்கரையைக் குறைப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு சரியான தீர்வு. 

அடுத்து மூளைக் கட்டி. இது கேன்சரில் ஒரு வகை. இந்தப் பாதிப்பும் இப்போது இளம் வயதிலேயே வரக்கூடியதாக இருக்கிறது...’’ என்று சொல்லும் டாக்டர் சுருதி, நரம்பியல் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுதான் இந்தப் பிரச்னைகளுக்கு குறைந்தபட்ச தீர்வாக இருக்கும் என அழுத்தமாகச் சொல்கிறார்.

டி.ரஞ்சித்