மூலிகை முட்டை..!



நாட்டுக்கோழி முட்டை, பிராய்லர் கோழி முட்டை பற்றிதான் பொதுவாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போபாலைச் சேர்ந்த ஆதித்யா குப்தா இப்போது புதியதாக மூலிகை முட்டையை அறிமுகப்படுத்தி இருக்கிறார். 
போபால் விமான நிலையத்திலிருந்து 20 நிமிடங்கள் தொலைவில் உள்ள ‘ஐன்ட் கெடி’ கிராமத்தில் ஆதித்யா குப்தாவின் கோழிப் பண்ணையில் இந்த மூலிகை முட்டைகள் உற்பத்தியாகின்றன.

இங்கு கோழிகளுக்கு உடைக்கப்பட்ட சோளம், கோதுமை, இதர தானியங்களுடன் துளசி, மஞ்சள், அஸ்வகந்தா, ஆர்கனோ, வோக்கோசு, ஸ்பைருலினா, புதினா ஆகியவை கலந்து தரப்படுகின்றன. இதனால் இந்தக் கோழி இடும் முட்டைகள் மூலிகை முட்டைகளாகின்றன.   

‘‘உண்மையைச் சொன்னால் 250க்கும் மேற்பட்ட வெவ்வேறு மூலிகைகளைப் பயன்படுத்துகிறோம். அவற்றை பட்டியலிட முடியாது. கேட்கவும் செய்யாதீர்கள். அது ஒரு வர்த்தக ரகசியம்! தவிர, நான் தயாரித்திருக்கும் கோழித் தீவனத்திற்கு காப்பு ரிமையும் பெற்றுள்ளேன்...’’ எனக் கண்சிமிட்டுகிறார் ஆதித்யா குப்தா.

‘‘மூலிகை முட்டைகளின் சுவை வித்தியாசமானது. மூலிகை முட்டையில் அதிக ஊட்டச்சத்தும் உள்ளது. மூலிகை முட்டையில் உள்ள கூடுதல்  நல்ல கொழுப்பு, அதிக புரதம், கூடுதல் வைட்டமின் டி, ஒமேகா-3 ஆகியவை மூலிகை முட்டைகளை மதிப்பு கூட்டப்பட்ட முட்டைகளாக்குகின்றன.

எனது கோழிப்பண்ணையில் உற்பத்தியாகும் மூலிகை முட்டைகளை ‘எக்ஸ் & எக்ஸ்’ (Eggs & Eggs) என்ற பிராண்ட் பெயரில் போபாலில் மட்டும் விற்று வருகிறேன். இன்ஸ்டாகிராமிலும் மூலிகை முட்டைகள் குறித்து செய்திகளை வெளியிடுகிறேன். இதன் ஊட்டச்சத்துக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். போபாலில் வசிக்கும் டாக்டர் சைலேந்திர சிங் ராணா ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. இவர் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இவர் உயிர் பிழைத்தாலும், அவரின் எடை 25 கிலோ குறைந்தது.

மிகவும் பலவீனமாக இருந்தார். முன்பைப்போல உடலைத் தேற்றுவதற்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும் என மருத்துவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். ஆனால், எங்கள் மூலிகை முட்டைகளைச் சாப்பிட்டு ஆறு மாதங்களில் இழந்த உடல் எடையை மீட்டுக்கொண்டார். இதற்கு முன்பு அவர் முட்டையின் வாசனை பிடிக்காமல் அறவே ஒதுங்கியிருந்தார். பின்னர் மூலிகை முட்டைகளை அவர் மருந்தாக சாப்பிட ஆரம்பித்தார். 

இதன் வித்தியாசமான மணம் ராணாவுக்குப் பிடித்துப் போனது. மூலிகை முட்டையை மூன்று வேளையும் உணவுடன் சேர்த்துக் கொண்டார். இப்போது மூலிகை முட்டைகள் ராணாவை சகஜ வாழ்க்கைக்குக் கொண்டு வந்துள்ளன...’’ என உற்சாகமாகச் சொல்கிற ஆதித்யா குப்தா, அடிப்படையில் ஒரு கணினி மென்பொருள் பொறியாளர் ஆவார். 

‘‘கோழி வளர்ப்பு எங்கள் குடும்பத் தொழில். தொடக்கத்தில் எங்கள் பண்ணையில் சுமார் 60,000 கோழிகள் இருந்தன. மற்ற  கோழிப்    பண்ணையாளர்களைப் போலவே, நாங்களும் இந்தக் கோழி வளர்ப்பில் இருக்கும் கடுமையான யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டி வந்தது.  

திடீரென்று எதிர்பார்க்காத தருணங்களில் அடுத்தடுத்து கோழிகள் நூற்றுக்கணக்கில் இறந்துபோகும். அதனால் பொதுவாக கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள் அதிக நஷ்டத்தை அனுபவிப்பார்கள். 

இந்நிலையில் கோழிகளை நோய்கள் தாக்காமல் இருக்க ஆயுர்வேத மூலிகைகளின் குணப்படுத்தும் சக்தி பற்றி படிக்கத் தொடங்கினேன். இதனுடன், இறந்த ஒவ்வொரு கோழியையும் நாங்கள் பிரேத பரிசோதனை செய்தோம். 

பின்னர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெவ்வேறு மூலிகைகளைத் தீவனத்துடன் சேர்த்தோம். போகப் போக ஒவ்வொரு மூலிகையின் சேர்க்கை விகிதத்தையும் நிர்ணயித்தோம். இதனால் கோழிகளிடையே நோய்த் தாக்கமும் இறப்பும் குறைந்தது. 

மூன்று ஆண்டுகாலத்தில், அநேக சோதனைகளுக்குப் பிறகு நான் உருவாக்கிய கோழித் தீவனத்திற்கு காப்புரிமைக்காக விண்ணப்பித்தேன். சென்ற ஆண்டு ஜூன் மாதம், இந்திய காப்புரிமை அலுவலகம் எனது மூலிகை தீவனத்திற்குக் காப்புரிமையை  வழங்கியது. எனது கோழித் தீவனம் இயற்கையாகவே கெட்ட கொழுப்பு குறைவாகவும், ஒமேகா-3, ஒமேகா-7 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இதுவே மூலிகை முட்டைகளின் மதிப்பைக்  கூட்டியுள்ளது.  

கோழித் தீவனத்தில் ஆளிவிதை சேர்ப்பது முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ‘ஒமேகா-3’ கொழுப்பு அமில உள்ளடக்கத்தை அதிகரிக்கிறது. இந்த ‘ஒமேகா-3’ நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் ஒன்று. அதேபோல் பூண்டு, முட்டையின் மஞ்சள் கருவின் தரத்தை உயர்த்துவதுடன், கோழிகளின் கொழுப்பு அமிலங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது.  

சிலருக்கு வழக்கமான முட்டைகளை சாப்பிட்டால் குமட்டல் ஏற்படும் இல்லையா..? ஆனால், நாங்கள் குமட்டல், வாந்தி போன்ற எதிர்வினைகளைத் தூண்டாத ஹைபோஅலர்ஜெனிக் (hypoallergenic) முட்டைகளை உற்பத்தி செய்கிறோம். இது எனது கண்டுபிடிப்பின் மூலம் உருவானது. 

அடுத்து முட்டையின் வாசனையை விரும்பாத சைவ உணவு உண்பவர்கள்கூட, ‘ஹைபோஅலர்ஜெனிக்’ முட்டைகளை அச்சம் இல்லாமல் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

இந்த மூலிகை முட்டைகளை பச்சையாகவும் உட்கொள்ளலாம். ஏனெனில், இதில் பாக்டீரியா தொற்றுகள் குறைவு. இருந்தாலும் நாங்கள் அதனை அவித்தோ அல்லது ஆம்லெட்டாகவோ சாப்பிடவே வலியுறுத்துகிறோம். அதுவே சுவையையும் அதிகரிக்கும். 

இப்போது கடுமையான சைவ உணவு உண்பவர்களும் எனது மூலிகை முட்டைகளின் வாடிக்கையாளர்களாக மாறியுள்ளனர். வீட்டில் வெங்காயம் மற்றும் பூண்டை தவிர்ப்பவர்களும் புரதம் உட்கொள்ளல் குறைவாக இருந்த காரணத்தால் இப்போது மூலிகை முட்டைகளை உண்ணத் தொடங்கியுள்ளனர்.அதுமட்டுமல்ல, ஆரம்பத்தில் எனது மகன்கூட சாதாரண முட்டைகளின் வாசனை காரணமாக வேகவைத்த முட்டைகளைச் சாப்பிட மறுத்தார். இப்போது மூலிகை முட்டை என் மகனின் பிரதான காலை உணவாகிவிட்டது.  

இந்தியா எப்போதும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள நாடாக இருந்து வருகிறது. புரதம் உட்கொள்ளல் பாரம்பரியமாகவே குறைவாக இருக்கிறது. இந்தக் குறையை எனது மூலிகை முட்டையை உண்பதன் மூலம் சரிசெய்ய முடியும். தற்போது ஒரு மூலிகை முட்டையை 9 ரூபாய்க்கு விற்கிறோம்....’’ என்கிறார் ஆதித்யா குப்தா.

கண்ணம்மா பாரதி