Golf ஆடுவது செய்தியல்ல...பொலிவியா பெண்கள் ஆடுவதுதான் நியூஸ்!
உலகின் மிக உயரமான கோல்ஃப் மைதானங்களில் பொலிவியாவின் லா பாஸ் நகர மைதானமும் ஒன்று. ஆண்டிஸ் மலைத்தொடரில் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 360 மீட்டர் உயரத்தில் இந்த கோல்ஃப் மைதானம் உள்ளது. அதாவது சுமார் 10 ஆயிரத்து 945 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. இதில் பொலிவியாவின் பூர்வகுடியைச் சேர்ந்த சோலிடாஸ் சமூகப் பெண்கள் கோல்ஃப் விளையாடி வருவது சமீபத்தில் அத்தனை வைரலாகி இருக்கிறது.  இதற்குக் காரணம், இந்தப் பெண்கள் தங்களின் தனித்துவமான பவுலர் தொப்பியை அணிந்தபடி, நீண்ட ஜடைகளுடனும், பாரம்பரியம் கொண்ட வண்ணமயமான மடிப்புள்ள பொலேரா பாவாடையுடனும் கோல்ஃப் ஆடுவதுதான்.
சோலிடாஸ் பெண்கள்
பொலிவியாவில் அய்மாரா என்ற பூர்வகுடி சமூகத்திலுள்ள பெண்கள் சோலிடாஸ் என அழைக்கப்படுகின்றனர். சோலிடா என்பதே ஒருகாலத்தில் பெண்களைக் குறைத்து மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எனச் சொல்லப்படுகிறது.
அப்போது இந்த சோலிடா பழங்குடியினப் பெண்கள் பயங்கரமான சமூக, இனப் பாகுபாட்டை எதிர்கொண்டு வந்தனர். அவர்கள் பொது இடங்களுக்கு வர தடைசெய்யப்பட்டனர். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தக் கூடாது எனவும், உணவகங்களுக்குள் நுழையக்கூடாது என்றும் பல தடைகளைச் சந்தித்தனர். இதனால இவர்களின் தொழில் வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே இருந்தன. அதனால், 1960களில் இருந்தே சிவில் உரிமைகளைப் பெற இந்தப் பெண்கள் சில இயக்கங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் 2006ம் ஆண்டு பொலிவியாவின் முதல் பழங்குடி ஜனாதிபதியாக ஈவோ மோரலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்பிறகு இந்த சோலிடாஸ் பெண்களின் இயக்கம் உத்வேகம் பெற்றது. பல்வேறு தடைகள் நீக்கப்பட்டன. அவர்களுக்கு மதிப்பளித்து சமூகத்தின் முன் கொண்டு வந்தார் ஜனாதிபதி ஈவோ மோரலஸ்.
இதனால் கடந்த இருபது ஆண்டுகளில் சோலிடா பெண்கள் அரசியலிலும், தொலைக்காட்சியிலும், ஃபேஷன் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் கோலோச்சி வருகின்றனர்.
குறிப்பாக விளையாட்டுத் துறையில் மல்யுத்தம், மலையேற்றம் உள்ளிட்டவற்றில் ஜொலிக்கின்றனர். அப்படியாக கோல்ஃப் விளையாட்டிலும் தங்கள் திறமையைக் காட்டத் தொடங்கினர்.
சோலிடாஸ் கோல்ஃபர்ஸ்
பொலிவியாவின் நிர்வாகத் தலைநகர் லா பாஸ். உலகின் உயரமான கோல்ஃப் கிளப் இங்கே உள்ளது. ஆண்டிஸ் மலைத்தொடர் வழியாக சாலைகள், பாலங்கள் மற்றும் தண்டவாளங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் ரயில்வே தொழிலாளர்களால் 1912ம் ஆண்டு முதன்முதலில் லா பாஸ் கோல்ஃப் மைதானம் உருவாக்கப்பட்டது.
பிறகு 1940ம் ஆண்டு நகரத்தின் மையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உயரமான மல்லசில்லா என்ற சுற்றுலா இடத்தில் கோல்ஃப் கிளப் மைதானம் அமைக்கப்பட்டது.
ஒரு பள்ளத்தாக்கில் பனி
மூடிய இந்த மைதானத்தின் அழகே தனித்துவமானது. அதனால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த மைதானத்தையும் பார்வையிடத் தவறுவதில்லை. இந்தக் கோல்ஃப் கிளப் திங்கட்கிழமைகளில் மட்டும் அதன் மைதானத்தை ஊழியர்களுக்காகத் திறக்கிறது. ஏனெனில், மைதானப் பராமரிப்பு காரணமாக அன்று கிளப் உறுப்பினர்கள் யாரும் விளையாடுவதில்லை.
இந்த கோல்ஃப் ஊழியர்களில் அய்மாரா வம்சாவளியைச் சேர்ந்த பல சோலிடாஸ் பெண்கள் உள்ளனர். இவர்கள் திங்கட்கிழமை தோறும் கோல்ஃப் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர். அப்படியாக கோல்ஃப் விளையாட்டைக் கற்றுக்கொள்கின்றனர்.
இதற்கு சக ஊழியர்களும், வீரர்களுக்கு உதவியாளர்களாக இருக்கும் கேட்டிகளும், பயிற்றுவிப்பாளர்களும் வழிகாட்டுகின்றனர். அப்படியாக தொடர்ந்து அவர்கள் பயிற்சி செய்கின்றனர். ஆனால் இவர்கள் தேசிய, சர்வதேச போட்டிகளில் இன்னும் கலந்துகொள்ளவில்லை. உள்ளூர் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். பொலேரா கோல்ஃப்
இந்த சோலிடாஸ் கோல்ஃப் பெண்களின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அவர்களின் பாரம்பரிய உடை. அவர்கள் வண்ணமயமான பொலேரா பாவாடையும், நீண்ட ஜடையும், பவுலர் தொப்பியும், கோல்ஃப் ஷூவும் அணிந்து விளையாடுவது பார்வையாளர்களை வசீகரிக்கிறது.
இது குறித்து பேசும் பொலிவியன் கோல்ஃப் கூட்டமைப்பின் இயக்குநர்கள் குழுவின் உறுப்பினரான டியாகோ அரனா, ‘அவர்களின் ஆடைதான் அவர்களின் கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்தும் ஒன்று. அதுமட்டுமில்லாமல் இப்போது அவர்கள் பாரம்பரிய உடைக்கு ஏற்ப கோல்ஃப் பந்தினை அடிக்கும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கியுள்ளனர். தவிர, தங்கள் சமூகத்தின் அடையாளத்தை மாற்றாமல் சிறந்த கோல்ஃப் வீராங்கனைகளாக வலம் வருகின்றனர்’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
தற்போது பொலிவியாவில் ஒவ்வொரு வயது மட்டத்திலும் உள்ள பல சமூக பெண்களிடையே கோல்ஃப் விளையாட்டிற்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. இதற்கு சோலிடாஸ் பெண்களே முதன்மை காரணமாக உள்ளனர். பொலிவியாவில் கோல்ஃப் விளையாட்டை வளர்ப்பதற்கான பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக சோலிடாஸ் பெண்கள் மாறியிருப்பது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது என முத்தாய்ப்பாகச் சொல்கிறார் டியாகோ அரனா.
ஹரிகுகன்
|