கமலின் சாதனையை முறியடித்த 4 வயது குழந்தை!



சமீபத்தில் 71வது தேசிய விருது வழங்கும் விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது மற்றும் ‘ஜவான்’ படத்தில் நடித்ததற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருந்தாலும் கூட, இந்திய சினிமா துறையையே திரும்பிப்பார்க்க வைத்தவர் திரீஷா தோசர்தான். 

‘நால் 2’ என்ற மராத்தி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குழந்தைக் கலைஞர் என்ற தேசிய விருதை வென்றிருக்கிறார் திரீஷா. இத்தனைக்கும் அவரது வயது 4தான். 
இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் தேசிய விருதை வென்றவர் என்ற பெருமையையும் தன்வசமாக்கியிருக்கிறார் திரீஷா. இதற்கு முன்பு அந்தப் பெருமையைத் தன்வசம் வைத்திருந்தவர் கமல்ஹாசன். ‘களத்தூர் கண்ணம்மா’வுக்காக கமல்ஹாசன் தேசிய விருது பெற்றபோது, அவரது வயது 6. 

‘‘உங்களுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள் திரீஷா தோசர். நீங்கள் எனது சாதனையை முறியடித்து விட்டீர்கள். முதல் தேசிய விருதை நான் வாங்கும்போது எனக்கு வயது 6. 
இன்னும் நீங்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது மேடம்.

 உங்களது திறமையைப் பயன்படுத்தி தொடர்ந்து பணியாற்றுங்கள். உங்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எனது பாராட்டுகள்...’’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்ததோடு, வீடியோ காலில் அழைத்து திரீஷா தோசருடன் கமல்ஹாசன் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

யார் இந்த திரீஷா தோசர்?

மும்பையில் பிறந்தவர், திரீஷா. மராத்திய திரைத்துறையின் பிரபல இயக்குநரான நாகராஜ் மஞ்சுளே தயாரிப்பில், சுதாகர் ரெட்டி யாக்கண்டி இயக்கத்தில் வெளியான ‘நால் 2’ படத்தில் சிமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது இயல்பான நடிப்பு படம் பார்த்தவர்களை அப்படியே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் படத்தில் நடிக்கும்போது திரீஷாவுக்கு வயது 3தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

மட்டுமல்ல, ‘பெட் புரான்’, ‘மன்வட் மர்டர்ஸ்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் திரீஷா நடித்திருக்கிறார். தேசிய விருது கிடைக்கும் வரை, கவனிக்கப்படாத குழந்தை நட்சத்திரமாகத்தான் இருந்தார். இப்போது திரீஷாவுக்குப் பட வாய்ப்புகள் மட்டுமல்லாமல், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன; இந்திய அளவிலும் பிரபலமாகிவிட்டார்.

த.சக்திவேல்