ஓனரே இல்லாத இந்தியாவின் பழமையான டீக்கடை!
கொல்கத்தாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒரு நகரம், செராம்பூர். அதன் மையத்தில் அமைந்திருக்கிறது, ‘நரேஷ் ஷோமே’ஸ் தேநீர்க்கடை. 100 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது இந்த தேநீர்க்கடை. இத்தனைக்கும் 5 அடி அகலம், 7 அடி நீளம் கொண்ட சிறிய கடை இது. கடந்த 100 வருடங்களில் சில முறை மட்டுமே சுவருக்கு பெயின்ட் அடித்திருக்கின்றனர். ஒருமுறை கூரையைப் பழுது பார்த்திருக்கின்றனர். ஆனாலும் இன்னமும் வலுவாக இருக்கிறது இந்தக் கடை.  கடந்த வாரம் தனது வீட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த தேநீர்க்கடைக்கு சைக்கிளில் வந்தார், ஆசிஷ். அவருக்கு 60 வயதிருக்கும். அப்போது தேநீர்க்கடை திறந்திருந்தது. கடைக்குள் யாருமே இல்லை. ஆனால், தேநீர் தயாரிப்பதற்குத் தேவையான பால், சர்க்கரை, தேயிலைத் தூள் எல்லாமே தயாராக இருந்தது. கடைக்குள் நுழைந்து, பொறுப்பை எடுத்துக்கொண்டார் ஆசிஷ்.
 ‘‘நான் இங்கே வேலை செய்யவில்லை...’’ என்று சிரித்துக்கொண்டே, கத்திரிக்கோலால் பால் பாக்கெட்டுகளின் முனையை வெட்டி, ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றினார் ஆசிஷ். பிறகு தேநீரைத் தயாரிக்க ஆரம்பித்தார். அதற்குள் இரண்டு வாடிக்கையாளர்கள் வந்துவிட்டனர். அவர்களுக்குத் தேநீரைக் கொடுத்துவிட்டு, தொடர்ந்து பேசினார்.
‘‘நான் பல வருடங்களாக இந்தக் கடையோட கஸ்டமர். என்ன மாதிரி நிறைய பேர் தன்னார்வத்துடன் கடையைப் பார்த்து வருகிறோம். இது வெறும் டீக்கடை மட்டுமல்ல, நண்பர்கள் சந்தித்து பேசுவதற்கும், பொழுதைப் போக்குவதற்குமான ஓர் இடம். எங்க நட்போட அடையாளம் இந்த டீக்கடை...’’ என்கிறார் ஆசிஷ்.
சுதந்திரப் போராட்ட வீரரான நரேஷ் ஷோமேர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கடை இது. ‘ப்ரூக் பாண்ட்’ எனும் டீ நிறுவனத்தில் பணியாற்றியவர் இவர். வேலையைத் துறந்துவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்; கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்து செயல்பட்டார். தவிர, தேநீர்க்கடையையும் நடத்தினார். தோழர்கள் சந்தித்து, கலந்துரையாடும் ஓர் இடமாக நரேஷின் தேநீர்க்கடை இருந்தது.
ஏதாவது வேலை வந்துவிட்டால் கடையைத் திறந்து வைத்துவிட்டு, கிளம்பிவிடுவார் நரேஷ். கடைக்கு தேநீர் அருந்த வந்திருக்கும் தோழர்களில் யாராவது ஒருவர் நரேஷ் வரும் வரைக்கும் கடையைப் பார்த்துக் கொள்வார். இது நரேஷ் இறந்த பிறகும், மரபு போலவே இன்றும் தொடர்கிறது.
மட்டுமல்ல; இந்தக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெறுமனே தேநீர் மட்டுமே குடிக்க வருவதில்லை. அவர்கள் தேநீர் தயாரித்து, மற்ற வாடிக்கையாளர்களுக்கும் விநியோகம் செய்வார்கள். அப்படியான ஒரு வாடிக்கையாளர்தான், ஆசிஷ். இந்த மாதிரியான ஒரு தேநீர்க் கடையை உலகில் எங்குமே பார்க்க முடியாது. ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர் ஆசிஷ். 10 வயதிலிருந்து இந்தக் கடையில் வாடிக்கையாளராக இருந்து வருகிறார். ஒவ்வொரு நாளும் கடையின் உரிமையாளரான அசோக் சக்ரவர்த்தி என்பவர், காலை 6 மணி அளவில் தேநீர்க் கடையைத் திறப்பார். நரேஷ் இறந்ததிலிருந்து கடையை அசோக்தான் நடத்தி வருகிறார். கடை இருக்கும் கட்டடத்துக்குச் சொந்தக்காரரின் மருமகன் இவர்.
சிறிது நேரம் கடையில் இருந்துவிட்டு, தனது அலுவலக வேலையைப் பார்க்கக் கிளம்பிவிடுவார், அசோக். கடை அப்படியே திறந்திருக்கும். தன்னார்வலர்களில் யாரோ ஒருவர் கடையைப் பார்த்துக் கொள்வார். வேலை முடிந்து வீடு திரும்பும் அசோக், இரவில் கடையை மூடும் வரை பார்த்துக்கொள்வார்.
‘‘இப்போது வரை 10 தன்னார்வலர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒருவர் கடையைப் பார்த்துக்கொள்வார். இன்றைக்கு என்னுடைய நாள். வாரம் ஏழு நாட்களும் கடை திறந்தே இருக்கும். தினமும் குறைந்தபட்சம் 200 கோப்பை டீ விற்பனையாகும்...’’ என்கிற ஆசிஷுக்கு, தான் வேலை பார்த்த நிறுவனத்திலிருந்து ஓய்வூதியம் வருகிறது. தேநீர்க்கடையில் தன்னார்வலர்களாக இருக்கும் யாருமே சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை. இதை ஒரு கடமை போல அவர்கள் செய்கின்றனர்.
ஆசிஷ் காலையில் 9 மணிக்கு கடைக்கு வருவார். மதியம் வரை கடை திறந்திருக்கும். மதிய உணவு நேரம் முடிந்த பிறகு, 3 மணிக்கு மீண்டும் கடையைத் திறந்து, அசோக் வரும் வரையில் கடையிலே இருப்பார்.
ஆசிஷைப் போலவே மற்ற தன்னார்வலர்களும் தங்களுக்கு வசதியான நேர அட்டவணையைப் பின்பற்றுகின்றனர். ஒருவேளை யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது வேறு முக்கியமான வேலை இருந்தாலோ இன்னொருவர் கடையைப் பார்த்துக்கொள்வார். ஒரு நாள் கூட கடை மூடப்பட்டதில்லை. இந்த தன்னார்வலர்கள் ஐம்பது வயதைத்தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்தை ஒரு மரப்பெட்டியில் வைத்துவிடுகிறார்கள். யாராவது பணம் கொடுக்கவில்லை என்றாலும் பிரச்னையில்லைபெரும்பாலும் தேநீர் விற்கும் பணத்தை பால், சர்க்கரை வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். களிமண் கோப்பையில்தான் தேநீரை விநியோகம் செய்கின்றனர்.
தேவைப்பட்டால் காகிதக் கோப்பையையும் பயன்படுத்துகின்றனர். இன்றும் கூட தேநீரின் விலை ஐந்து ரூபாய்தான். எலுமிச்சை தேநீர், மசாலா தேநீர், இஞ்சி தேநீர் என நிறைய வகைகளில் தேநீரை விற்பனை செய்கின்றனர். இதுபோக பிஸ்கட்களும் இருக்கின்றன. இனி வரும் காலங்களில் கடையைப் பார்த்துக்கொள்ள தன்னார்வலர்கள் கிடைப்பார்களா என்பதே ஆசிஷைப் போன்றவர்களின் கவலை.
த.சக்திவேல்
|