படம் பார்க்கறப்ப இது ஏன் தோணலை?
நீதி தேவதை பெற்றெடுத்த நீதிமான் விஜயகுமார் பஞ்சாயத்துக்குப் போகும் ‘நாட்டாமை’ க்ளிப் ஒன்று முகநூல் ஃபீடில் வந்தது. இரண்டு நிமிட க்ளிப்புக்குள் ஏகப்பட்ட கேள்விகள்:
 1. நாட்டாமை போகிற வழியில் ஊர் ஜனமெல்லாம் வீதியோரமாக நின்று நாட்டாமையை கும்பிடுகிறது. ஏன்டா உங்களுக்கு வேற வேல கூந்தல் இல்லையாடா? இந்தாள் வரும்போதும் போகும்போதும் நின்னு கையெடுத்து கும்பிடாம போனா சோறுண்ண முடியாதா?
2. நீதிமான் வெத்தலை துப்பும் போது அந்த எச்சிலைப் பிடிக்க என்றே சொம்போடு ஒரு ஆளை நியமித்திருக்கிறார்.
உன் எச்சிலை துப்ப ஒண்ணு சொம்ப நீ தூக்கிட்டு போ... இல்ல அப்படி ஒரு ஓரமா மரத்தடிலயோ வயக்காட்லயோ துப்பு. எவ்ளோ அதுப்பு இருந்தா இது ஒரு வேலைன்னு இதுக்கு ஒரு ஆள சம்பளத்துக்கு போட்டு வேலைக்கு வச்சிருப்ப?
3.நாட்டாமை அரை இஞ்ச் தடிமனுக்கு செருப்பு போட்டுதான் நடக்கிறார். இருந்தாலும் சாரட்டு வண்டியில் கால் வைத்து ஏறும் படியை சரத்குமார் தன் தோளில் இருக்கும் துண்டால் துடைத்து துண்டை மீண்டும் தன் தோளில் போட்டுக் கொள்கிறார்.
அப்படியே செருப்பு வைக்கிற இடத்தை துடைத்த அந்த துண்டால் அடுத்து உன் முகத் தை துடைத்துக் கொள்வ இல்ல?
4. பலாத்காரம் செஞ்சதை பார்த்த (?!) சாட்சி இருக்கான்னு கேட்பதே கேனத்தனமானது. அதையும் மீறி ரெண்டு பேரு நான் பார்த்தேன்னு முன்ன வந்தா, அவங்க அந்த பொண்ணுக்கு தூரத்து சொந்தக்காரங்க சாட்சி செல்லாதுன்னு லெஃப்ட் ஹாண்ட்ல ஒதுக்கிடுற சரி.
அதுக்கு அப்புறம் சரியா பேசக் கூட தெரியாத ஒரு சின்ன பையன் சாட்சி சொல்றத ஏத்துக்கற. சின்னப் பையன்னா அவன ஈஸியா மானிபுலேட் செய்ய முடியும்கிற அடிப்படை அறிவு கூட இல்லாம அது ஒரு சாட்சின்னு ஏத்துக்கிட்டு உணர்ச்சி வசப்பட்டு தீர்ப்பு சொல்றதுக்கு பேரு பஞ்சாயத்தாடா?
5. தீர்ப்பாவது ஒழுங்கா இருக்கான்னு பாத்தா அது அதை விட கேவலமா இருக்கு. ‘தன் வம்சம் தொடக் கூட தகுதியில்லாத சாதிக்கார பொண்ண என் வீட்டுல மருமவளா ஏத்துக்க முடியாது’ன்றான் வில்லனோட அப்பன்.
அவள கெடுத்த வில்லனுக்கும் அவள கட்றதுல சம்மதம் இல்லை. அவ்ளோ ஏன் அந்த பொண்ணு ஆசீர்வாதம் வாங்க நாட்டாமை கால்ல விழும் போது நாட்டாமையே அவள தொடாம தன் சாதிப் பெருமைக்கு பங்கம் வராமத்தான் தன் கழுத்து சங்கிலிய அவ முந்தானைல பிச்சை மாதிரிதான் போடறார். வலுக்கட்டாயமா வில்லன மிரட்டி அவ கழுத்துல ஒரு தாலிய கட்ட வைச்சிட்டா அதுக்கு பேரு உன்னதமான தீர்ப்பா? அப்புறம் அவ வாழப்போற நரகத்துக்கு பேரு வாழ்க்கையா? அதுக்கு பதிலா 500 ஏக்கர் நிலத்த வாங்கி அவகிட்ட கொடுத்திருந்தா அவ மிச்ச காலத்தை சுதந்திரமா நிம்மதியா கௌரவமா வாழ்ந்திருக்க மாட்டாளா?
6. இதெல்லாம் விட முக்கியமான கேள்வி நாட்டாமை பஞ்சாயத்துக்கு புறப்படும் போது மருமவ குஷ்பு வழியனுப்ப வருவார். அப்போது மவன் சரத்தை பார்த்து, ‘எலே சம்முவம்... என்ற மருமவ மகாலட்சுமியாக்கும். இனிம தினம் கிளம்பும்போது அவ கையால ஒரு சொம்பு தண்ணி குடிச்சிட்டு போ’ன்னு சொல்லிட்டு பஞ்சாயத்துக்கு போவார். ஆனால், பஞ்சாயத்து முடியும்போது சுடப்பட்டு மண்டையைப் போட்டு விடுவார்.
ஆக இனி சம்முவம் லேட் நாட்டாமை பேச்சை கேட்டு குஷ்புகிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டு கிளம்பனுமா கூடாதா?
- இதோடு அந்த க்ளிப் முடிந்துவிட்டது. இனி அடுத்த க்ளிப் வந்தால்தான் அடுத்த செட் கேள்விகள்.
முகமூடி
|