லாக்டவுனில் உருவாகிய சதுரங்க இளவரசி!
சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன. இதில் பங்கேற்ற முன்னாள் பெண்கள் உலக சாம்பியனும், கிராண்ட் மாஸ்டருமான மரியா முசசொக்கைத் தோற்கடித்து, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் போதனா சிவானந்தன். இந்த சதுரங்க இளவரசியின் வயது 10தான். உலக சாம்பியனை வென்ற இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசமாக்கியிருக்கிறார் போதனா.
 யார் இந்த போதனா சிவானந்தன்?
திருச்சியிலிருந்து இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவர், போதனா சிவானந்தன். இன்று போதனாவின் குடும்பம் ஹாரோ எனும் நகர்ப்பகுதியில் வாழ்ந்து வருகிறது. கொரோனாவின் லாக்டவுன் காலங்களில் வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டிய நிலை. வெளியே சென்று நண்பர்களுடன் விளையாட முடியாத சூழல். பொழுதைப் போக்குவதற்காக சதுரங்கம் விளையாட ஆரம்பித்தார் போதனா.
 ஆம்; 2020ல்தான் சதுரங்கமே ஆட ஆரம்பித்திருக்கிறார். அப்போது அவருக்கு வயது 5. ‘‘எந்நேரமும் செஸ் விளையாடுவதை விரும்புகிறேன். இது ஒரு ஒழுங்குமுறையைக் கண்டுணர்வதற்கும், ஒரே இடத்தில் கவனத்தைக் குவிப்பதற்கும், எப்படி வியூகம் அமைக்கலாம் என்பதைக் கற்றுக்கொள்ளவும், எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கவும் உதவுகிறது. செஸ் போர்டில் ஒவ்வொரு காயையும் நகர்த்துவதைப் பார்க்கும் போது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக குதிரையின் நகர்வு மிகவும் பிடிக்கும்...’’ என்று 2022ல் சொல்லியிருக்கிறார் போதனா.
மிகக் குறுகிய காலத்திலேயே சதுரங்க விளையாட்டைக் கற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல், அதில் ஜாம்பவானாகவும் மாறிவிட்டார்.
கடந்த 2022ல் எட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான ஐரோப்பியன் கோப்பை சதுரங்கப் போட்டி நடந்தது. இதில் கலந்துகொண்ட போதனா, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ‘தனிச்சிறப்புமிக்கவர்’ என்று போதனாவைப் புகழ்ந்தார், செஸ் மாஸ்டரான லியோனார்ட் பார்டென். 2022ம் வருடம் மே மாதத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பிய பள்ளிக் குழந்தைகளுக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன. இதில் கலந்துகொண்ட 24 போட்டிகளிலும் வெற்றி பெற்று, மூன்று தங்கப்பதக்கங்களையும் தன்வசமாக்கினார்.
ஏழு வயதிலேயே பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு, பலரது கவனத்தை ஈர்த்தார். இப்போட்டியில் கலந்துகொண்ட இளம் வீராங்கனை போதனாதான். இந்த சாம்பியன்ஷிப்பில் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றார்.
அதில் 12 வயதுக்குட்பபட்ட சாம்பியனை போதனா தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், கிராண்ட்மாஸ்டர் கெய்த் ஆர்கெல்லிடம் தோல்வியுற்றார். ‘‘அந்தச் சிறுமியின் அனுபவமின்மையால் மட்டுமே நான் வெற்றி பெற்றேன்...’’ என்று சொல்லியதோடு, போதனாவை வெகுவாகப் பாராட்டினார் கெய்த். கடந்த 2023ம் வருடம் இங்கிலாந்தில் கண்காட்சி சதுரங்கப் போட்டி நடந்தது. இதில் பிரிட்டிஷ் செஸ் சாம்பியனான பீட்டர் லீயைத் தோற்கடித்தார் போதனா. எட்டு வயதில் 12 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் பங்கேற்று, சாம்பியன் பட்டத்தைத் தட்டினார். இங்கிலாந்தின் முன்னணி வீராங்கனைகளையெல்லாம் தோற்கடித்தார். ‘‘போதனாவின் முதிர்ச்சியான அணுகுமுறையும், மேன்மையான திறனும் பிரமிக்க வைக்கிறது.
இங்கிலாந்தின் மிகச்சிறந்த செஸ் பிளேயர் போதனாதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...’’ என்று டுவிட்டரில் போதனாவைப் பாராட்டினார் சர்வதேச சதுரங்க மாஸ்டரான லாரன்ஸ் டிரென்ட்.
எட்டு வயதிலேயே வுமன் கேண்டிடேட் மாஸ்டராகிவிட்டார், போதனா. மட்டுமல்ல, கடந்த 2024ம் வருடம், மார்ச் மாதத்தில் 10 வயதுக்குட்பட்ட உலகின் தலைசிறந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பட்டியல் வெளியானது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டார் போதனா.
தவிர, ஹங்கேரியில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட்டில் பங்குபெற்ற இங்கிலாந்தின் பெண்கள் அணியில் இடம்பிடித்தார். அப்போது போதனாவுக்கு வயது 9.
இங்கிலாந்தின் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் கால்பந்து அணி என எந்தவொரு இங்கிலாந்து விளையாட்டு அணியிலும் 9 வயதுடையவர் இடம்பிடித்ததே இல்லை. இங்கிலாந்து அணியில் இடம்பிடித்த மிக இளையவர் என்ற சாதனையையும் தன்வசப்படுத்தினார் போதனா.
ஒலிம்பியாட்டில் பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றிபெற்றார். ஆனால், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தார். 2024ம் வருடம் நவம்பரில் நடந்த 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான யுகே செஸ் சேலஞ்ச் போட்டியில் வென்றார். இதே வருடத்தில் ‘வுமன் எஃப்ஐடிஇ மாஸ்டர்’ பட்டத்தையும் பெற்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிராண்ட மாஸ்டர் பீட்டர் வெல்ஸைத் தோற்கடித்தார் போதனா. இதன்மூலம் கிராண்ட் மாஸ்டரைத் தோற்கடித்த இளம் வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசமாக்கினார். இதுபோக ‘வுமன் இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டத்தையும் பெற்றிருக்கிறார் போதனா. இவரது சதுரங்க சாதனைகள் தொடர்கின்றன.
த.சக்திவேல்
|