மலையாள வெஞ்ஞாரமூடு இப்ப தமிழ் சினிமாவின் அடையாளம்!
‘‘‘வெஞ்ஞாரமூடு’ - இது ஊர் பேரு. எப்படி தமிழ் சினிமாவுக்கு வருகிற கலைஞர்கள் பெரும்பாலும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருவாங்களோ அந்த மாதிரி கேரள சினிமாவில் நிறைய கலைஞர்கள் ‘வெஞ்ஞாரமூடு’ பகுதியில இருந்துதான் வருவாங்க. உதாரணத்துக்கு சுராஜ் வெஞ்ஞாரமூடு சார். ரொம்ப பழமையான கூத்துக் கலைகளும், நாடகக் கலைகளும் உருவான இடம். நானும் அங்கே பிறந்தவன்தான்...’’ பெருமையாகச் சொல்கிறார் அருண் வெஞ்ஞாரமூடு.
 ‘சுழல் 1 & 2’, ‘மாவீரன்’, ‘மதராஸி’, ‘கருப்பு’, ‘மார்ஷல்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் மற்றும் ஏராளமான மலையாளப் படங்களின் ஆர்ட் டைரக்டர் இவர்தான். சினிமாவில் பயணம்... எங்கே அது கலை இயக்கத்துக்கு மாறியது?
 சமீபத்தில்தான் டைரக்டர் ஆஃப் போட்டோகிராபி, டைரக்டர் ஆஃப் எடிட்டிங், டைரக்டர் ஆஃப் ஸ்டண்ட்... இப்படி சினிமா தொழில்நுட்பத்துக்கு இயக்கம் என்கிற பதவி வந்தது. ஆனால், முன்பிருந்தே இயக்குநர் மற்றும் கலை இயக்கம் இந்த ரெண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மட்டுமே இயக்குநர் என்கிற அடையாளம் இருக்கும்.
 அதனால் ஒன்று பட இயக்குநர் அல்லது கலை இயக்கம் என முடிவெடுத்துதான் சினிமாவில் பயணிக்க ஆரம்பிச்சேன். காரணம், எப்படி இயக்குநருக்கு கீழே ஒரு பெரிய குழு வேலை செய்தாகணுமோ, அதேபோல ஒரு கலை இயக்குநருக்கு கீழேயும் குறைந்தபட்சம் 10 பேராவது வேலை செய்தாகணும். அப்படி ஒரு கேப்டன் ஆஃப் த ஷிப் வேலை சினிமாவில் வேணும் என்பதுதான் என் ஆசை; நோக்கம்.
சினிமா பயணம் எங்கே எப்படி ஆரம்பித்தது?
பள்ளிப்படிப்பு முடித்தபிறகு சினிமாதான் என முடிவெடுத்தேன். துவக்கத்தில் சீரியல்களில் துணை இயக்குநராக வேலை செய்துட்டு இருந்தேன். பிறகு அசோசியேட் இயக்குநர், இரட்டை இயக்குநர்களில் ஒருவர் என பயணிக்கத் துவங்கினேன்.என் குடும்பத்தில் நான்தான் முதல் சினிமா கலைஞர்.
அதனால் எங்கே எப்படி ஆரம்பிக்கணும் என்பது குறித்த தெளிவில்லை. ஆனால், சினிமா கனவு கையைப் பிடித்து என்னை அழைத்துச் சென்றது.தொடர்ந்து அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டராக ஒருசில படங்களில் வேலை செய்தேன். இதோ இப்போது இங்கே! முதல் படம் ‘அலமாரா’... தலைப்பே உங்களுக்கு சவாலாக இருந்திருக்குமே?
சரியாச் சொன்னீங்க. ‘அலமாரா’ தலைப்பிற்காகவே முதலில் போஸ்டர் டிசைனோ அல்லது ப்ரொமோ டிசைனிங்கோ ஆரம்பிக்கலை. ஆர்ட் டைரக்ஷன்தான் முதலில் ஆரம்பிச்சோம்.
காரணம், நான் செய்து கொடுக்கும் அலமாரியை அடிப்படையாக வைத்துதான் தலைப்பு டிசைனே உருவாக்கணும்.
ஒரு பையனுக்கு சீதனமாக வருகிற மர அலமாரி, அதனால் உண்டாகும் சிக்கல்கள்தான் கதை. முதல் பட அறிமுக ஆர்ட் டைரக்டருக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சது பெரிய அதிர்ஷ்டம்தானே? ஒரே அலமாரி... ஆனால், ஒண்ணு நான்கைந்து பேர் சேர்ந்து தூக்குகிற மாதிரி கனமா இருக்கணும், இன்னொரு அலமாரி காப்பியாக அப்படியே ஒரே ஆள் ஒற்றை கையில் தூக்குகிற மாதிரி இருக்கணும். இப்படி இரண்டு அலமாரிகள் செய்யணும். இப்படி கதை முழுக்க நிறைய ஆர்ட் டைரக்ஷன் சவால்கள் இருந்த படம் அது. தொடர்ந்து ‘ஜூன்’, ‘அப்பு இன் சர்ச் ஆஃப் ட்ரூத்’, ‘சுள்ளு’... இப்படி 15க்கும் மேற்பட்ட மலையாளப் படங்கள்ல ஒர்க் செய்தேன். என்னுடைய ‘திருச்சூர் பூரம்’ படம் பார்த்துட்டுதான் திலீப் சுப்பராயன் மாஸ்டர், ‘தமிழில் வேலை செய்ய விருப்பமா’ எனக் கேட்டார். அவர் கேட்ட அந்த வார்த்தைதான் இன்னைக்கு என்னை ‘மார்ஷல்’ வரையிலும் கூட்டிட்டு வந்திருக்கு.
இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி, ‘சுழல் 1, 2’ கொடுத்தாங்க. மயான கொள்ளை பூஜை எல்லாம் எனக்கு பழக்கமே கிடையாது. ஆனால், என்னை நம்பி அப்படி ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. அதற்காகவே நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்தது. தொடர்ந்து ‘வதந்தி’... அதில் ஆங்கிலோ இந்தியன் வாழ்வியல், இன்னொரு புறம் கிரைம் என நகரும் கதைக்களத்தில் பயணிக்க வேண்டி இருந்தது.
அதைத்தொடர்ந்து எனக்கு வந்த படம்தான் ‘மாவீரன்’. அந்த முழு அபார்ட்மெண்ட், ஒரு ஹவுசிங் போர்டு ப்ராஜெக்டை அப்படியே எடுத்து அதன் ஒரிஜினல் வெர்ஷனை முழுமையாக பேட்ச் ஒர்க் செய்து மாத்திட்டோம். காரணம் அது கவர்மெண்ட் ப்ராஜெக்ட். அதில் பிரச்னை இருக்கற மாதிரி காட்ட முடியாது. அதனால் அதன் முழு அடையாளத்தையே மாற்றி டிசைன் செய்தோம்.
ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்..?
அவருடைய ரசிகன் நான். ‘ரமணா’ படம் இப்பப் பார்த்தாலும் புதுசுதான். அவருடைய விஷனில் வேலை செய்யும் போது எனக்கு ஆர்ட் டைரக்ஷனில் அட்வான்ஸ் கோர்ஸ் படிச்ச மாதிரி இருந்தது. ஒரு பழைய பில்டிங்கை முழுமையாக உள்பக்கமா செட்டு போட்டு மாற்றினோம். ஒரு பக்கம் போலீஸ் அறை மாதிரி இருக்கணும், இன்னொரு புறம் ஹாஸ்பிடல் வார்டு இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ரூம் இருக்கணும்.
அதிலும் வித்யூத் ஜம்வால் சண்டை போடும் போது வருகிற சுவர், தரை உட்பட ஒரு ப்ளூ டைல்ஸ் மாதிரியான லுக் இருக்கணும். இப்படி நிறைய சவால் அந்த படத்தில் இருந்தது. ‘அனிமல் இன்ஸ்டிங்க்ட்’ என சொல்லிட்டு சிவகார்த்திகேயன் சார், வித்யூத் ஜம்வால் இருக்கும் அறைகிட்டே போய் திடீரென நிற்பது போல் ஒரு காட்சி வரும். அது படத்திற்கு ரொம்ப முக்கியமான ஒரு காட்சி.
அந்தக் கண்ணாடியை மட்டும் ஹைதராபாத்திலிருந்து வரவழைத்தோம். அது Fog glass. பாக்குறதுக்கு புகை / பனி படிஞ்ச மாதிரி இருக்கும். ஆனால், இரண்டு விதமா அந்த கண்ணாடியை பயன்படுத்த முடியும்.
கொஞ்சம் அளவு மிஸ் ஆனாலும் பல லட்சம் வீணாகிடும். சரியா அளவெடுத்து அனுப்பினால்தான் பட்ஜெட் கையை கடிக்காது. ‘ஏழாம் அறிவு’ படத்தில் அவர் காட்டிய லேப் பிரமிப்பா இருந்துச்சு. அவர் கூட வேலை செய்வேன்னு கனவில் கூட நினைக்கலை. ‘கருப்பு’, ‘மார்ஷல்’ எப்படி உருவாகிக் கொண்டிருக்கிறது?
ரெண்டு படங்களும் ரொம்ப பிரமாண்டமா உருவாகிக்கிட்டு இருக்கு. எனக்கு மிகப்பெரிய சவாலான படம். குறிப்பா ‘கருப்பு’ படத்தில் ஒரு மிகப்பெரிய கருப்பசாமி திரு
விழாவையே செட் போட்டிருக்கோம். எப்படி ‘சுழல்’ சீரீஸ்ல மயான கொள்ளை திருவிழா கிராண்டா இருந்துச்சோ, அதைவிட பல மடங்கு கிராண்டா இந்த கருப்பசாமி திருவிழா இருக்கும்.
அதற்காக உண்மையான கருப்பசாமி திருவிழாக்களை கூட நேரில் போய் பார்த்துட்டு வந்தேன். ‘மார்ஷல்’ படம் கடல் சார்ந்த ஒரு பீரியட் படம். அந்தப் படமும் ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்க்கு மிகப்பெரிய சவாலாதான் இருக்கு.
கலை இயக்கம்..?
ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முதல் புள்ளியே அதுதான். இயக்குநர், ஒளிப்பதிவாளர், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் இவங்க எல்லாரும் ஒரு செட்டுக்கு வர்றதுக்கு முன்னாடி அந்தக் கனவுத் தொழிற்சாலையை உருவாக்குவது ஆர்ட் டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்தான். ஒரு கதையை நம்பகத்தன்மையுடன் சொல்றதுக்கு ஆர்ட் டிபார்ட்மெண்ட் ரொம்ப முக்கியம்.
ஆனால், அதை ஒரு சாதாரண தொழில் நுட்பமா எல்லோரும் கடந்து போறோம். அதற்கான கலைஞர்கள் ரொம்ப குறைவாதான் இருக்காங்க. சினிமா மேலே ஆர்வம் இருக்கும் இளைஞர்கள், ஆர்ட் டைரக்ஷனை பாடமாக எடுத்துக் கூட படிக்கலாம்.
இன்னைக்கு நிறைய வாய்ப்புகளும் உருவாகியிருக்கு. காரணம், ஒரு 30 செகண்ட் விளம்பர வீடியோ உருவாக்கத்துக்குக் கூட ஆர்ட் டைரக்ஷன் அவசியம்.
ஷாலினி நியூட்டன்
|