ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...



‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘நீர்ப்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால்.தற்போது அவர் நடித்துள்ள ‘ஆர்யன்’, அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கத்தில் வெளியாக உள்ளது.ரிலீஸ் பரபரப்புக்கு இடையே இயக்குநர் பிரவீனிடம் பேசினோம்.

‘ஆர்யன்’ யார்?

அதுதான் படம். இது த்ரில்லர் கதை என்பதால் இப்போது மூடி மறைத்தால்தான் படம் பார்க்கும்போது சுவாரஸ்யமாக இருக்கும். ஆர்யன் யார் என்ற சந்தேகமே வேண்டாம். அது விஷ்ணு விஷால்தான். ஏற்கனவே அவர் ‘ராட்சசன்’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்திலும் அந்த ஓப்பீடு வரும். 

ஏனெனில் ‘ராட்சசன்’ த்ரில்லர் ஜானர்ல வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு. ஆனால், இதில் அவருக்கு வித்தியாசமான ஐபிஎஸ் அதிகாரி வேடம். சட்டத்துக்கு தலைவணங்கும் நேர்மையான போலீஸ் அதிகாரி. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் மற்ற படங்களிலிருந்து தனித்துவமாக தெரியுமளவுக்கு அவருடைய கேரக்டர் ஃபிரெஷ்ஷாக இருக்கும். 

போலீஸ் கதைகளில் புதுசா சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அதை மறுக்கமாட்டேன். போலீஸ் கதைகள் நிறைய வெளிவந்திருந்தாலும் மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் காவல் துறையைத் தவிர்க்க முடியாது. உண்மை, நேர்மை, நீதி, நியாயம் என போலீஸிடம் மக்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்கள் உள்ளன.

அந்தவகையில் கதாநாயகன் போலீஸாக வரும்போது அது ரசிகர்களிடையே வெகு சுலபமாகச் சென்றடையும். இந்தப் படத்தில் யதார்த்தத்துக்கு பக்கத்திலிருந்துதான் கதை சொல்லியுள்ளோம். ஐந்தாறு நாட்களில் நடக்கும் கதை இது. 

கமர்ஷியல் படமாக இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரும் உண்மைக்கு அருகில் இருக்கும். ஒவ்வொருத்தரிடமும் தனித்துவமான திறமை இருக்கும். இதில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்துள்ளோம். சமூகத்தில் நடந்த சில நிகழ்வுகளை இன்ஸ்பிரேஷனாக வைத்து சில விஷயங்கள் இருக்கும். அது ரசிகர்களுக்கு சுவாரஸ்ய அனுபவத்தைக் கொடுக்கும்.

‘எப்ஐஆர்’ படத்தில் வேலை செய்யும்போது விஷ்ணு விஷாலுடன் நட்பு ஏற்பட்டுச்சு. அப்போது இரண்டு கதைகள் அவருக்காக எழுதினேன். அவருக்கு இந்த கதை நூறு சதவீதம் பொருத்தமாக இருக்கும்னு இருவருமே ஃபீல் பண்ணினோம். அவரும் தன்னுடைய அடுத்த படத்தை வித்தியாசமான படமாக தரணும் என்று நினைத்தார்.விஷ்ணுவிடம் நான் பார்த்து வியந்த விஷயம் அவருடைய ஸ்கிரிப்ட் சென்ஸ். உணர்வுபூர்வமாக கதைகளை தேர்வு செய்யக்கூடியவர். வேலை விஷயத்துல கடினமான உழைப்பாளி. 

இளம் போலீஸ் அதிகாரியாக வருவதால் அதற்கு நிறைய வேலை செய்தார். இந்தப் படம் துவங்கும்போது ‘லால் சலாம்’ செய்துகொண்டிருந்தார். அந்தப் படத்தில் அவருடைய கெட்டப், லுக் வேறு. பதினைந்து நாட்கள் இடைவெளியில் ‘ஆர்யன்’ கேரக்டருக்காக மாறணும். அந்த அர்ப்பணிப்பு வியப்பாக இருந்துச்சு.  

உங்களுக்கு இது முதல் படம். விஷ்ணு விஷால் சீனியர் ஆக்டர். அவருடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி?

இயக்குநராக எனக்கு மறக்க முடியாத அனுபவம். செட்டுக்கு வந்தபிறகு அறிமுக இயக்குநர் என்று பார்க்கமாட்டார். தன்னை முழுவதுமாக இயக்குநரிடம் ஒப்படைத்துவிடுவார். ஹீரோ என்ற மனப்பான்மை இல்லாதவர். அவர்தான் தயாரிப்பாளர். ஆனால், நடிகராகத்தான் பார்க்கமுடியும். நிறைய கேள்வி கேட்பார். அந்தக் கேள்விகள் கேரக்டரை சிறப்பாக பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கும். 

எப்போதும் அவரிடமிருந்து முழுமையான ஆதரவை  எதிர்பார்க்கலாம். அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் சக நடிகர், நடிகைகள் என அனைவருக்கும் முக்கியத்துவம் தரணும்னு நினைக்கக்கூடியவர். தேர்ந்த நடிகரான அவருடன் வேலை செய்யும் வாய்ப்பு முதல் படத்தில் கிடைத்தது மகிழ்ச்சி.

வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும்னு சமூக வலைத்தளங்களில் கமெண்ட்ஸ் பார்க்க முடிகிறது. அந்த வில்லன் யார்?

செல்வராகவன் சார் முக்கியமான கதாபாத்திரத்துல வர்றார். அவர்தான் வில்லன் என்று நேரிடையாக சொல்லமாட்டேன். மற்றபடி ரசிகர்கள் யூகத்தின்படி வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும்.  

நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத். என்னுடைய முதல் சாய்ஸாக அவர்தான் இருந்தார். கதை சொல்லும்போது அவருக்குப் பிடிச்சதால உடனே ஓகே சொன்னார். ஜர்னலிஸ்ட் கதாபாத்திரத்துல வர்றார். பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டு வாங்கி, கேரக்டருக்காக ஆயத்தமானார். படப்பிடிப்பில் அவருடைய அனுபவம் பேசியதை பார்க்க முடிந்தது.   

பாடல்கள் எப்படி வந்துள்ளது?

நடிகர், நடிகைகளுக்கு அடுத்து இந்தப் படத்தில் டெக்னீஷியன்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஜிப்ரான் சார் மியூசிக் செய்துள்ளார். டீசர், டிரைலர் பார்த்திருப்பீங்க. அதுல அவருடைய உழைப்பு தெரிஞ்சிருக்கும். வித்தியாசமான மியூசிக் முயற்சி செய்துள்ளார். அவர் இசையமைக்கும் பாடல்கள் எப்போதும் படத்துக்கு பலம் சேர்க்கும். 

அவர் பாடல்களைக் கேட்கும்போது விஷுவல்ஸ் கண் முன் வந்துபோகும். வழக்கமாக ரஹ்மான் சார் பாடல்களுக்கு அப்படியொரு அடையாளம் உண்டு. அப்படி, கதைக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்தார். மூன்று பாடல்களும் கவனிக்கக் கூடிய இடத்தில் இருக்கும். பின்னணி இசை கதையை நகர்த்துவதில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும்.

ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கோப்ரா’, ‘டிமாண்டி காலனி’ என தமிழ் சினிமாவின் முக்கியமான படங்கள் செய்தவர். அவருடைய ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான விஷுவல்ஸை பார்க்கலாம். இது ரியல் டைமில் நடக்கும் கதை. அதற்கேற்ப சுவாரஸ்யம் குறையாமல் கதைக்களத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

சான் லோகேஷ் எடிட்டிங் பேசப்படும். நானும் மனு ஆனந்தும் இணைந்து டயலாக் எழுதியுள்ளோம். தயாரிப்பு விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ். ஆரம்பத்திலிருந்து படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் புரொடக்‌ஷன் ஹவுஸ் கொடுத்தது. அது முதல் பட இயக்குநருக்கு வரம் மாதிரி.

சினிமாவை யாரிடம் கற்றுக் கொண்டீர்கள்?  

சொந்த ஊர் திருவனந்தபுரம். என்ஜினியரிங் முடிச்சதும் சில காலம் தனியார் நிறுவனத்துல வேலை. கெளதம் வாசுதேவ் மேனன் சாரிடம் 2010ம் ஆண்டு சேர்ந்தேன். மணிரத்னம், 
கெளதம் மேனன், வெற்றிமாறன் எல்லோரும் லெஜண்ட்ஸ். அவர்களிடம் கற்க நிறைய உண்டு. 

கெளதம் மேனன் சாரிடம் நடிகர், நடிகைகளிடம் எப்படி வேலை வாங்க வேண்டும், டெக்னீஷியன்களை எப்படி கையாள வேண்டும் என்பதைக் கத்துக்கிட்டேன். எடுத்துக்கொண்ட வேலையை எப்படி அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்பதையும் அவரிடமிருந்துதான் கத்துக்கிட்டேன்.

எஸ்.ராஜா