இந்தியாவின் முதல் திருநங்கை ட்ரோன் பைலட்!



இந்தியாவின் முதல் திருநங்கை ட்ரோன் பைலட் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த ஷிவானி. இதன்மூலம் ஒரு தொழில் முனைவோராகவும்  மாறியிருக்கிறார் அவர். 
அதாவது தமிழ்நாடு அரசின் புத்தொழில் திட்டத்தின் வழியே 5 லட்சம் ரூபாய் நிதியுதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அவர். இதன்மூலம் ட்ரோன் வாங்கி பணிகளைத் தொடங்க இருப்பதாக அத்தனை உற்சாகமாகச் சொல்கிறார் ஷிவானி.   

‘‘சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பேரையூர்னு ஒரு கிராமம். ஒன்பதாம் வகுப்பின்போது என் பெண் தன்மையை உணர்ந்தேன். ஆனா, வீட்டுல என் உணர்வை ஷேர் பண்ண முடியல. படிக்கணும் என்கிற ஆசையில் கொஞ்ச காலம் வீட்டுல அப்படியே இருந்தேன். டிகிரி, டிப்ளமோ எல்லாம் முடிச்சதுக்குப் பிறகு வீட்டுல இருந்து வெளிேய வந்து திருநங்கையாக மாறினேன். இப்பவரை வீட்டுல ஆதரவு கிடையாது. 

டிகிரியில் பி.எஸ்சி சைக்காலஜி முடிச்சேன். அப்புறம், டிப்ளமோ இன் மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி கோர்ஸ் பண்ணினேன். அதை முடிச்சிட்டு ஹாஸ்பிடல்ல வேலை செய்தேன். 
அத்துடன் சமூக ஆர்வலராகவும் இருந்தேன். அதாவது எங்க மாவட்டத்துல இருக்கக்கூடிய திருநங்கைகளுக்கு அரசு மூலமாகக் கிடைக்கக்கூடிய அனைத்து சமூக உதவிகள் குறித்தும் சொல்லிட்டு வர்றேன். அப்படியே லோக் அதாலத்னு சொல்லப்படுற மக்கள் நீதிமன்றத்தின் உறுப்பினராகவும் செயல்படுறேன். 

இதுதவிர புதுக்கோட்டை மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கேன். திருநங்கை அம்மா ஒருத்தங்கதான் எனக்கு சப்போர்ட்டாக இருக்காங்க.
இந்நேரம் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் நபார்டு மேனேஜர் மூலம் ஃப்ரீயாக ட்ரோன் பைலட் கோர்ஸ் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சது.இந்த வாய்ப்பு எப்படி வந்ததுனா, ஒரு திருநங்கைக்கு வாய்ப்பு கொடுக்கலாமே... ஒரு முன்னுதாரணமாக இருக்குமேனு நபார்டு வங்கி மேலாளர் திருநங்கை சமூகத்துல பொதுவாகக் கேட்டார். 

நாங்க எங்க மாவட்டத்துல இருக்கிற எல்லா திருநங்கை குரூப்லயும் அந்தத் தகவலைப் போட்டு ‘யார் படிக்கப்  போறீங்க’னு கேட்டோம். இதை வெளியில் படிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.ஆனா, எங்க திருநங்கை சமூகத்துல யாரும் தயாராக இல்ல. அது வருத்தமா இருந்துச்சு. 

அதனால் நாமே படிக்கலாம்னு ஆர்வமாகப் போனேன். கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆர்பிடிஓ, அதாவது ரிமோட் பைலட் ட்ரைனிங் அமைப்பில் 15 நாட்கள் பயிற்சி கொடுத்தாங்க. சாப்பாடு, தங்குமிடம், பயிற்சினு எல்லாமே இலவசமாகத் தந்தாங்க...’’ என்கிறவர், மகிழ்ச்சியுடன் தொடர்ந்தார்.  

‘‘இந்தப் பயிற்சியில் ரெண்டு நாள் தியரி கிளாஸ் எடுத்தாங்க. அப்புறம், கம்ப்யூட்டர்ல எப்படி ஆபரேட் பண்றதுனு சொல்லித் தந்தாங்க. பிறகு, மேனுவலா மைக்ரோ ட்ரோன் வச்சு பயிற்சி அளிச்சாங்க. இதன்பிறகு தேர்வு நடந்தது. 

அதில் ட்ரோனை சிறப்பாக ஆபரேட் பண்ணிக் காட்டி சான்றிதழ் வாங்கினேன். அப்புறம் இப்போ நான் ஃபோர்வீலர் டிரைவிங்கும் முடிச்சிருக்கேன். ஏன்னா ட்ரோனை கையில் எடுத்திட்டு போக முடியாது. சிறிய ட்ரோனே நாற்பது கிலோ வரை வரும். அதை கையிலயோ அல்லது டூவீலர்ல யோ கொண்டுட்டு போகமுடியாது.

அதுக்கு வண்டி வேணும். அப்போதான் டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் கவர் பண்ணலாம். அப்புறம் தமிழ்நாடு அரசு ஸ்டார்ட்அப்ல மாற்றுத் திறனாளிகளுக்கும் திருநங்கைகளுக்கும் ஒரு திட்டம் அறிவிச்சிருந்தாங்க. 

இந்தப் புத்தொழில் திட்டம் மூலமாக அரசின் நிதியுதவி பெற்று ஸ்டார்ட்அப் தொழில் தொடங்கலாம்.இதில் நான் ட்ரோன் வாங்கி வேலை செய்யலாம்னு விண்ணப்பிச்சேன். அப்படியாக தமிழக அரசின் நிதியுதவி 5 லட்சம் ரூபாய் வழங்குவதற்கான தொழில்முனைவோராக தேர்வு செய்யப்பட்டேன். இதற்கான ஆர்டரை முதல்வர் கையால் வாங்கினேன். 

இப்ப இந்த நிதியுதவி மூலம் ‘புதுவை ஷிவானி ரிமோட் ட்ரோன் பிரைவேட் கம்பெனி’னு பதிவு பண்ணியிருக்கேன். அப்படியே சிறிய ட்ரோனுக்கும் விண்ணப்பிச்சிருக்கேன்...’’ என்கிறவர், இதிலுள்ள வேலை வாய்ப்புகளைக் குறிப்பிட்டார்.  ‘‘பொதுவாக ட்ரோன்ல நுண், சிறிய, நடுத்தர, பெரியனு நான்கு வகைகள் இருக்கு. நான் சிறிய ட்ரோன்களைக் கையாள்வேன். இதன்வழியே கண்காணிப்பு செய்யலாம். இடம் அளக்கலாம். அப்புறம் வனத்துறை, காவல்துறையில் எல்லாம் முக்கியமாக பயன்படுது. 

விவசாயத் துறையில் துல்லியமான வேளாண்மை, பயிர் கண்காணிப்பு, உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை குறித்த இடத்தில் தெளிப்பதற்கு அவசியமாக இருக்கு. அடுத்து வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகளுக்குப் பின் பயிர் காப்பீடு மதிப்பீட்டிலும் ட்ரோன்கள் முக்கிய பங்காற்றுது. 

இதில் நான் பூச்சி மருந்துகள், உரங்கள் தெளிக்கும் வேலையை எடுத்து செய்ய இருக்கேன். இப்ப பூச்சி மருந்தினை மேனுவலாக தனிநபர் செய்தால், ஒருநாளைக்கு ஒரு ஏக்கர்தான் அவரால் கவர் செய்யமுடியும். இதற்கு ஒருநாள் கூலி 900 ரூபாய் ஆகும். 

இதுவே ட்ரோன்னா ஒரு மணி நேரத்துக்குள்ள முடிஞ்சிடும். கூலியும் 400 முதல் 500 ரூபாய்தான். அதுமட்டுமில்லாமல் ட்ரோன் மூலம் தெளிக்கும்போது தெளிப்பவரின் உடலுக்கும் பூச்சி மருந்தினால் எந்தப் பாதிப்பும் நேராது.அதனால் இப்ப விவசாயத்துல நிறைய இடங்கள்ல ட்ரோன் பயன்படுத்துறாங்க. 

ட்ரோன் சம்பந்தமாக விழிப்புணர்வும் விவசாயிகள் மத்தியில் வந்திடுச்சு. அப்படியாக இதில் வேலைவாய்ப்புகள் அதிகம். இப்ப விவசாய உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் இருக்கு. அவங்ககிட்ட 100 முதல் 150 விவசாயிகள் வரை இருப்பாங்க. ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் ட்ரோன் வச்சிருப்பாங்க. 

அவங்க விவசாயிகளுக்கு ட்ரோன் விழிப்புணர்வு கொடுத்திட்டு இருக்காங்க. அவங்க மூலமாக விவசாயிகளை சந்தித்து என் வேலைக்குப் பேசலாம்னு இருக்கேன். 
இப்போ, நான் 10 லிட்டர் எடுத்திட்டுப் போறமாதிரியான சிறிய ட்ரோனுக்கு விண்ணப்பிச்சிருக்கேன். இதன்மூலம் நான் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 6 முதல் 7 ஏக்கர் வரை கவர் பண்ண முடியும். அதனால் வேலைகள் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு.

அப்புறம் இப்ப தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஏரியாவுல ஒரு ஆப் இருக்கு. இது ஓலா, ஊபர் மாதிரியானது. இந்த ஆப்ல விவசாயிகளும், பைலட்களும் போய் ரிஜிஸ்டர் பண்ணிக்கலாம். 
இதன்மூலம் விவசாயிகள் பூச்சிமருந்துகள், உரங்கள் தெளிக்க அழைப்பாங்க. இதில் நான் பதிவு செய்திருக்கேன். 

இதுதவிர, என்னுடைய விசிட்டிங் கார்டை விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கும் கொடுத்திருக்கேன். அதன்மூலமாக நிறைய சர்வீஸ் கிடைக்கும். இப்போ புதுக்கோட்டை, தஞ்சாவூர்ல நிறைய ட்ரோன்கள் பயன்படுத்துறாங்க. ஆனா, பைலட் குறைவாகத்தான் இருக்காங்க. அதனால், எனக்கு வாய்ப்பு கிடைக்கும்னு நம்புறேன். அப்படி கிடைத்தால் நான் சிறப்பாகச் செய்வேன். இதன் வழியே என் வாழ்வாதாரத்தை பார்த்துக்க முடியும். 

அத்துடன் நான் சிறப்பாகச் செய்யும்போது மற்ற திருநங்கைகளை நல்ல கண்ணோட்டத்தில் பார்க்கிற வாய்ப்பும் வரும். அவங்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்...’’ என சந்தோஷமாகக் குறிப்பிடுகிறவர், ‘‘அடுத்ததாக மீடியம் ட்ரோன் பத்தி படிக்கப் போறேன். அப்புறம் எதிர்காலத்துல என்னால முடிஞ்ச அளவுக்கு ரெபர் பண்ணி ஆர்வமுள்ள திருநங்கைகளை ட்ரோன் பைலட் பயிற்சி எடுக்க வைக்கணும்னு நினைச்சிருக்கேன். அதன்வழியாக அவங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பது என் திட்டம்...’’ என்கிறார் ட்ரோன் பைலட் ஷிவானி.l

பேராச்சி கண்ணன்