உலகின் அதிவேக எலெக்ட்ரிக் கார்!



உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க்கின் நிறுவனமான ‘டெஸ்லா’வின் எலெக்ட்ரிக் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் சீன நிறுவனம், ‘பிஒய்டி’. தோற்றத்தில் கூட இந்த இரண்டு நிறுவனங்களின் கார்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். 
மலிவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து, உலகமெங்கும் விநியோகிக்க வேண்டும் என்பது ‘பிஒய்டி’யின் முக்கிய நோக்கம். சமீபத்தில் ‘யாங்வாங் யூ9 எக்ஸ்ட்ரீம்’ என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் காரைப் பற்றித்தான் ஆட்டோமொபைல் உலகில் ஹாட் டாக்.

அப்படி இந்த எலெக்ட்ரிக் காரில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

உலகிலேயே அதிவேகமாகச் செல்லக்கூடிய எலெக்ட்ரிக் கார் இதுதான். கடந்த வாரம் ஜெர்மனியில் உள்ள ஏடிபி டெஸ்டிங் டிராக்கில் இந்த காரின் வேகத்தை சோதனை செய்து பார்த்தனர். 

சர்வ சாதாரணமாக 480 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த இந்த எலெக்ட்ரிக் கார், அதிகபட்சமாக மணிக்கு 496.22 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்திருக்கிறது. 

இதற்கு முன்பு எந்த எலெக்ட்ரிக் காரும் இந்த வேகத்தில் பாய்ந்ததில்லை. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார்கள் கூட இந்த வேகத்தை எட்டியதில்லை. 

கடைசியாக 2019ம் வருடம் ‘புகாட்டி’யின் ‘சிரோன் சூப்பர் ஸ்போர்ட் 300+’ என்ற கார் மணிக்கு 490 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்ததுதான் சாதனையாக இருந்து வந்தது. 
இதை முறியடித்திருக்கிறது, ‘யாங்வாங் யூ9 எக்ஸ்ட்ரீம்’. இதன் மூலம் மலிவான விலையில் எலெக்ட்ரிக் கார்களை விற்கும் நாடு மட்டுமல்ல, உலகிலேயே அதிவேகமாகச் செல்லும் கார்களையும் விற்பனை செய்யும் நாடு என்ற பெருமையைத் தன்வசப்படுத்தியுள்ளது சீனா.  

‘யாங்வாங் யூ9 எக்ஸ்ட்ரீம்’ மாடலில் 30 கார்களை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது, ‘பிஒய்டி’. சீனாவில் இந்த காரின் விலை சுமார் ரூ. 2 கோடி.  
ஆசிய சந்தைகளில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடுபிடித்திருக்கிறது. கடந்த வருடம் விற்பனையான கார்களில் 50 சதவீதம் எலெக்ட்ரிக் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

த.சக்திவேல்