அய்யா... கடலைக் காணோம்யா..!



சமீபமாக கடல் உள்வாங்குவதும், பின்னர் வெளிவருவதும் நாம் அடிக்கடி பார்த்துவரும் செய்தி. ஆனால், கடல் சுருங்கிக் கொண்டே போவது பற்றி கேள்விப்பட்டிருப்பமோ? 

உலகின் மிகப்பெரிய ஏரி என அழைக்கப்படும் காஸ்பியன் கடல் இப்போது அந்தப் பிரச்னையைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே ஆரல் கடல் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி இப்போது காணாமல் போகும் நிலையில் இருக்கிறது.இதே நிலை காஸ்பியன் கடலுக்கும் வந்துவிடுமோ என அச்சத்தில் இருக்கின்றனர் அதனைச் சுற்றி வசிக்கும் கோடிக்
கணக்கான மக்கள்.   

காஸ்பியன் கடல்

உலகில் நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல் என்றால் அது காஸ்பியன் கடல்தான். அதாவது இது மற்ற எந்த கடல்களுடனும் கலக்காது. இதை பெரிய ஏரி என அழைத்தாலும் தண்ணீர் உவர்ப்பாக இருப்பதால் பொதுவாக கடல் என்றே சொல்லப்படுகிறது. இதனைச் சுற்றி அஜர்பைஜான், ஈரான், ரஷ்யா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. 
இதன் கடற்கரை நீளம் மட்டும் 6,819 கிமீ கொண்டது. ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கிறது இந்தக் கடல். அப்படியான கடல் ஒருகாலத்தில் ஃபிளமிங்கோக்கள், ஸ்டர்ஜன் மீன்கள் மற்றும் லட்சக்கணக்கான கடல்நாய்கள் ஆகியவற்றின் புகலிடமாக விளங்கின.

ஆனால், இன்று சுருங்கிக்கொண்டே வருவதால் பல இடங்கள் தரிசாக மாறி வருகின்றன. சில இடங்களில் கடல் 50 கிமீ-க்கும் மேல் உள்வாங்கியுள்ளது. இதனால், ஈரநிலங்கள் எல்லாம் பாலைவனங்களாக உள்ளன. கடந்த 2022ம் ஆண்டு 2,500க்கும் மேற்பட்ட கடல் நாய்கள் ரஷ்யாவுக்கு உட்பட்ட காஸ்பியன் கடல் பகுதியில் இறந்துகிடந்தன. அப்போது இந்தச் செய்தி சுற்றுச்சூழலாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. 

அதுமட்டுமில்லாமல், காஸ்பியன் கடல் பல்வேறு இயற்கை வளங்கள் நிறைந்தது. குறிப்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்திக்கான மையமாகத்திகழ்கிறது. தவிர, மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து எல்லாம் உண்டு. இவற்றில் மேற்சொன்ன ஐந்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. 

அதனால் உலகளாவிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் இருக்கிறது. இதுதவிர, இந்த வறண்ட பிராந்தியத்தின் காலநிலையை ஒழுங்குபடுத்துவதும் காஸ்பியன் கடல்தான். இது மத்திய ஆசியாவுக்கு மழை மற்றும் ஈரப்பதத்தை வழங்குகிறது. ஆனால், இப்போது சிக்கலில் உள்ளது. 

இதற்குக் காரணங்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று மனித தவறுகளால் ஏற்பட்டவை. மற்றொன்று இயற்கையால் நிகழ்ந்தவை. முதலில் மனித தவறுகளில் அணை கட்டுதல், அதிகப்படியான எண்ணெய் வளங்களைத் தோண்டியெடுத்தல், மாசுப்படுத்துதல் ஆகியவை உள்ளன. இந்தத் தவறுகள் காலநிலை மாற்றத்தை உருவாக்கி கடல் சுருங்குவதைத் தூண்டுகின்றன. 

பொதுவாகக் காலநிலை மாற்றம் உலக அளவில் கடல் மட்டங்களை உயர்த்துவதாகப் படித்திருப்போம். ஆனால், நிலத்தால் சூழப்பட்ட காஸ்பியன் போன்ற கடல்கள் மற்றும் ஏரிகளுக்கு அது பொருந்தாது. ஏனெனில், இதுபோன்ற நிலத்தால் சூழப்பட்ட கடல்கள் அல்லது ஏரிகள் எல்லாம் நதிகளில் இருந்து பாயும் நீர், மழைப்பொழிவு மற்றும் ஆவியாதல் மூலம் வெளியேறும் நீர் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு நுட்பமான சமநிலையை நம்பியே உள்ளன.

அதாவது இவை மூன்றும் சமமாக நடப்பதைப் பொறுத்து இதுபோன்ற நிலத்தால் சூழப்பட்ட கடல்கள் அல்லது ஏரிகள் வளத்துடன் இருக்கும். ஆனால், உலகம் வெப்பமயமாதலில் இந்தச் சமநிலை மாறி வருவதால் இதுபோன்ற ஏரிகள் அல்லது கடல்கள் சுருங்கி வருகின்றன. காஸ்பியன் கடலில் 130 ஆறுகள் கலக்கின்றன. இதில் சுமார் 80 சதவீத நீர் ஒரே ஒரு நதியிலிருந்து மட்டுமே வருகிறது. அது ஐரோப்பாவின் மிக நீளமான வோல்கா நதி. இது மத்திய மற்றும் தெற்கு ரஷ்யா வழியாகச் செல்கிறது. 

ஆனால், ரஷ்யா இதில் 40 அணைகளைக் கட்டியுள்ளது. மேலும் 18 அணைகள் உருவாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. அடுத்ததாக ரஷ்யா, கஜகஸ்தான் வழியாக பாயும் யூரல் நதி. இதிலும் அணைகள் கட்டப்பட்டுள்ளன. இவை காஸ்பியன் கடலுக்குச் செல்லும் நீரின் ஓட்டத்தைக் குறைக்கின்றன.இதற்கிடையே காலநிலை மாற்றமும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. குறிப்பாக அதிகப்படியான வெப்பத்தால் ஆவியாதலை அதிகரிக்கிறது. அத்துடன் ஒழுங்கற்ற மழைப்பொழிவை உண்டாக்குகிறது.

ஒருபக்கம் நதிகளின் வழியாக வரும் நீர்வரத்து குறைந்துபோனதும், மறுபக்கம் காலநிலை மாற்றத்தால் ஆவியாதல் அதிகரித்ததும் இன்று காஸ்பியன் கடலை சுருங்க வைத்துள்ளன. 
இப்படி கடல் சுருங்குவதால் அதன் உப்புத்தன்மை உயர்ந்து அங்குள்ள தாவரங்கள், விலங்கினங்களுக்கு ஒவ்வாத சூழலை உருவாக்கியுள்ளன. இதனால் அங்கே தாவரங்களும், விலங்கினங்களும் அழிந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கடல் சுருங்குதலுக்கு நாம் உதாரணமாக இதன் அருகேயே இருந்த ஆரல் கடலினைக் குறிப்பிடலாம். 

காணாமல் போன ஆரல் கடல்

கஜகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் அமைந்துள்ள கடல் இது. ஒருகாலத்தில் உலகின் நான்காவது பெரிய ஏரியாக விளங்கியது.இதன் நீளம் மட்டும் வடக்கு, தெற்காக 435 கிலோமீட்டர் கொண்டது. கிழக்கு, மேற்கான அகலம் 290 கிலோமீட்டர். மொத்தமாக 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது.  
இந்தக் கடலில் மத்திய ஆசியாவின் இரண்டு பெரிய நதிகளான அமு தார்யாவும், சிர் தார்யாவும் கலந்தன. அதாவது அமு தார்யா நதி ஆப்கானிஸ்தான் பகுதியில் உருவாகி, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் வழியாக ஆரல் கடலில் கலந்தது.

இதேபோல் சிர் தார்யா நதி, கிர்கிஸ்தான் பகுதியில் உருவாகி உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் வழியாக ஆரல் கடலில் சேர்ந்தது. இதனால் ஆரல் கடல் செழிப்புடன் இருந்தது. இங்கும் மீன்பிடித்தல், கப்பல் போக்குவரத்து எல்லாம் இருந்தன. 1847ல் சோவியத் ரஷ்யா தனது கடற்படைத் தளத்தை இந்தக் கடலில் நிறுவியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியான கடல் 1960களில் அழிவைச் சந்தித்தது. அப்போது ஆப்கானிஸ்தானைத் தவிர மற்ற நாடுகள் சோவியத் யூனியனாக இருந்தன.

இந்நேரம் ரஷ்யா பருத்தி உற்பத்தியில் மிகுந்த கவனம் செலுத்தியது. இதற்கு மத்திய ஆசியா பகுதியைத் தேர்ந்தெடுத்தது. இதனுடன் மற்ற விவசாயத்தையும் அதிகரித்தது. இதற்காக அமு தார்யா மற்றும் சிர் தார்யா நதிகளை பாசனத்துக்காகத் திருப்பிவிட்டது.இதனால், ஆரல் கடலுக்குச் செல்லும் நதி நீர் முற்றிலும் குறைந்துபோனது. கடலின் உப்புத்தன்மை அதிகரிக்க அதனைச் சார்ந்த தாவரங்களும், விலங்கினங்களும் அழியத் தொடங்கின. கடலும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்க ஆரம்பித்தது. அதாவது வற்றத் தொடங்கியது.

ஒருகட்டத்தில் கடலின் பரப்பளவு 60 சதவீதம் சுருங்கியது. இதற்கிடையே 1990களில் சோவியத் யூனியன் உடைந்து பல நாடுகளாகியது. பின்னர் ஆரல் கடல் சுருங்கச் சுருங்க வடக்குப் பகுதி, தெற்குப் பகுதி என இரண்டாகப் பிரிந்தது. இது பின்னர் மேலும் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி என நான்கானது. 

1989ம் ஆண்டு தெற்குப் பகுதியில் அதிகப்பட்ச ஆழம் 335 அடியாக இருந்தது. ஆனால், இது 2005ல் 131 அடியாகக் குறைந்தது. வடக்குப் பகுதியிலோ 2008ம் ஆண்டு 138 அடியாக ஆனது. 
பின்னர் இதனை தக்கவைக்க சுற்றியிருந்த நாடுகள் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டன. நதிகளை மீண்டும் கடலுக்குள் போகும்படியான அமைப்பை உருவாக்கின. மாசுபடுத்தும் நடவடிக்கையை குறைக்க முயற்சிகள் எடுத்தன.

இதில் கஜகஸ்தான் வடக்கு ஆரல் கடலினை ஓரளவு தக்கவைத்தது. உஸ்பெகிஸ்தானிற்குள் வரும் தெற்குப் பகுதி தொடர்ந்து அழிந்தபடியே உள்ளது. கிழக்குப் பகுதி முற்றிலும் வற்றிவிட்டது. இன்று கடலின் 90 சதவீத பகுதி காணாமல் போய்விட்டது. 

கடல் வற்றுமா எனச் சிறுவயதில் அறியாமையாகப் பலரும் கேள்வி கேட்டிருப்போம். ஆனால், கடல் வற்றும் என்பதற்கு ஆரல் கடலே சாட்சி! நடிகர் வடிவேல் ஒருபடத்தில் ‘அய்யா... என் கிணத்தைக் காணோம்ய்யா...’ எனப் போலீஸில் புகார் கொடுப்பார். அதுபோல் புகார் கொடுக்கும் அளவுக்கு ஆரல் கடல் காணாமல் போய்விட்டது.  

இதேபோல் ஒருநிலை காஸ்பியன் கடலுக்கும் வந்துவிடக்கூடாது என்பதால் தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இதன் ஒருபகுதியாக காஸ்பியன் கடலினை பாதுகாப்பதற்கான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹரிகுகன்