தண்ணீரில் எரியும் கேஸ் அடுப்பு!



கடந்த வாரம் ஊடகங்களில் இப்படியொரு செய்தி வந்தபோது முதலில் யாராலுமே  நம்பமுடியவில்லை. மூலிகை பெட்ரோல் போல இதுவும் ஒரு ஏமாற்றாக இருக்கும் என்றே பலரும் கூறினர். 
ஏனெனில் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மாதம் வரை அடுப்பு எரிக்கலாம் என்றால் யார்தான் நம்புவார்கள்? 

பின்னர் தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் வாயுவின் மூலம் இயக்கப்படும் கேஸ் அடுப்பு இது என இதனைக் கண்டறிந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கார்த்திக் விளக்கியபோது அத்தனை பேரும் அதிசயித்தனர்.   

யார் இந்த ராமலிங்கம் கார்த்திக்? 

சேலம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த இருபது ஆண்டுகளாக ஹைட்ரஜன் குறித்த ஆராய்ச்சியை சிரத்தையுடன் மேற்கொண்டு வருபவர். இதற்காகவே அவர் HONC கேஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இதில் HONC என்பது, ‘ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் நோ கார்பன்’ என்பதைக் குறிக்கிறது. 

இன்று உலக அளவில் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அதிகளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. கார்பன் உமிழ்வால் உலகம் வெப்பமயமாகி காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. அதனால் மாற்று எரிபொருள் திட்டம் என்பதும், பசுமை ஆற்றல் என்பதும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.  

அந்தவகையில் ராமலிங்கம் கார்த்திக் இந்த HONC எரிவாயுவைக் கண்டறிந்து அதன் தொழில்நுட்பத்தையும் வடிவமைத்துள்ளார். இந்த எரிவாயுவினை முழுமையாக நீரிலிருந்து தயாரிக்க அவர் தனியொருவராக 18 ஆண்டுகள் செலவழித்துள்ளார். 

‘‘பலகட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு எல்பிஜி மற்றும் சிஎன்ஜி போன்ற விலையுயர்ந்த, ஆபத்தான, புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த, வெடிக்காத மற்றும் மிகவும் திறமையான எரிபொருளை நாங்கள் கண்டறிந்துள்ளோம்...’’ என அத்தனை உற்சாகமாகக் குறிப்பிடுகிறார்.

‘‘ஆரம்பத்தில் பலரும் இதனை வேடிக்கையாகவே நினைத்தனர். ஏனெனில், தீப்பிடிக்கும் போது தண்ணீர் ஊற்றி அணைத்துப் பழகிய நம் மக்களுக்கு தண்ணீரிலிருந்து தீயை உருவாக்க முடியும் என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

அதனால், நிறைய அவமானங்களைச் சந்தித்தேன். ஆனால், எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் முடியும் என்ற நம்பிக்கையில் என் வேலைகளைத் தொடர்ந்தேன். அதுவே HONC எரிவாயு...’’  என தன்னம்பிக்கையாகச் சொல்கிறார் அவர். இந்த HONC எரிவாயு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலிருந்து உருவாக்கப்படுகிறது. 

பொதுவாக நீர் என்பது H2O - அதாவது  ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் இணைந்த மூலக்கூறு. இதிலுள்ள ஹைட்ரஜன் ஒரு எரிபொருள். இதனை நாம் பள்ளிகளிலேயே படித்திருப்போம். அறிவியல் ரீதியாக தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் பிரிக்கப்பட்டு, இந்த HONC எரிவாயு உருவாக்கப்படுகிறது.     

இந்த செயல்முறை முழுவதும் சென்சார் கட்டுப்பாட்டிலும், ஒருங்கிணைந்த வெப்பநிலை, அழுத்தம், பாதுகாப்பு வழிமுறைகளுடனும் மேற்கொள்ளப்படுகிறது. ‘‘இது நூறு சதவீதம் நீர் சார்ந்தது. இதில் எந்தப் புதைபடிவ எரிபொருளின் சார்பும் இல்லை...’’ என உறுதியாகச் சொல்கிறார் ராமலிங்கம் கார்த்திக்.

 ‘‘எங்கள் HONC எரிவாயு ஜெனரேட்டர்களில் சுத்திகரிக்கப்பட்ட நீர் ஊற்றப்படும்போது அதிலுள்ள ஹைட்ரஜனும், ஆக்ஸிஜனும் உடைக்கப்பட்டு அவை பலகட்ட அறிவியல் செயல்முறைகள் மூலம் ஹைட்ரஜன் கேஸாக மாற்றப்பட்டு அடுப்பு எரிகிறது. இவ்வளவுதான் தொழில்நுட்பம்.

அதுமட்டுமல்ல. தண்ணீரை ஹைட்ரஜனாக மாற்றும் செயல்முறைக்கு மின்சாரம் தேவைதான். இதற்கான மின்சார யூனிட்டும் அதிகம் செலவாகாது. அதனால் மின்கட்டணம் அதிகமாகுமோ எனக் கவலைப்பட வேண்டியதில்லை. அதேபோல் இது வேகமாக எரியக்கூடியது. 

எல்பிஜி கேஸில் ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்க ஐந்தரை நிமிடங்களாகும். இதற்கான எல்பிஜி கேஸ் 0.63 பைசா செலவாகும். இதுவே எங்கள் HONC எரிவாயுவில் ஒன்றரை நிமிடமே போதும். செலவும் 0.14 பைசாதான்...’’ என்கிறார் ராமலிங்கம் கார்த்திக். 

அத்துடன் 100 டிகிரி செல்சியஸ் முதல் 2800 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த மற்றும் மிக அதிக வெப்ப அமைப்புகளில் பயன்படுத்தமுடியும் என்கிறார். அதாவது வீடுகளுக்கும் பயன்
படுத்தலாம், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதுதான்.தற்போது புதைபடிவ எரிபொருளை நம்பியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

 ‘‘இன்று உலகம் முழுவதும் மாற்று எரிபொருளுக்காகத்தான் அலைகிறது. அதற்கு இது ஒரு தீர்வாக இருக்கும்...’’ என முத்தாய்ப்பாகச் சொல்கிறார் ராமலிங்கம் கார்த்திக். தற்போது அவரின் இந்தக் கண்டுபிடிப்பு சந்தைக்குக் கொண்டு வர அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.    

பேராச்சி கண்ணன்