காதல் இனிக்கும்!



நாவலாசிரியர், பதிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் அஜயன்பாலா. தமிழ் சினிமாவின் பல வெற்றிப் படங்களின் கதை விவாதத்தில் இவருடைய பங்களிப்பு பெரிது. நீண்ட படைப்புலக அனுபவமுள்ள இவர், தற்போது இளையராஜா இசையில், வெற்றிமாறன் வழங்கும் ‘மைலாஞ்சி’ படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து நம்மிடம் மனம் திறக்கிறார் அஜயன் பாலா.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் - கவித்துவமாக உள்ளதே..? 

இது காதலைப் பற்றி பேசும் படம். காதலைப் பற்றி ஏராளமான படங்கள் வந்துள்ளன. ஆனால், சமீப காலமாக வயலன்ஸ், காமெடி, ஹாரர், த்ரில்லர் போன்ற படங்கள்தான் வந்துள்ளன. இந்த வெற்றிடத்தை ‘மைலாஞ்சி’ நிரப்பும்.இது காதல் கதை என்றாலும், சுற்றுச்சூழல், சமகால இளைஞர்களின் மனப்போக்கு... என அனைத்தையும் அடிநாதமாகக் கொண்டிருக்கும். முழு படத்தையும் ஊட்டியில் எடுத்துள்ளோம்.

செல்லும் இடமெல்லாம் இளையராஜாவைப் புகழ்ந்து தள்ளுகிறீர்களே?

சிறுவயதிலிருந்து நான் இளையராஜா சாரின் ரசிகன். லோகேஷ் கனகராஜ் எப்படி கமல் சார் ரசிகனாக கமலஹாசனைக் கொண்டாடுகிறாரோ, கார்த்திக் சுப்புராஜ் எப்படி ரஜினி சாரின் ஃபேன் பாயாக இருந்து படம் செய்தாரோ, அப்படி இளையராஜாவின் ஃபேன் பாயாக இந்தப் படத்தை எடுத்துள்ளேன்.இதை சாத்தியப்படுத்தியது இருவர். முதலாமவர் என்னுடைய தயாரிப்பாளர் டாக்டர் அர்ஜுன். இன்னொருவர் இயக்குநர் மிஷ்கின். அடுத்து, என் வழிகாட்டியான ஒளிப்பதிவாளரும் ‘டுலெட்’ இயக்குநருமான செழியன். 

ராஜா சாரிடம் கதை சொன்னதும் அவருக்கு பிடிச்சிருந்தது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே நான் எழுதிய பல நூல்களை ராஜா சாரிடம் கொடுத்துள்ளேன். அந்தவகையில் எழுத்தாளனாக அவருக்கு என்னைத் தெரியும். 

இந்த சூழல் அவருடன் நெருங்கி வேலை செய்ய உதவியது. இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் இளையராஜாதான். நான்கு பாடல்கள், பின்னணி இசை என அசத்தியிருக்கிறார். மனித மனங்களின் ஆழ்நிலை ரகசியங்களைப் பேசக்கூடிய இசையைக் கொடுத்திருக்கிறார். படம் வெளியானதும் ‘இதயத்தின் ரகசியங்களை இசையில் பேசியுள்ள இளையராஜா’ என்று நிச்சயம் சோஷியல் மீடியாவில் பதிவு செய்வார்கள். 

பல வருடமாக சினிமாவில் இருக்கிறீர்கள். புதுமுகங்கள் ஏன்?

முன்னணி நடிகர்களை வைத்து படம் செய்ய எனக்கும் ஆசைதான். அதற்கான சரியான சூழல் அமையவில்லை. என்னுடைய ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக். ஏற்கனவே ‘கன்னிமாடம்’ படத்தில் நாயகனாக  நடித்தவர். என் இயக்கத்தில் நடிக்க விரும்பி தயாரிப்பாளரையும் அழைத்து வந்தவர். திறமையான நடிகர். நாயகியாக க்ரிஷா குருப். 

‘கோலிசோடா 2’ மற்றும் சில மலையாளப் படங்களில் நடித்தவர். நுணுக்கமான எக்ஸ்பிரஷன்ஸை கொடுத்துள்ளார். இவர்களுடன் சிங்கம்புலி, முனீஷ்காந்த், மாஸ்டர் ஆதவ் இருக்கிறார்கள். தாச்சா என்ற ஆடை வடிவமைப்பாளர் முக்கியமான வேடம் செய்துள்ளார். இவர்கள் எல்லோருக்கும் கதையை நகர்த்துவதில் முக்கிய பங்கு இருக்கும். 

ஒளிப்பதிவு, என் பிரியத்துக்குரிய செழியன். இளையராஜாவுக்குப் பிறகு இப்படத்தின் பெரும் பலம் இவர்தான்.‘மைலாஞ்சி’ பார்க்கும் எல்லோர் முகத்திலும் நிச்சயம் மகிழ்ச்சி பூக்கும். காதலிப்பவர்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும். காதல் நிரந்தரமானது என்ற உணர்வு கிடைக்கும்.

எழுத்தாளர், இயக்குநர் - என்ன வித்தியாசம்?

எழுத்தாளர் என்பது கன்னியாகுமாரியில் இருப்பது போலவும், இயக்குநர் என்பது காஷ்மீரில் இருப்பது போலவும் 180 டிகிரி வித்தியாசம். எழுத்தாளராக இருப்பது வேறு; இயக்குநராக இருப்பது வேறு. எழுத்தாளராக இருக்கும்போது அவருடைய கற்பனைதான் எஜமான். 

யாருக்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டியதில்லை. இயக்குநராக இருக்கும்போது படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நற்பெயர் உண்டாக்கித் தரவேண்டும் என்ற பொறுப்பு, கடமை இருக்கும். நான் எழுதி வைத்துள்ள திரைக்கதைகள், சிறுகதைகளை இனி தொடர்ந்து திரைப்படமாக எடுப்பேன்.

எஸ்.ராஜா