வாராரு வாராரு கருப்பரு வாராரு...
2. இராமாயணமும் கருப்பண்ணசாமியும்
அங்கு தியானத்தில் இருக்கும்போதுதான் வால்மீகி மகரிஷிக்கு அந்த எண்ணம் தோன்றியது.ஸ்ரீராமபிரானின் அருமை பெருமைகளை உலகுக்கு அறிவிக்க வேண்டும்.
பேராசையல்ல. வெறும் ஆசையும் அல்ல. எதுவுமல்ல. தோன்றியது யோசனையும் அல்ல. விழுந்தது விதை. விதைத்தது பரம்பொருள். விருட்சமாக வளர நிலத்தை தேர்வு செய்தது இறைவனே. ஆக ஸ்ரீராமரின் வாழ்வை சொல்லப் போவதும் எழுதப் போவதும் நானல்ல. அந்த ஸ்ரீராமரேதான். என் கரங்களாகவும் என் சொற்களாகவும் இருக்கப் போவது அவரது கைகளும் வார்த்தைகளும்தான்.
 இந்த அணு அசைவது அவனது அனுக்ரகத்தால் என்னும்போது பாடப் போவதும் அவன்தானே?
பாடத் தொடங்கினார். தன் குடிலில் அமர்ந்தபடி இராம காவியத்தை எழுதத் தொடங்கினார்.ஆரம்பமாக அமைந்தது... அல்ல அல்ல, அமைக்கப்பட்டது அதே இடம்தான். எந்த இடத்தில் தியானத்தில் இருக்கும்போது வால்மீகி மகரிஷிக்கு இராம காவியம் இயற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றியதோ, அந்த எண்ணத்தை செயல்படுத்தும்போது அதே இடமே அக்காவியத்தின் ஆரம்பமாகவும் அமைந்துவிட்டது. ஆம். வால்மீகி எழுதிய இராமாயணம் இந்த இடத்திலிருந்துதான் தொடங்குகிறது.தாமஸா வனம்.
மாபெரும் ஜீவநதியான கங்கையின் கிளை நதிகளில் ஒன்று தாமஸா நதி. இந்த நதியின் அருகில் இருக்கும் வனமே, தாமஸா வனம். வால்மீகியின் இருப்பிடம்.
இங்கேதான் இராமாயணம் ஆரம்பமாகிறது. இங்கேயேதான் இராமாயணம் முடியவும் செய்கிறது. வால்மீகி மகரிஷி இராம காவியம் பாட ஆரம்பித்ததும் இங்கேதான்.
ராமனால் கை விடப்பட்டதும் சீதை வந்து சேர்ந்ததும் இங்கேயேதான்.‘‘அன்னையே...’’ லட்சுமணனின் குரல் தழுதழுத்தது.நிமிர்ந்து தன் மைத்துனரைப் பார்த்தார் சீதா தேவி.லட்சுமணனுக்கு வார்த்தைகள் வரவில்லை. கலங்கிய கண்களுடன் தலைகுனிந்தான். இடம் வந்துவிட்டது. சீதாப் பிராட்டிக்கு புரிந்தது. இறங்க வேண்டும். இதற்குமேல் தேர் செல்லாது. லட்சுமணன் செலுத்த மாட்டான். இங்கு இறக்கும்படிதான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி
கட்டளையிட்டிருக்கிறார். அண்ணனின் வாக்கு தெய்வ வாக்கு. தம்பி மீற மாட்டான்.
நிறைமாதக் கர்ப்பிணியான சீதாப் பிராட்டி மெல்ல தேரில் இருந்து இறங்கினார். கைகொடுத்து அவரை இறக்க வேண்டும் என லட்சுமணனின் மனம் உந்தியது. ஆனாலும் அசையவில்லை. அசையக் கூடாது. அண்ணன் வாக்கு. வேத வாக்கு. மீற முடியாது; கூடாது. தாமஸா நதிக் கரையில் சீதையின் பாதங்கள் படிந்தன. அழுத்தமாக ஊன்றி நின்றார்.
‘‘அன்னையே...’’என்ன என்பதுபோல் லட்சுமணனை ஏறிட்டார்.‘‘அண்ணன் காரணமில்லாமல் எதையும் செய்யமாட்டார்...’’‘‘என் பதியை எனக்குத் தெரியும்... சென்று வாருங்கள் மைத்துனரே... ஊர்மிளையை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்...’’லட்சுமணனின் உதடுகள் துடித்தன.தலையசைத்துவிட்டு சீதாப் பிராட்டி நடக்க ஆரம்பித்தார். வயிறு கனத்தது. மனமும்தான். தேர்ச் சக்கரங்கள் உருண்டோடுவது செவியை அடைந்தது.
அயோத்திக்கு லட்சுமணன் புறப்பட்டுவிட்டான். சீதா தேவியின் கண்கள் தாமஸா நதியை அளந்தன. ஜனகனின் மகளாக அரண்மனையில் ஓடியாடியதும்; விஸ்வாமித்திர மகரிஷியுடன் ஸ்ரீராமர் மிதிலை மாநகரத்துக்கு வந்ததும்; தன்னை திருமணம் செய்து கொண்டதும்; தன் தமக்கை ஊர்மிளை, லட்சுமணனுக்கு மனைவியானதும்; அயோத்திக்கு தம்பதிகளாக வந்து சேர்ந்ததும்; ராமருக்கு பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடந்ததும்...
கைகேயிக்கு கொடுத்த வரம் காரணமாக வேறு வழியின்றி தசரத மகாராஜா பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்லும்படி ராமருக்கு கட்டளையிட்டதும்; கணவருடன் சேர்ந்து, தானும்... அண்ணனுக்குத் துணையாக லட்சுமணனும் வனவாசம் ஏற்றதும்; ராவணன் தன்னைக் கவர்ந்து சென்றதும்; அசோகவனத்தில் சிறை வைத்ததும்; ராமர் தன்னை மீட்டதும்; வனவாசம் முடிந்து மீண்டும் அயோத்தி திரும்பியதும்; முப்பத்து முக்கோடி தேவர்களின் ஆசியுடன் பட்டாபிஷேகம் நடைபெற்றதும்...
காட்சிகளாக நகர்ந்தன. குறையொன்றுமில்லை. ராம ராஜ்ஜியம் அல்லவா? மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். தானும்தான். அதன் அடையாளம்தானே இந்த நிறைந்த வயிறு. ஆனால், இதுவேதானே தன்னை இந்த தாமஸா நதிக்கரையிலும் நிறுத்தியிருக்கிறது.
‘‘நமது மாமன்னர் ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி தந்தையாகப் போகிறார் என்பது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், மகாராணியார் அசோகவனத்தில் சில திங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அப்பொழுது அவர் கர்ப்பம் தரித்திருக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்..?’’அயோத்தி மக்கள் அனைவரும் இப்படிப் பேசினார்களா என்று தெரியாது. ஆனால், ஒரு குடிமகனின் நாவிலிருந்து இந்தச் சொற்கள் உதிர்ந்தன. ஸ்ரீராமபிரானின் செவியையும் அடைந்தன. மன்னருக்கு அழகு மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவது. ஸ்ரீராமர் வணங்கினார். சீதாப் பிராட்டியை நாட்டை விட்டே வெளியேற்றிவிட்டார்.குருவின் வாக்குக்குக் கட்டுப்பட்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டு தன்னை மணம் முடித்தார்... தந்தையின் வாக்குக்குக் கட்டுப்பட்டு வனவாசம் சென்றார்... கணவருக்குரிய தர்மத்துடன் மனைவியைக் காப்பாற்றினார்... மன்னருக்குரிய தர்மத்துடன் மக்களின் தீர்ப்புக்குத் தலைவணங்கியிருக்கிறார்...
ஆனால், தன் குழந்தைக்கு தகப்பனாக இருந்து வளர்க்க வேண்டியதும் தர்மம்தானே..?
நினைத்த கணம் சீதாப் பிராட்டிக்கு மயக்கம் வந்தது. சரிந்தார்.‘‘ஒன்றுமில்லை குழந்தாய்... நீ பூரண நலத்துடன் இருக்கிறாய்...’’ஒலித்த குரல் சீதா தேவியை விழிப்படைய வைத்தது. குடில் ஒன்றில், தான் படுத்திருப்பது புரிந்தது. விழிகளைச் சுழல விட்டார்.தேஜஸுடன் முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
மகரிஷி வால்மீகி அல்லவா... அவர் முன்னால், தான் படுத்திருப்பதா..?
பதற்றத்துடன் சீதாப் பிராட்டி எழுந்துகொள்ள முயற்சித்தார்.‘‘சற்று நேரம் படுத்திரு குழந்தாய்... ஒரு நாழிகை சென்றதும் எழுந்து உணவருந்தலாம்...’’ வால்மீகி புன்னகைத்தார். அவரது சீடப் பெண் குடுவையிலிருந்த நீரை சீதாப் பிராட்டிக்கு புகட்டினாள்.தாமஸா வனத்தில் இருக்கும் வால்மீகி மகரிஷியின் பர்ணசாலையில், தான் இருப்பதை உணர்ந்ததும் அதுவரை இருந்த அழுத்தங்கள் அனைத்தும் விலகியதுபோல் சீதா தேவிக்கு இருந்தது.
இப்படியொரு பாதுகாப்பு, தனக்குக் கிடைக்கவும் அந்த ஸ்ரீராமபிரான்தானே காரணம்?
ராமரைத் துதித்தபடி கண்களை மூடினார்.வால்மீகி மகரிஷி தியானத்தில் இருக்கிறார். அதிகபட்சம் அரை நாழிகை. பிறகு பூஜை செய்யத் தொடங்கிவிடுவார். அபிஷேகத்துக்கு நீர் வேண்டும்.
குளித்து முடித்திருந்த சீதாப் பிராட்டி, தாமஸா நதியிலிருந்து நீரை எடுத்து வர புறப்பட்டார். சுகப் பிரசவம். சுபயோக சுபதினத்தில் குசன் ஜனனம். தந்தைக்குத் தந்தையாக இருந்து வால்மீகி மகரிஷிதான் பார்த்துக் கொள்கிறார்.
குசன் ஜனித்த ஒரு திங்களுக்குப் பிறகு வால்மீகி மகரிஷி அன்றாடம் செய்யும் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கரியத்தையும், தானே செய்யத் தொடங்கினார் சீதாப் பிராட்டி. வால்மீகியும் அதைத் தடுக்கவில்லை. இதோ இன்றும் அபிஷேகத்துக்குத் தேவையான நீரை நதியிலிருந்து கொண்டுவர சீதாப் பிராட்டி புறப்பட்டார். தூளியில் குசன் உறங்கிக் கொண்டிருக்கிறான்...தியானம் முடிந்ததும் கண்களைத் திறந்த வால்மீகியின் பார்வை, வெறுமையான தூளியில் படிந்தது.தூக்கிவாரிப் போட்டது.
குசன் எங்கே?
சீதைக்கு இருக்கும் ஒரே பிடிப்பு குசன் மட்டும்தானே? தவழும் நிலையில் இருக்கும் குசன் எங்கு சென்றிருப்பான்?
பர்ணசாலை முழுக்க தேடினார். வெளியே வந்தார். அலசினார். எங்கும் குசன் தென்படவில்லை. தவழ்ந்து சென்றிருப்பதற்கான அறிகுறியும் தரையில் இல்லை.
‘ராமா, இதென்ன சோதனை? மகன் இல்லாவிட்டால் சீதை நொறுங்கி விடுவாளே...’ வால்மீகி மகரிஷி கண்களை மூடினார்.
ஸ்ரீராமபிரானை பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.‘‘தந்தையே... தாமதமாகிவிட்டதா?’’ தலையில் குடமும் இடுப்பில் குசனும் இருக்க வேகமாக சீதாப் பிராட்டி பர்ணசாலைக்குள் நுழைந்தார்.
‘‘குசன் உறங்கிக் கொண்டிருந்தான். ஒருவேளை எழுந்து அழுதால் உங்கள் தியானம் தடைபட்டு விடுமே... அதனால்தான் அவனையும் தூக்கிக் கொண்டு தாமஸா நதிக்குச் சென்றேன்...’’
சொன்ன சீதாப் பிராட்டி அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.குசனைப் போலவே அச்சு அசலாக இன்னொரு குழந்தை அவரது காலைகளைப் பிடித்தபடி பொக்கை வாயில் புன்னகைத்தது.
‘‘குசனைக் காணவில்லையே எனப் பதறிவிட்டேன் குழந்தாய்... இந்த ஏமாற்றத்தை உன்னால் தாங்கமுடியாது என நான்தான் தர்ப்பையினால் குசனைப் போன்றே தோற்றமுள்ள குழந்தையை உருவாக்கினேன்... சரி... குசன் வந்துவிட்டான் அல்லவா? இந்தக் குழந்தையை, நானே மறைய வைத்துவிடுகிறேன்...’’‘‘வேண்டாம் தந்தையே... இவனும் என் மகன்தான்...
குசனுடன் சேர்ந்து இவனையும் வளர்த்து ஆளாக்குகிறேன்... இவனுக்கு என்ன பெயர் வைக்கலாம்..?’’‘‘தர்ப்பையில் இருந்து வந்தவன் என்பதால் ‘லவன்’...’’ மெல்ல மந்திரம்போல் உச்சரித்தார் வால்மீகி மகரிஷி.லவனையும் குசனையும் அள்ளி அணைத்தார் சீதாப் பிராட்டி.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குள் அடைக்கலமான நிம்மதி பிறந்தது.‘‘ஒரு குழந்தை மட்டுமே நமக்குப் பிறந்ததாக அறிந்தேன் சீதா... இவர்கள் இருவரில் யார் நம் மகன்?’’ அழுத்தமாகக் கேட்டார் ஸ்ரீராமர்.சீதைக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, அஸ்வமேத யாகம் செய்ய முற்பட்தும் அதன் ஓர் அங்கமாக புரவியை ஓட விட்டதும், தாமஸா வனத்துக்கு வந்த அப்புரவியை லவனும் குசனும் மரத்தில் கட்டி வைத்ததும், அதைத் தடுக்க வந்த அயோத்தி படைகளை இரு சிறுவர்களும் எதிர்த்து சதிராடியதும், இறுதியில் ஸ்ரீராமரே போருக்கு வந்ததும், ஸ்ரீராமரை மனதுக்குள் வணங்கியபடியே அவரை லவனும் குசனும் எதிர்த்ததும் சீதாப் பிராட்டி நினைத்துக் கூடப் பார்க்காத சம்பவங்கள். அனைத்தும் அரங்கேறிவிட்டன. இதோ இப்பொழுது இக்கேள்வியும் வந்துவிட்டது. என்ன பதில் சொல்ல? ‘அம்மா... அம்மா...’ என தன்னைச் சுற்றிச் சுற்றி வரும் லவனை எப்படி ‘நம் மகனில்லை’ என்று சொல்ல?
சீதாப் பிராட்டி மவுனமாகத் தலைகுனிய, வால்மீகி மகரிஷி அனைத்தையும் சொன்னார். கேட்ட ஸ்ரீராமர் நிமிர்ந்து லவனையும் குசனையும் பார்த்தார். சுற்றிலுமிருந்த அயோத்தி மக்கள் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது.
‘‘உங்கள் தாய் சீதைதானே? அவள் எப்படி மக்கள் முன் தீக் குளித்தாரோ அப்படி லவனும் குசனும் தீக்குள் இறங்கட்டும்...’’தந்தையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு லவனும் குசனும் தீக்குள் இறங்கினார்கள். குசன் அப்படியே வெளியே வந்தான். மாறாக லவன், தீயிலிருந்து வெளிப்பட்டபோது அவனது உடல் கருத்திருந்தது.
‘‘குசன் உங்களுடன் அயோத்திக்கு வரட்டும் தந்தையே... உங்களுக்குப் பிறகு அவன் ஆட்சி செய்யட்டும். நான் இந்த தாமஸா வனத்தில் இருந்தபடி அயோத்தியைக் காவல் காக்கிறேன்...’’ லவனின் குரல் ஓங்கி ஒலித்தது.இந்த லவனே கருப்பண்ணசாமி.
கருப்பரின் பிறப்புக்காகவே சீதையை நிறைமாத கர்ப்பிணியாக தாமஸா வனத்துக்கு ஸ்ரீராமர் அனுப்பினார் என்பது நம்பிக்கை.ஒரு சிலர், லவனல்ல... தர்ப்பையில் இருந்து தோன்றியது குசன்தான் என்கிறார்கள். லவனோ குசனோ... யாரோ ஒருவர். இருக்கட்டும். நம் கருப்பர் இப்படித்தான் தோன்றினாரா..? (கருப்பர் வருவார்...)
- கே.என்.சிவராமன்
|