சித்திரம் பேசுதடி... சிந்தை தெளியுதடி...



தமிழக அரசின் உதவியுடன் தேனி மனநல மருத்துவமனை சாதனை

அரசு மருத்துவமனை என்றாலே பலருக்கு அலர்ஜி. மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், சிகிச்சைகள், வசதிவாய்ப்புகள் இருந்தாலும் வளாகத்தின் நுழைவாயிலே நம்மைத் துரத்திவிடுவதற்கான சூழல்கள் அதிகம். அதிலும் மனநோய் மருத்துவமனைகள் குறித்து சொல்லவே வேண்டாம். 
ஆனால், இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என சொல்லும் விதத்தில் தேனி சமத்துவபுரத்தில் இருக்கும் அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மைய வளாகத்தின் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்கள் கண்ணைப் பறிக்கும் ஓவியங்களால் மிளிர்கின்றன. 
தமிழ்நாடு அரசும், தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும், அதில் வேலை செய்யும் மனநல மருத்துவர்களும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுமாக சேர்ந்து செய்த இந்த ஓவிய முயற்சி மனநோயாளிகள் பற்றிய சித்திரத்தையே மாற்றியிருக்கிறது. 
2006ம் ஆண்டு முதல் மனநல மருத்துவத் துறையானது தேனி க.விலக்கு பகுதியில் இருக்கும் தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ஒரு பிரிவாகவே செயல்பட்டு வந்தது. இருந்தாலும் ஒரு தனித் துறையாக மனநல மருத்துவமனை வரவேண்டும் என்பதற்காக தேனி சமத்துவபுரத்தில் ஒரு மனநல மருத்துவமனை 2017ம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் இந்த தனி மருத்துவமனை முழுவீச்சுடன் செயல்படமுடியாமல் இருந்தது. 

அண்மையில் இந்த சமத்துவபுர மருத்துவமனையை முழுமையான ஒரு மனநல மருத்துவமனையாக மாற்ற அரசு முயன்றது. இதனை ஒட்டியே சமத்துவபுர மருத்துவமனையும் புதுப் பொலிவு அடைந்தது. இதன் ஒரு பகுதியாகவே சுவர் ஓவியங்களும் இந்த வளாகத்தில் வரையப்பட்டன. பலர் பங்கேற்ற இந்த சுவர் ஓவியம் தீட்டும் முயற்சியில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அபாரமானது.
‘‘அரசு புதுப்பித்ததும் தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மனநல மருத்துவர்களும், ஓவிய மாணவர்களும், தன்னார்வலர்களும் இந்தக் கட்டடத்தை அழகுபடுத்திவிட்டார்கள்...’’ என பாராட்டுப் பத்திரம் வாசிக்கும் அந்தக் கல்லூரியின் முதல்வர் முத்துசித்ரா, இந்த ஓவிய முயற்சி மனநோய் பற்றிய மக்களின் மனத் தடையை நீக்கும் எனச் சான்றிதழ் கொடுக்கிறார். 
இந்தக் கூட்டு முயற்சியில் ஒருவரான தேனி அரசு மனநல மருத்துவ நிலையத்தின் மனநல மருத்துவரான ராஜேஷ் கண்ணன், இதை ஆமோதிக்கிறார். 

‘‘சமத்துவபுர மனநல மருத்துவ நிலையத்தை புதுப்பிப்பதற்கான ஆலோசனையின்போது இந்த மையத்தை எப்படி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவது என்பது பற்றி திட்டம் தீட்டப்பட்டது. 

ஒன்று அகில இந்திய வானொலியின் கோடை எஃப்.எம் மூலம் மனநலம் சார்ந்த நிகழ்ச்சிகளை செய்துகொடுப்பதாக இருந்தது. மற்றது மருத்துவ மையத்தின் சுவர்களை வெள்ளையடிப்பதுமாக இருந்தது. 

ஆனால், சுவர்களில் வெள்ளையடித்தால் மட்டும் போதுமா... அதில் ஓவியங்களை வரைந்தால் என்ன என ஆலோசனை சொன்னவர் இந்த மனநல மருத்துவமனையின் கிளினிக்கல் சைக்காலஜிஸ்டாக இருக்கும் சஃபி...’’ என ராஜேஷ் கண்ணன் சொல்ல, சஃபி தொடர்ந்தார். ‘‘உலகளவில் மனநலம் தொடர்பான சிகிச்சைகளுக்கு கலையையும் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். இதை ‘ஆர்ட் தெரபி’ என்றே அழைக்கிறார்கள். ஆடல், பாடல், ஓவியம் எல்லாம் இந்தச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. 

இதை மனதில் வைத்துதான் வெள்ளைச் சுவர்களில் ஓவியம் வரைந்தால் என்ன என யோசித்தேன். பாரதியார் ‘சித்திரம் பேசுதடி... சிந்தை மயங்குதடி’ எனப் பாடியிருப்பார். ஆனால், இங்குள்ள சித்திரங்கள் சிந்தனையை தெளிவுள்ளதாக்கும்.

மனநோயாளிக்கு ஒரு ஆசுவாசத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். அரசோடு இணைந்து சில நண்பர்களும் இந்த ஓவிய முயற்சியில் பங்கெடுத்து அதை சாதித்ததுதான் பெருமையாக இருக்கிறது...’’ என்று சஃபி சொல்ல, இந்த முயற்சிக்கு ‘ஓம் சினிமா’ தயாரிப்பு நிறுவனம் சார்பாக சில பல லட்சங்களை செலவு செய்த ஸ்ரீனிவாசன் தொடர்ந்தார்.

‘‘‘அச்சமுண்டு அச்சமுண்டு’ என்ற உலகளவிலான விருது வாங்கிய படத்தை பல ஆண்டுகளுக்கு முன் இயக்கினேன். இத்தோடு கடல் ஆராய்ச்சி தொடர்பான சில ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறேன். அண்மையில் ‘புதுமுகம்’ படத்தை எடுத்து நடித்த சுரேஷ் கிருஷ்ணாவின் ஒரு புதிய படத்துக்கும் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன். 

அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்கலாம் என யோசித்து அதற்கான கதைத் தேடலில் இருந்தபோது சஃபியை சந்தித்தேன். அந்தப் படத்தின் கதை ஒரு மனநோயாளியைச் சுற்றி நடப்பதால் அது தொடர்பான விவரங்களுக்காக அவரைச் சந்தித்தேன்.

அப்பொழுது பேச்சுவாக்கில் சஃபி இந்த ஓவிய முயற்சியைப் பற்றிக் கூறினார். உற்சாகமாகி ‘நானும் பங்கேற்கிறேன்’ என்று சொன்னதுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து சில பல லட்சங்களை செலவழிக்க முன்வந்தேன்.

நானும் சஃபியும் இந்த ஓவியங்கள் எப்படி இருக்கவேண்டும் என விவாதித்தபோது அந்த ஓவியங்களை அன்றாடம் பார்க்கக்கூடிய நபர்கள் மனநோயாளிகளாக இருப்பதால் அந்த ஓவியங்கள்  அரூபமாக இல்லாமல் கொஞ்சம் யதார்த்தமாக இருக்கவேண்டும் என நினைத்தோம். அத்தோடு நிறங்களும் ஸ்ட்ராங்காக இல்லாமல் லேசாக இருக்கவேண்டும் என முடிவு செய்தோம். அத்துடன் கொஞ்சம் அறிவையும், சிந்தனையையும் தூண்டுவதாகவும் இருக்கவேண்டும் என முடிவு செய்தோம். 

இதைச் செய்துகாட்டியவர் சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், தமிழில் வெளிவரும் பல புத்தகங்களின் அட்டைப் படங்களுக்கு ஓவியம் வரைபவருமான மணிவண்ணன்...’’ என ஸ்ரீனிவாசன் முடிக்க, மணிவண்ணன் தொ டர் ந்தார். ‘‘எனது தனிப்பட்ட ஓவிய பாணி கொஞ்சம் அரூபம் கலந்தது. என்றாலும் மனநல சிகிச்சைக்காக சில பரிசோதனைகளைச் செய்தோம். பொதுவாக எல்லா நாடுகளிலுமே மாடு என்றால் விதவிதமாக வரைவார்கள். யாரும் அதன்கீழ் மாடு என்று எழுதமாட்டார்கள். 

அப்படித்தான் இந்த மருத்துவமனை சுவர் ஓவியங்களிலும் அறிவைக் கிளறும், சிந்தனையைத் தூண்டும் ஓவியங்களை வரைந்தோம். இந்தியாவின் பாரம்பரியமான ஓவிய முறைகளில் இருந்து சிலபல தொழில்நுணுக்கங்களை எடுத்துக்கொண்டு இந்த ஓவியங்களை வரைய திட்டமிட்டோம். உதாரணமாக தமிழகத்தின் பாறை ஓவிய முறைகள், மகாராஷ்டிராவின் வர்லி ஓவிய வகைகள், மல்டி கலர் ஓவியங்கள், பிக்காசோ, வான்காவின் நவீன ஓவிய வகைகள் போன்றவற்றின் முறைகளை எல்லாம் சிந்தித்து படம் வரைந்தோம். 

இதில் உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டு ஓவிய மாணவர்களின் பங்களிப்பு முக்கியமானது...’’ என மணிவண்ணன் முடிக்க, இந்த முயற்சிகளுக்கு அடிமட்ட உதவியாளராக இருந்தவர் காவல்துறையின் ஓய்வுபெற்ற ஓர் அதிகாரி என்ற விவரம் அறிந்ததும் வியந்தோம். உளவுத் துறையில் பணியாற்றிய டி.எஸ்.பி. மகேந்திரனிடம் பேசினோம்.‘‘நான் அடிப்படையில் ஒரு கவிஞன். 

சில புத்தகங்களையும்  வெளியிட்டிருக்கிறேன். எம்ஏ உளவியல் படித்ததால் சஃபியுடன் நீண்டகால நட்பு உண்டு. வாசிப்புப் பழக்கமும் உண்டு. சஃபி இந்த ஓவிய ஐடியாவை சொன்னதும் நம்மால் என்ன செய்யமுடியும் என யோசித்தேன். 

கடைசியில் இந்த டீம் முயற்சி தங்கு தடையில்லால் நிகழ்வதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தேன்...’’ என்கிறார் மகேந்திரன். தமிழக அரசின் உதவியுடன் ஊர் கூடி தேர் இழுத்திருக்கிறார்கள். மனதுக்கு அழகாக, நிறைவாக இருக்கிறது. மகிழ்ச்சி.

டி.ரஞ்சித்