Must Watch



நெய்பர்ஹுட் வாச்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளைக் குவித்து வரும் ஆங்கிலப்படம், ‘நெய்பர்ஹுட் வாச்’. கடுமையான மனச்சிதைவு நோயினால் அவதிப்பட்டு வருகிறார், சைமன். பத்து வருடங்களுக்கு மேலாக மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, சமீபத்தில்தான் வெளியே வந்திருக்கிறார். 

தினசரி வாழ்க்கையே அவருக்குப் பெரும் போராட்டமாக இருக்கிறது. விதவிதமான மாயத்தோற்றங்கள் தோன்றி மேலும் அவரைத் தொல்லைப்படுத்துகிறது. சைமன் சிறுவனாக இருந்தபோது, தந்தை அவரிடம் கொடுமையாக நடந்திருக்கிறார். தவிர, சைமனை சிறுமைப்படுத்தியிருக்கிறார். 

இந்த நிகழ்வுகள் சிறுவன் சைமனின் மனதை வெகுவாகப் பாதித்திருக்கிறது. தந்தை இறந்த பிற்கும் கூட அந்தப் பாதிப்பு தொடர்கிறது. இப்போதும் கூட தன்னைத் தந்தை திட்டுவது போல சைமன் உணர்கிறார். ஓர் இளம் பெண் தாக்கப்பட்டு, கடத்தப்படுவதைப் பார்க்கிறார், சைமன். அவரால் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற முடிவதில்லை. அவரது தந்தையின் சொற்கள் அவரைப் பலவீனமாக உணர வைக்கிறது. 

இருந்தாலும் அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தைச் சொல்கிறார் சைமன். ஆனால், சைமனைக் காவல்துறையினர் நம்புவதில்லை. அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க சைமன் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.இப்படத்தின் இயக்குநர் டங்கன் ஸ்கைலெஸ்.

த 100

ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது, ‘த 100’ எனும் தெலுங்குப்படம். காதலன் சமீருடனான வாக்குவாதத்துக்குப் பிறகு தற்கொலை செய்துகொள்கிறாள் மது பிரியா. 

இன்னொரு பக்கம் ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதிகளில் கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரிப்பது காவல்துறைக்குச் சவாலாக மாறுகிறது. இதைத் தடுப்பதற்காக விக்ராந்த் எனும் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்படுகிறார். 

ஆரம்பகட்ட விசாரணையில் ஆர்த்தி என்ற பெண் விக்ராந்துக்கு அறிமுகமாகிறாள். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் கண்டுபிடிக்கிறார் விக்ராந்த். அதில் சில நகைகள் ஆர்த்திக்குச் சொந்தமானது என்பது தெரிய வருகிறது. இதன் மூலம் அவளுக்கு நடந்த அதிர்ச்சியான சம்பவங்களையும் கண்டுபிடிக்கிறார் விக்ராந்த். 

பிறகு ஒன்றுக்கொன்று சம்பந்தமே இலலாத கொள்ளைச் சம்பவங்கள் ஒரு புள்ளியில் இணைவதையும், இதற்கும் மது பிரியா, ஆர்த்திக்கும் இடையில் உள்ள தொடர்பையும் விக்ராந்த் கண்டறிய, சூடுபிடிக்கிறது திரைக்கதை.வழக்கமான தெலுங்கு மசாலாவாக இல்லாமல், தீவிரமாகச் செல்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் ராகவ் ஓம்கர் சசிதர். 

எ விடோ’ஸ் கேம்

‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளி வரும் ஸ்பானிஷ் மொழிப்படம், ‘ஏ விடோ’ஸ் கேம்’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது. ஆர்த்துரோ என்பவன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறான். 

ஒரு பார்க்கிங்கில் அவனது உடலைக் கைப்பற்றுகின்றனர். இந்தக் கொலையை விசாரிப்பதற்காக களத்தில் இறங்குகிறார் காவல்துறை அதிகாரியான ஈவா. ஆர்த்துரோவின் உடலில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் நிறைய இருப்பதால், ஓர் ஆண்தான் இந்தக் கொலையைச் செய்திருப்பான் என்ற சந்தேகம் வலுக்கிறது. 

ஒருவேளை இந்தக் கொலைக்குப் பின்னணியில் ஆர்த்துரோவின் மனைவியான மரியாவும், அவளது ஆண் நண்பனும் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செல்கிறது. 
திருமணத்துக்கு முன்பே ஆந்திரே என்பவனுடன் தொடர்பில் இருந்திருக்கிறாள் மரியா. அது திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ந்திருக்கிறது. 

இந்த விஷயத்தைத் தெரிந்த பிறகும் கூட மரியாவை மன்னித்து, ஏற்றுக்கொண்டிருக்கிறான் ஆர்த்துரோ. உண்மையில் ஆர்த்துரோவை யார் கொலை செய்தது என்பதற்கான பதிலைத் திரில்லிங்காகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை.திரில்லர் வகைமைப் படப்பிரியர்கள் தவறவிடக்கூடாத படம் இது. இதன் இயக்குநர் கார்லோ செடெஸ்.

சன் ஆஃப் சர்தார் 2

பதிமூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி, வசூலில் சாதனை படைத்த இந்திப்படம், ‘சன் ஆஃப் சர்தார்’. இதன் இரண்டாம் பாகம்தான் இது. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. 
ஜாலியான ஒரு மனிதர், ஜாஸி சிங். 

இவரது மனைவி டிம்பிள் ஸ்காட்லாந்தில் தனியாக வசித்து வருகிறார். ஸ்காட்லாந்துக்குச் செல்ல விசா கிடைக்காமல் பத்து வருடங்களுக்கு மேல் காத்துக்கொண்டிருக்கிறார் ஜாஸி. எப்படியோ அவருக்கு விசா கிடைக்கிறது. மனைவியை நேரில் சந்திக்கப்போகிறோம் என்ற மகிழ்ச்சியில் செல்கிறார். 

ஆனால், அவர் எதிர்பார்த்திராத ஓர் அதிர்ச்சியான சம்பவம் நடக்கிறது. ஆம்; ஜாஸியிடமிருந்து விவாகரத்து கேட்கிறார் டிம்பிள். நிலைகுலைந்து போகிறார் ஜாஸி. இந்தியாவுக்குத் திரும்பாமல் ஸ்காட்லாந்தில் இருந்துகொண்டே, டிம்பிளுடனான உறவைச் சரி செய்யலாம் என்று முடிவு செய்கிறார் ஜாஸி. 

இச்சூழலில் ஜாஸிக்கு உதவ முன் வருகிறாள் ராஃபியா. டிம்பிளுடன் ஜாஸி இணைந்தாரா என்பதை நகைச்சுவையாகச் சொல்லிச் செல்கிறது திரைக்கதை.ஜாலியாக ஒரு படத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப்படம். இதன் இயக்குநர் விஜய் குமார் அரோரா. 

தொகுப்பு:த.சக்திவேல்