இந்தியாவின் முதல் பாட்டிகளுக்கான பள்ளி!
இந்தியாவில் சுமார் 30 கோடிப்பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது, இந்திய மக்கள் தொகையில் 88 சதவீத ஆண்களுக்கும், 81 சதவீத பெண்களுக்கும்தான் எழுதப் படிககத் தெரியும். தவிர, பள்ளிக்குச் சென்று பாடம் படிக்க வேண்டும் என்று கனவுகள் இருந்தாலுமே கூட, குடும்பச்சூழல் காரணமாகப் பள்ளிக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்காத பெண்களின் எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் பல பெண்களின் குழந்தைப் பருவ கனவுகளை நிஜமாக்கி வருகிறது, ‘பாட்டிகளுக்கான பள்ளி’. இந்தியாவின் முதல் பாட்டிகளுக்கான பள்ளியும் இதுவே.  அதென்ன பாட்டிகளுக்கான பள்ளி?
எழுதவும், படிக்கவும் தெரியாத பாட்டிகளுக்காக பிரத்யேகமாக ‘ஆஜிபைஜி சாலா’ எனும் பாட்டிகளுக்கான பள்ளியை உருவாக்கியிருக்கிறார், யோகேந்திர பாங்கர் என்கிற ஆசிரியர். இந்தியாவின் பாட்டிகளுக்கான ஒரே பள்ளியும் ‘ஆஜிபைஜி சாலா’தான். கடந்த 2016ம் வருடம், ‘த மோதிராம் தலால் அறக்கட்டளை’யின் உதவியுடன், மகாராஷ்டிராவின் தானே நகரில் அமைந்திருக்கும் பங்கனே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் வீட்டில் இந்தப்பள்ளி தொடங்கப்பட்டது.
 ஆரம்ப நாட்களில் பள்ளியில் சேர்ந்து பாடம் படிக்க ஒரு சில பாட்டிகள் மட்டுமே ஆர்வம் காட்டினார்கள். பலருக்கு ஆர்வம் இருந்தாலும், தயக்கத்தின் காரணமாக சேரவில்லை. பள்ளிக்குள் பாடம் படித்த பாட்டிகளை விட, வெளியே இருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்த்த பாட்டிகளின் எண்ணிக்கை ஏராளம். நாளடைவில் 60 வயதுக்கும் மேலான பல பாட்டிகள் இந்தப்பள்ளியை நோக்கி வர ஆரம்பித்தனர்.
இப்போது 60, 70, 80, 90 என பலதரப்பட்ட வயதுகொண்ட இருபத்தைந்து பாட்டிகளுக்கு மேல் படிக்கின்றனர். தினமும் இரண்டு மணி நேரம்தான் பள்ளி இயங்கும். பிங்க் வண்ண சேலைதான் யூனிபார்ம். பள்ளிக் குழந்தைகளைப் போல புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு பாட்டிகள் பள்ளிக்கு வருகின்றனர்.
இப்பள்ளியில் A,B,C முதல் கணித வாய்ப்பாடு, நர்சரி பாடல்கள் என அடிப்படைக் கல்வியைக் கற்றுக்கொடுக்கின்றனர். யோகேந்திர பாங்கர் மட்டுமல்லாமல், உள்ளூரில் வசிக்கும் சிறுமிகளும் பாட்டிகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுக்கின்றனர். கடந்த சில மாதங்களாக தனது கிராமத்தில் கிடைக்கும் பழைய செய்தித்தாள்கள், சாக்லேட் கவர்கள், துண்டுச்சீட்டுகள் என பலவற்றைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டு வருகிறார் கங்குபாய். அப்படிச் சேகரித்ததில் இருக்கும் சொற்களைப் படிப்பதுதான் அவரது முக்கியப் பொழுதுபோக்கு. ஏதாவது சொற்கள் புரியவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் பாட்டியிடம் உதவி கேட்கிறார். அந்தப் பாட்டியும் கங்குபாய்க்கு அந்த சொற்களைப் புரியும்படி சொல்லிக்கொடுக்கிறார்.
இப்போது கங்குபாயின் வயது 65. சமீப நாட்களாகத்தான் வாழ்க்கையிலே முதல்முறையாக படிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆம்; பாட்டிகளுக்கான பள்ளியில்தான் எழுதப், படிக்கக் கற்றுக்கொண்டார், கங்குபாய். சில வருடங்களுக்கு முன்பு கங்குபாயின் கணவர் இறந்துவிட்டதால், அவர் தனியாக வாழ்ந்து வருகிறார்.
பாட்டிகளுக்கான பள்ளி அவரது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார். அதாவது, சில மணி நேரங்கள் தன் வயதுடைய சக பாட்டிகளைச் சந்தித்து, உரையாடவும், புதிய நட்புகளை உருவாக்கவும் இந்தப்பள்ளி உதவி செய்வதாகச் சொல்கிறார் கங்குபாய். பாட்டிகளுக்கான பள்ளி கற்றுக்கொடுக்கும் இடமாக மட்டுமல்லாமல், தனிமையிலிருந்து மீட்டெடுக்கும் இல்லமாகவும் இருக்கிறது. ‘‘இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு ஸ்கூலுக்குப் போவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கு. வாழ்க்கையில் ஒருமுறையாவது ஸ்கூலுக்குச் சென்று பாடம் படிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. இப்போது என்னால் படிக்க முடிகிறது...’’ என்று மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் கங்குபாய்.
கங்குபாய் மாதிரி இந்தப் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளும் வாழ்க்கையில் ஒருமுறை கூட பள்ளிக்கூடப் பக்கம் கூட சென்றதில்லை. சிறு வயதில் கல்வி மறுக்கப்பட்ட இவர்கள் எல்லோருமே பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘‘நாங்கள் எல்லோருமே மிகவும் ஏழைகள். என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து 8 பெண் குழந்தைகள். யாருமே ஸ்கூலுக்குப் போனதில்லை. பணக்கார வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதைப் பார்த்து நாங்கள் ஏங்கியிருக்கிறோம். பத்து வயதிலேயே கூலி வேலைக்குச் சென்றுவிட்டோம். எனக்கு எப்போதுமே ஸ்கூலுக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றும். வீட்டில் சொன்னால் அப்பாவிடம் அடி கிடைக்கும். ‘நீ ஸ்கூலுக்குப் போய்விட்டால் கிணத்திலிருந்து யார் தண்ணி கொண்டு வருவார்கள், துணியை யார் துவைப்பார்கள்’ என்று திட்டுவிழும்...’’ என்கிற சீத்தலுக்கு வயது 90. இவர்தான் பாட்டிகளுக்கான பள்ளியில் மூத்த மாணவி.
பேரனும், பேத்தியும் பள்ளிக்குப் போவதைப் பார்த்து இவருக்கும் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது என்கிறார்.
‘‘ஒவ்வொரு முறையும் வங்கிக்குச் செல்லும்போது கைநாட்டு வைக்க வேண்டும் என்று ஒருவித அவமானத்தை உணர்வேன். கையெழுத்து போடுவது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த ஸ்கூலில்தான் கற்றுக்கொண்டேன்.
ஒருவேளை குழந்தையாக இருந்தபோதே படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், நான் ஒரு டாக்டராகக் கூட ஆகியிருப்பேன்...’’ என்கிறார் ரமாபாய். இப்போது அழகாக கையெழுத்துப் போடுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் பெயர்களையும் சரியாக எழுதிக் காட்டுகிறார். ‘‘கடந்த 2015ம் வருடம் எங்கள் கிராமத்தில் சிவாஜி திருவிழாவைக் கொண்டாடினார்கள். அப்போது பக்தி சம்பந்தப்பட்ட புத்தகங்களைச் சிலர் படித்தார்கள். அந்த விழாவுக்கு வந்திருந்த சில பாட்டிகள், நாங்களும் அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆசைப்படுகிறோம். ஆனால், எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர்.
அவர்கள் அப்படிச் சொன்னதும் எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அந்தப் பாட்டிகளுக்கு எழுதப் படிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் தான் இந்தப் பள்ளியை உருவாக்கினேன்...’’ என்கிறார் யோகேந்திர பாங்கர், ஓர் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். அவர் பணிபுரியும் கிராமத்தில் தூய்மையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியைக் கொண்டு வந்தவர் பாங்கர்தான்.
த.சக்திவேல்
|