கடலும் கடல்சார்ந்த தெய்வ வழிபாடும்தான் இந்தப் படம்!



‘ஹோம்பலெ ஃபிலிம் ஸ்’ தயாரிப்பில் நடிகர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டியின் பிரம்மாண்ட படைப்பான ‘காந்தாரா சாப்டர் 1’ ரிலீஸ்.  2022ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தின் கதைக்கு முந்தைய கதையாக (Prequel) வெளியாகஇருக்கிறது இந்த சாப்டர் 1. 
‘காந்தாரா சாப்டர் 1’ டூ.1,000 கோடி வசூலிக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் முதல் பாகம் ரூ.400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து நாட்டின் பிரதமர் வரை அதிர்வலைகளை உருவாக்கியது. இதோ இப்போது அதன் முந்தைய பூர்வீகக் கதை.

தங்கப்பூவின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில் அதற்குள் ‘காந்தாரா’ காதலியாக, கனகவதியாக நம் இதயங்களைக் களவாட இருக்கிறார் ருக்மிணி வசந்த். 
‘‘இருங்க இருங்க நானே சொல்றேன்...’’ கேட்பதற்குள் உற்சாகமும் பெருமையும், ஒருசேர பேசுகிறார் ருக்மிணி. 

‘‘காடுபெட்டு சிவா, காந்தாராவின் மகன். 2022ம் வருஷம் வந்த கதை அதுதான். இப்ப இந்த சாப்டர் ஒன்று கதைதான் காந்தாரா கதை. இதுல ரிஷப் சார் பெயர் பெர்மி. ஏன் எப்படி என்பதையெல்லாம் படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. கனவு நினைவாகி இருக்கு. ‘சப்த சாகரடாச்சே எல்லோ’  படம் கொடுத்த அங்கீகாரம் மூலமா ‘காந்தாரா’ வாய்ப்பு கிடைச்சது. 

அந்தப் படத்தில் இருந்தே ரிஷப் செட்டி சாருடைய நட்பு எனக்கு இருக்கு. அவரும் ரோஹித் ஷெட்டியும் அவ்வளவு நெருக்கமான நண்பர்கள். ‘சைட் ஏ, பி’ ரெண்டு படத்தின் பிரீமியரிலும் சார் வந்திருந்தார். 

அப்படிதான் ‘காந்தாரா’ வாய்ப்பு வந்தது. அவருடைய படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். ஆனால், அந்த பிராண்ட் அழுத்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கு. பயமா இருக்கு...’’ கண்களை சிமிட்டும் ருக்மிணி, ரிஷப் ஷெட்டியுடன்  பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

‘‘நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. ஒரு சில இடங்களில் நான் தடுமாறினப்ப அவர் ஒரு டீச்சர் மாதிரி சொல்லிக் கொடுத்தார். ஆனால், எக்ஸ்பீரியன்ஸ் வேலையில் மட்டும்தான் தெரியும். குணத்தில் தெரியாது. 

பயங்கர டெடிகேஷனா வேலை செய்வார். என்னை ஒரு புது நடிகை மாதிரியே அவர் நடத்தலை. முதல் பாகத்தில் வேலை செய்த அத்தனைக் குழுவும் அப்படியே இந்தப் படத்தில் இருந்ததால், எவ்வித அழுத்தமும் இல்லை. அதேபோல் படப்பிடிப்பு லொகேஷன்களும் சினிமாத்துறைக்கு ரொம்ப தூரமா இருந்துச்சு. 

மங்களூரில் இருந்து சுமார் 4 மணி நேரம் பயணிச்சாதான் குண்டப்பூர் ஏரியாவுக்கு வர முடியும். அங்க இருந்த உள்ளூர் மக்கள், ‘ஓஹோ! ‘காந்தாரா’ ஷூட்டிங்கா’னு கேட்டுட்டு கடந்திடுவாங்க...’’ புன்னகைக்கும் ருக்மிணி, கத்திச்சண்டை, ஆக்‌ஷன் குறித்து விவரித்தார். ‘‘அந்த வாள் கூர்மையா மட்டும்தான் இருக்காது. மத்தபடி உண்மையான வாள் மாதிரியே அதே கனம். நிறைய பயிற்சியும் தேவைப்பட்டது. 

மற்ற படங்கள் மாதிரி ஹீரோயினாக, டூயட் பாடினோம், நான்கு காட்சிகளில் அழுது காதல் செய்து கிளம்பினோம் என இல்லாமல், ஆக்‌ஷன், அதிரடி, வாள் சண்டை என எனக்கு நிறையவே வேலை இருந்துச்சு. என்னுடைய படங்களிலேயே இந்தப் படம் ரொம்ப முக்கியமான படமாகவும் மைல் ஸ்டோன் ஆகவும் இருக்கும். 

முதல் பாகம் முழுக்க குலதெய்வ வழிபாடு... அதைச் சார்ந்த கதையாக இருந்தது. இந்தக் கதை முழுமையாக கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையையும் இன்னும் ஆழமா பிரதிபலிக்கும். 
அதிலே ஒரு வீரன்... அங்கே நடக்கும் கதைதான் இந்த ‘காந்தாரா சாப்டர் 1’. ஜெயராம் சார்ல ஆரம்பிச்சு பல புது கேரக்டர்களும் படத்தில் இருக்காங்க. நிறைய கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஒருசேர நானும் காத்திருக்கேன். இதோ படம் ரிலீஸ் ஆகிடுச்சு. நீங்களும் தியேட்டரில் என்ஜாய் பண்ணுங்க...’’ கண்களைச் சிமிட்டுகிறார் ருக்மிணி.

ஷாலினி நியூட்டன்