Apple Free!
சின்னவயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள். உள்ளே இருக்கும்போது எவ்வளவு சர்க்கரை வேண்டுமானாலும் அள்ளிச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றார்கள். சாப்பிட்டு அலுத்துப் போய் ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டோம். அதுதான் நினைவுக்கு வந்தது. அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் ஆப்பிள் தோப்பு / தோட்டம் / பண்ணைகளில் - சரியான வார்த்தை ஆர்க்கிட் - ‘ஆப்பிள் பிக்கிங்’ அல்லது ‘ஆப்பிள் ஹார்வெஸ்டிங்’ என்று அறுவடைக்காலங்களில் ஒரு கோலாகலம் நடக்கிறது. கண்கொள்ளாக் காட்சி. மனம் கொள்ளா அனுபவம். நாமே போய் ஆப்பிள்களை இஷ்டப்படி பறித்துக்கொண்டு நம் வீட்டுக்கு எடுத்து வரலாம். கேட்கும்போதே பரபரப்பாக இருக்கிறதல்லவா?
ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவிட்டு உள்ளே போகலாம். மூன்று பேர் அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவாகச் செல்ல அனுமதி உண்டு. எத்தனை பேர் என்பதைப் பொருத்துக் கட்டணம் மாறுபடும். அவர்கள் ஒரு பை கொடுத்துவிடுவார்கள். நிஜமாய்ப் பெரிய பைதான். அது முழுக்க நாம் ஆப்பிள்களைச் சுமந்து திரும்பி வரலாம். யாரும் செக் செய்வதில்லை. நம்மை நம்புகிறார்கள்.
நாம் பறிக்கும் / சாப்பிடும் ஆப்பிள்களின் எண்ணிக்கைக்கும் அந்த வித்தியாச அனுபவத்துக்கும் டிக்கெட் தொகை மிகக் குறைவு.உள்ளே இருக்கும் வரை எத்த்த்த்த்தனை ஆப்பிள்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். இனிமையாக உள்ளதா என்று கடித்துப் பார்த்துவிட்டுக் குப்பைத் தொட்டிக்கும் உண்ணக் கொடுத்துவிட்டு அடுத்த ரகத்துக்குத் தாவலாம்.
அல்லது ‘சபரி’ மாதிரி சுவைத்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து பத்திரப் படுத்திக் கொள்ளலாம். என்ன ஒன்று... ‘சபரி’ சேமித்தது அந்த உன்னத தெய்வத்துக்காக. நாம், நமக்கு வேண்டியவர்களுக்காக.
வரிசை வரிசையாய் ஆப்பிள் மரங்கள். கொத்துக் கொத்தாய் ஆப்பிள் கனிகள். பழுத்துக் கீழே விழுந்த ஆப்பிள்கள் பார்க்க செம்ம அழகு. ‘மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்’ என்ற திரிகூடரின் ‘குறவஞ்சி’ நினைவுக்கு வந்தது. இங்கே மந்தி (குரங்கு) இல்லை. மனிதர்கள்தான் இருந்தோம்.
அமெரிக்க ஆப்பிள்களில் எத்தனை வகைகள் உண்டோ அத்தனையும் அங்கே உள்ளன. மரங்கள் அதிக உயரமில்லை. அதிகபட்சம் பத்தடி உயரம் இருக்கலாம். பழங்கள் எட்டாத உயரத்தில் இருந்தால் அவற்றைப் பறிப்பதற்காக அலுமினியம் ஸ்டூல் ஏணிகளும் ஆங்காங்கே கிடக்கின்றன. நாம் நடந்தே சுற்றிப் பார்க்கலாம் என்றாலும் உள்ளே கொண்டுவிட இலவச டிரக்குகள் உள்ளன.
சில கம்பெனிகள் தங்கள் ஸ்டாஃப்களுக்கு இந்த டிக்கெட்களை அன்பளிப்பாகத் தருகிறார்கள். உள்ளே போனவுடன் டோனட்களும் ஆப்பிள் ரசமும் இலவசமாய் அளிக்கிறார்கள்.
சின்னதாய் மெரூன் கலரில், பெரிசாய் ரூஜ் போட்ட மாதிரி, நடுவாந்தரமாய்ப் பளபள செர்ரி நிறத்தில், கிரீன் ஆப்பிள் என்று சகட்டு மேனிக்கு ஒவ்வொரு வரிசையிலும் பழுத்திருக்கின்றன.
Honeycrisp - இது மிக விலை உயர்ந்த. அற்புத சுவை கொண்ட ரகம், Red Delicious, Gala, Pink Lady, Rome, SweeTango, Adams Pearmain... என்று ஆரம்பித்து நாற்பது ஐம்பது ரகங்கள். மர வரிசையின் ஆரம்பத்தில் பெயர்ப் பலகை உள்ளது. சர்க்கரை போட்டுப் பழுக்க வைத்தார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நெடுக ஒரு பைப். சொட்டு நீர்ப்பாசனமாய் ஒவ்வொரு மரத்துக்கும் தண்ணீர் போகிறது. சில வரிசைகளிடையே தடை கட்டி வைத்திருக்கிறார்கள். நாளைக்கு வருபவர்களுக்கு விட்டு வைக்கணும்ல! சில வரிசைகளில் ‘இன்னும் பழுக்கவில்லை, பறிக்காதீர்கள்’ என்று போட்டிருக்கிறார்கள். இதற்கு மக்கள் கீழ்ப்படிகிறார்கள்! ஹாலோவீன் நெருங்குவதால் பறங்கிக்காய்களையும் வரிசை கட்டி வைத்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கானவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஆப்பிள் பறித்து மகிழ்கிறார்கள். சுவையான பொழுது போக்கு. நல்ல வாக்கிங். இருந்த இடத்தில் ஆப்பிள் விற்க தோப்பின் உரிமையாளர்களாலும் முடிகிறது. இதுபோல் தக்காளி, பறங்கிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, பிளாக்பெர்ரி... என்று மற்ற அறுவடைகளும் அந்தந்தப் பண்ணைகளில் உண்டு. மிகவும் சுத்தமான சூழல். பறவைகளின் அண்மை என சூழ்நிலை சொர்க்கம் சார்... ஏறக்குறைய சொர்க்கம்!
அமெரிக்காவிலிருந்து வேதா கோபாலன்
|