சிறுகதை - ஒலிம்பஸ் மோன்ஸ்



பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்து குழுமி இருக்கும் உங்களை அன்போடு வரவேற்கிறேன். இன்று உண்மையை நான் சொல்லி விடவேண்டும்.

உங்களுக்கு ஜியாலஜிஸ்ட் என்றால் யார் என்று தெரியுமா? 

ஏனென்றால் நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று நான் ஒரு ஜியாலஜிஸ்ட் என்று அறிமுகம் செய்து கொள்வது மிகக் கடினமாக உள்ளது. 

அப்படியென்றால் என்னவென்று விவரிப்பது கொடுமை. கார்டியாலஜிஸ்ட் என்பது போல யாரோ டாக்டர் போலிருக்கிறது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள்.

எனக்கே இப்படி இருக்கிறது என்றால் மலை ராணியான மதிவதனிக்கு எப்படி இருக்க வேண்டும்..?

நீங்கள் உங்களுடைய பள்ளிக் காலத்தில் வரலாறு, புவியியல் என்று ஒரு பாடத்தை படித்திருப்பீர்கள். அதில் வரும் புவியியல் என்பதை நீங்கள் பெரும்பாலும் அது ஒரு உலக வரைபடம் பற்றியது என்றுதான் நினைக்கிறீர்கள். ஜியாலஜிஸ்ட் என்பவர் புவியின் அமைப்பு... அது உருவான வரலாறு... இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் அதன் உருவாக்க செயல்முறைகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானி.நாங்கள் பெரும்பாலும் பாறைகள், கனிமங்கள்... இப்படி வகை வகையான இயற்கை வளங்களை ஆராய்வது சார்ந்திருந்தாலும் என்னைப் போன்றவர்களின் முக்கியமான தேடல் மலை உச்சிகளை அடைவது பற்றியதாகும்.

இவ்வளவு பெரிதாக நான் ஏன் விளக்கம் தருகிறேன் என்றால் மலை வாதியான மதிவதனிக்கு  நடந்த விஷயத்தை உங்களுக்கு விளக்க நான் விரும்புவதால்தான்.
இன்று ஓர் உண்மையை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். இது நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்தப் பூமியில் எந்த மனிதனுக்கும் இதுவரையில் நடக்காத ஒன்று... இன்றைக்காவது எப்படியாவது அதை பதிவு செய்து விடவேண்டும்.

ஏனென்றால் அதுகுறித்து அறிந்த, தெரிந்த, நேரில் பார்த்த... இப்போது மீதமிருக்கும் ஒரே சாட்சி நான்தான். கௌசல்யா... மதிவதனி எங்கே என்று இப்போது எனக்கு மட்டும்தான் தெரியும்.

சாதாரணமாக கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு அடுத்த படிநிலைக்கு செல்வது என்பது தமிழ்நாட்டின் பெண்களுக்கு எவ்வளவு பெரிய போராட்டம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.தமிழக அரசாங்கம் கொடுத்த மாதம் ₹1000க்கு ஆசைப்பட்டும், விலை இல்லாத இருசக்கர வாகனம் பெற்றும் கல்லூரி வந்தவர்கள் நாங்கள். 

மதிவதனி கிராமத்திலிருந்து வந்தவள். மலையேறும் துறை என்கிற ஒரு துறையை நாங்கள் கல்லூரி காலத்தில் தேசிய மாணவர் படையில் இணைந்தபோது தேர்வு செய்து கொண்டோம் என்பது உண்மைதான். என்றாலும் பள்ளிக் காலத்திலிருந்தே மதிவதனி பல்வேறு மலை உச்சிகளை அடைந்து ஏற்கனவே ஒரு சாதனைப் பெண்ணாகத்தான் இருந்தார்.

நீங்கள் மலை ஏறுவது குறித்து இணையத்தில் எப்போதாவது தேடியிருக்கிறீர்களா? 

அப்படியானால் ‘மதி டெக்டானிக்ஸ்’ என்று தனியாக ஓர் அம்சமே இருப்பதை உங்களால் கவனித்திருக்க முடியும். அது மதிவதனியின் மிக முக்கிய பங்களிப்பு. இந்த உலகில் ஐந்து வகையான மலை ஏற்றங்கள் உண்டு. தரைவழி மலையேற்றம், பாறை ஏறுதல், பனிமலை ஏறுதல், மலைசறுக்கு ஏறுதல், பனிப்பாறை பயணம் என்று அவற்றை வகுக்கிறார்கள்.

இந்த ஐந்திலுமே வரலாற்றுச் சாதனைகள் படைத்த பெருமை மதிவதனிக்கே உண்டு.நாமக்கல் பக்கத்தைச் சேர்ந்த மதிவதனி, தமிழக அளவில் பள்ளிக் கல்வியின்போதே மிகப் பிரபலமாகிவிட்டாள். உங்களுக்கு கொல்லிமலை என்றால் தெரியும் என்று நினைக்கிறேன். 

உண்மையில் நீங்கள் சாலை மார்க்கமாக போவதாக இருந்தால் 70 கொண்டை ஊசி வளைவுகள் அங்குண்டு. எங்களுடைய பள்ளிப் பேருந்து அங்கு சென்ற பொழுது கொல்லிமலை அடிவாரத்தில் திடீரென்று மதிவதனி காணாமல் போனாள். சொன்னால் நம்புவது கஷ்டம்.

நாங்கள் ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவாகக் கடந்து, ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, தோட்டக்கலை பண்ணை என்று ஊர்ந்து சென்று உச்சியை அடைவதற்குள் அந்த மலை ஏறி தனி ஆளாக எங்களுக்கு முன்பு அங்கே இருந்தாள் மதிவதனி.இது மெதுவாக கசிந்து அப்போது தினசரிகளில் கூட செய்தியாக வெளிவந்தது.

ஆனால், அதுமுதல் சம்பவம்தான். தான் இதுபோல் செய்யப் போகிறோம் என்பதை என்னிடம் மட்டும்  கூறியிருந்தாள். அப்போதிலிருந்து எங்கள் நட்பு பலப்பட்டது. 
வரைபடங்களை துரிதமாக வாசித்து, அறிந்து, தூரங்களை கணக்கிடுவதில் நான் எப்படியோ நிபுணத்துவம் பெற்றிருந்தேன். அதற்கு நில அளவை அதிகாரியாக இருந்த என் தந்தை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

எது எப்படியோ நாங்கள் கல்லூரிக்கு ஒன்றாகச் சென்றோம். கல்லூரி நாட்களில் அவளுடைய அற்புதமான ஆறு கண்டுபிடிப்புகளை உலகம் மறக்காது. மதிவதனி ஏறாத சிகரம் தமிழ்நாட்டில் இல்லை. தொட்டபெட்டாவுக்கு அருகே உதகையில் ரங்கசாமி மலை என்ற ஒன்றுண்டு. இந்த மலையில் ஒரு பிரம்மாண்ட தூண் உள்ளது. 

400 அடி உயர தூண் அது. பல நாட்களாக வெளி உலகிற்கு தெரியாத அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது மதிவதனிதான். ரங்கசாமி மலைக்கு செல்கிறவர்கள் இதை கல்வெட்டில் வாசிக்கலாம்.

அவளுடைய அற்புதங்களில் இன்று அதிகம் பேசப்படுகிற ஐந்து விஷயங்கள் உண்டு. உண்மையில் இன்றைக்கு அவளைப் பற்றி நிறைய பேசுகிறார்கள்.
காரணம், கடந்த பத்தாண்டுகளாக அவள் எங்கிருக்கிறாள் என்பது யாருக்கும் தெரியாததுதான். ஒருவர் இல்லாத போதுதான் அவருடைய அருமை உலகுக்குத் தெரிகிறது.

ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன் இமயமலை தெற்குப் பகுதியில் நடந்த போயிங் விமான விபத்து பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். விபத்து நடந்த 17 நாட்கள் கழித்து தனி ஆளாக மலை உச்சிக்குப் போய் ஏறக்குறைய முப்பத்தி ஆறு பயணிகளை உயிரோடு மீட்ட பெருமை மதிவதனிக்கு உண்டு. 

அப்போது அவளால் மீட்கப்பட்டவர்களில் மிக முக்கியமானவர்தான் மேஜர் மாலிக்.அதன் பிறகு மேஜர் மாலிக், மதிவதனியின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஓர் அங்கமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்மேற்கில் விசித்திரமான ஒலிகளை எழுப்பக் கூடிய இசை மலை ஒன்று இருப்பதை கண்டுபிடித்து கொடுத்தது அவளுடைய முதல் பங்களிப்பு. 
உலகத்தில் எந்த மூலையில், எந்த மலை இருந்தாலும் மேஜர் மாலிக் உதவியோடு அங்கெல்லாம் சென்று வெறித்தனமாக அதன் உச்சியை அடைவதை மதிவதனி தன் வாழ்க்கையின் மிகப்பெரிய குறிக்கோளாக எடுத்துக்கொண்டாள்.

மலைகளை ஓர் உறங்கும் உயிரினமாக, தான் கருதுவதாக என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறாள். ஒவ்வொரு மலைக்கும் உயிர் இருக்கிறது. அது தன்னோடு பேசுகிறது என்பாள். 

இமயமலையில் ஏற்பட்ட விசித்திர நிலநடுக்கத்திற்குப் பிறகு ஒரு புவியியலாளராக ஈர்ப்பு விசையின் வினோதமான மாற்றங்களை கண்டறிந்து நான் அறிவிக்கப் போனபோது, அந்தப் பிளவை சென்று பார்த்து, இயற்கை விதிகளை மீறிய ஒன்றல்ல... இனி ஏற்படப்போகும், வரப்போகும் காலத்தில் புவியியலின் அடிப்படைகள் மலைகளின் கையில்தான் இருக்கிறது என்று பகிரங்கமாக கண்டுபிடித்து எனக்குச் சொன்னவள் அவள்தான்.

இனி கடல்கள் அல்ல... மலைகளே பூமியினுடைய இயற்கை விதிகளை தீர்மானிக்கப் போகின்றன என்பது அவளுடைய கோட்பாடு. இதைத்தான் ‘மதிவதனி டெக்டானிக்ஸ்’ என்றழைக்கிறார்கள்.

சரி, மதிவதனி எங்கே..?

பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இன்றைக்காவது நான் உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். மேஜர் மாலிக் மற்றும் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை இன்று பகிரங்கமாக வெளியிடுவது என்று தீர்மானித்தேன். அதனால்தான் உங்கள் அனைவரையும் இங்கே வரவழைத்தேன். 

எனக்குத் தெரியும்... பத்திரிகையாளர் என்கிற முறையில் பரபரப்பு செய்திகளைத் தேடி மட்டும்தான் நீங்கள் இப்போதெல்லாம் செல்கிறீர்கள். செய்தி சேகரிப்பு என்பது இன்றைக்கு பிரேக்கிங் நியூஸ் வகையறாவாக மாறியிருக்கிறது. மேஜர் மாலிக் இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த அகமதாபாத் விமான விபத்தில் இறந்து விட்டார்.

இப்போது மதிவதனி குறித்த ரகசியம் என்னிடம் மட்டுமே உள்ளது. ஆனால், எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள். உங்களுக்கு நினைவிருக்கும்... 10 ஆண்டுகளுக்கு முன் சரியாக செவ்வாய் கிரகத்திற்கு நாசா தன்னுடைய மூன்று விண்வெளி வீரர்களை அனுப்பியது. 

அப்போது பரபரப்பாக நீங்கள் பிரேக்கிங் நியூஸ் போட்டுக் கொண்டிருந்தீர்கள். செவ்வாய் கிரகத்திற்கு போய்ச் சேர்ந்த அந்த மூவரில் ஒருவர் காணாமல் போனார் என்பதையோ நாசா அவரை தேடிக் கொண்டிருக்கிறது என்பதையோ இந்த உலகம் அறியவே இல்லை.

இப்போது சொல்கிறேன்... இப்போதாவது உண்மையை வெளியிடுங்கள். நாசா விண்வெளிக்கு அனுப்பிய மூன்று பேரில் ஒருவர் செவ்வாய் கிரகத்தின் மிக உயரமான ஒலிம்பஸ் மோன்ஸ் மலைச் சிகரத்தை ஏறுவதற்குச் சென்றவர். இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை விட மூன்று மடங்கு உயரம் கொண்ட சிகரம் அது. 

செவ்வாய் கிரகத்தின் மிக உயரமான எரிமலை. சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களிலும் மிக மிக உயரமான சிகரம் என்றால் அது ஒலிம்பஸ் மோன்ஸ் மட்டும்தான். ஜியாலஜிஸ்ட்களான எங்களுக்குத் தெரியும்... அது நிக்ஸ் ஒலிம்பிகா என்றழைக்கப்படுகிறது. 

ஒரு காலத்தில் அது முழுமையாக ஒரு பனிமலையாக இருந்திருக்க வேண்டும். இரண்டு பிரமாண்ட பள்ளங்கள் உள்ளன. ஆரம்பகால புவியியலாளர்களின்  அவதானிப்புகளை எல்லாம் பொய்யாக்கிய விஷயம்தான் நாசாவினுடைய அந்த விண்வெளி வீரர் அந்த மலைப் பகுதியில் காணாமல் போன விஷயம்.

மதிவதனி இந்திய - அமெரிக்க அரசாங்கங்களின் ஒரு பழைய ஒப்பந்தத்தின்படி ரகசியமாக செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர். அங்கே ஒலிம்பஸ் மோன்ஸ் என்கிற அந்த பிரம்மாண்ட மலைச் சிகரத்தில் ஏற முயன்று காணாமல் போன நாசாவினுடைய விண்வெளி வீரரைத் தேடி 10 ஆண்டுகளுக்கு முன் பயணித்தவர். 

இதை இன்றைக்கு நான் பகிரங்கமாக அறிவிக்கிறேன்.இதனால் வரப்போகும் பின் விளைவுகளை நான் அறிவேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. மதிவதனி குறித்த தகவல்களை நாசா கண்டிப்பாக அறிவிக்க வேண்டும். எத்தனையோ பேர், எத்தனையோ அதிகாரிகள், எத்தனையோ துறைசார்ந்து எவ்வளவோ முயற்சித்தும் என் தோழியைக் காப்பாற்ற என்னால் இதற்கு மேல் முடியவில்லை.

ஒரு சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்ப வேண்டும் என்று கொடுக்கப்பட்ட அழுத்தத்தைப் போலவே நம்முடைய நாட்டின் மலை வீராங்கனை மதிவதனியும் மீட்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்புவோம். ஒலிம்பஸ் மோன்ஸ் மலைச்சிகரம் எங்கள் மதிவதனிக்கு கண்டிப்பாக கட்டுப்பட்டிருக்கும். அந்தச் சாதனையையும் உலகம் அறிய நாசா அறிவிக்க 
வேண்டும். 

மதிவதனி எங்கே..?
மதிவதனிக்காக போராடுவோம். 
மதிவதனி எங்கே..?

ஆயிஷா இரா.நடராசன்