இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!



அயல்நாட்டுப் பயணங்களுக்கான ஃபாரக்ஸ் அட்டையில் பெரும்பாலும் பதினான்கு நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம்பெறுகின்றன. அமெரிக்க டாலர்கள், ஆஸ்திரேலிய டாலர்கள், யூரோ, ஜப்பான் யென் போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களின் கரன்சிகள் சுலபமாகக் கிடைக்கின்றன. நம் நாட்டிலிருந்து அதிகம் பேர் போகாத நாடுகளின் நாணயங்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. எகிப்து செல்லவேண்டுமானால் அந்நாட்டின் பவுண்டைக் கண்ணில் பார்க்க முடியாது. 

ஒரு முகவரிடம் விசாரித்தபோது எகிப்திய பவுண்டை வரவழைப்பதற்குப் பத்து நாள்களாகும் என்றார். எகிப்திய பவுண்டை யாரோ துபாயிலிருந்து கொச்சினுக்குக் கொண்டுவந்து அங்கிருந்து நாம் இருக்கும் இடத்துக்கு அனுப்பினால்தான் கிடைக்கும். இங்கிருந்து எகிப்துக்கு யாரும் போவதில்லை, மிகவும் அரிது எனத் தகவல் சொன்னார். 

ஆகவே, விமான முன்பதிவைப் போல நாணயத்துக்கும் முன்னமே சொல்லி வைத்திருக்க வேண்டும். கடன் அட்டைகளில் பன்னாட்டுப் பரிவர்த்தனையை அனுமதித்து வெளிநாட்டுப் பயணத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் markup fee, conversion charge இடுவார்கள். ஒவ்வொரு தடவையும் சிறிய தொகையை இழக்க நேரிடும். கடைசியில் மொத்தமாகப் பார்த்தால் அதுவே பெரிய தொகையாகச் சேர்ந்துவிடும் வாய்ப்புகள் உண்டு.

நல்லூழாக, ‘Bookmyforex’ இணையதளத்தில் single currency ஃபாரக்ஸ் அட்டைகள் இருக்கின்றன. அந்த அட்டையில் அமெரிக்க டாலர்களை ஏற்றிவிடுவார்கள். உலகின் எந்த மூலையிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஸ்வைப் செய்யும்போது ஷில்லிங், பவுண்டு, ரியால் என அந்தந்த நாட்டுக் கரன்சியாக அதுவே மாறிக்கொள்ளும். பரிவர்த்தனைக் கட்டணம் இருக்காது. டாப் அப் செய்யும் வசதியும் உண்டு. 

நமது கடவுச்சீட்டு, பான் அட்டை, விமானப் பயணச்சீட்டு, நுழைவாணை போன்றவற்றைத் தரவேற்றிக் காலையில் பதிவுசெய்தால் அன்று மதியமே வீட்டுக்குக் கொண்டுவந்து கையளித்துவிடுகிறார்கள். தாமஸ் குக் தளத்திலும் இந்தச் சேவை இருக்கிறது. இதன்மூலம் சில ஆயிரங்கள் மிச்சமாகும். அந்தக் காசுக்குக் கூடுதலாக இரண்டு இடங்களைப் பார்க்க முடியும். எந்தப் பயணத்திலும் சிக்கனம் அவசியம்.

கோகுல் பிரசாத்